Press "Enter" to skip to content

மலேசியா மகாதீர் – அன்வார் சந்திப்பு: ஆட்சி மாற்றம் ஏற்படுமா? நடப்பது என்ன?

சதீஷ் பார்த்திபன்
கோலாலம்பூர், பிபிசி தமிழுக்காக

சுதந்திர மலேசியாவின் வரலாற்றில் முதன் முறையாக கடந்த 2018ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. இதையடுத்து ஆட்சிப் பொறுப்பேற்றவர்கள் புதிய மலேசியாவை உருவாக்குவோம் என்றனர்.

ஆனால் அண்மைய நிகழ்வுகளைக் காணும்போது அங்கு புதிய ஆட்சியை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தான் தொடங்கி உள்ளனவோ? எனும் சந்தேகம் எழுவதாக மலேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நாளை மலேசியாவின் மாமன்னரை (அகோங்) நேரில் சந்திக்க பிரதமர் மகாதீர் நேரம் கேட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. எதற்காக இந்தச் சந்திப்பு என்பது குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை. எனினும் புதிய ஆட்சி அமைப்பது குறித்து மாமன்னரிடம் விளக்கம் அளிக்கவே பிரதமர் மகாதீர் நேரம் கேட்டிருப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆங்காங்கே நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்கள்

பிப்ரவரி 23 ஞாயிற்றுக்கிழமை மலேசிய நேரப்படி மாலை 3.30 மணியளவில் இந்தக் கட்டுரை தயாராகும் வேளையில்… மலேசியாவின் ஆளும் பக்காத்தான் ஹராப்பானின் உறுப்புக் கட்சிகள், எதிரணியான தேசிய முன்னணியின் (பாரிசான் நேஷனல்) உறுப்புக் கட்சிகள், அன்வாருக்கு எதிராக மாறிவிட்டதாகக் கருதப்படும், அவரது பிகேஆர் கட்சியின் துணைத் தலைவரும், மலேசியப் பொருளாதார அமைச்சருமான அஸ்மின் அலி தலைமையில் அதிருப்தியாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் ஆங்காங்கே தீவிர ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பிரதமர் மகாதீர் மொஹம்மத் தலைமையிலான ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாக உள்ளது. இந்நிலையில் பிரதமர் பொறுப்பை அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஒரு பிரிவினர் வலியுறுத்தும் நிலையில், ஆளுங்கூட்டணியின் உறுப்புக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தின் முடிவில், பிரதமர் மகாதீர் எப்போது அன்வாரிடம் அரசு அதிகாரத்தைப் ஒப்படைப்பார் என்பதற்கான காலம் வரையறுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஒருவேளை மலேசியாவில் ஏபெக் (APEC) மாநாடு நவம்பரில் நடந்து முடிந்த பிறகுதான் மகாதீர் பதவி விலகுவார் எனில், அதுவரை அன்வார் இப்ராகிம் துணைப் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் சிலர் வலியுறுத்தினர்.

ஆனால் இவை இரண்டுமே நடக்கவில்லை. மாறாக, பிரதமர் பதவியில் இருந்து எப்போது விலகுவது, எத்தகைய சூழ்நிலையில் விலகுவது என்பது குறித்து மகாதீரே முடிவெடுப்பார் என கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதே வேளையில் பிரதமர் மகாதீர் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெறுவதை தாம் விரும்பவில்லை என அன்வார் இப்ராகிம் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மகாதீர் பதவி விலகும் வரை தாம் பொறுமை காக்கப் போவதாகவும், அதிகாரத்தை ஒப்படைப்பது தொடர்பில் தமக்கும் பிரதமருக்கும் யாரும் நெருக்கடி அளிக்கக் கூடாது என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.

மகாதீர் தலைமையேற்ற கூட்டத்தில் காரசார விவாதம்

இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் அதிகாரத்தை ஒப்படைப்பது தொடர்பாக கூட்டணிக் கட்சிகளின் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் இடையே கடும் வாக்குவாதம் மூண்டதாக மற்றொரு ஊடகம் தெரிவித்துள்ளது.

மகாதீர் விரைவில் பதவி விலக வேண்டும் என்று ஒருதரப்பு வலியுறுத்திய நிலையில், நாள் குறித்து வைத்து பதவி விலகச் சொல்வதெல்லாம் சரியல்ல என்று மற்றொரு தரப்பு கோபம் காட்டியதாகக் கூறப்படுகிறது.

ஒருகட்டத்தில், பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு மகாதீருக்கு நெருக்கடி கொடுத்தால் கூட்டணியை விட்டு விலகுவோம் என அவரது தலைமையிலான கட்சியின் நிர்வாகிகள் அதிரடியாக தெரிவித்தனர் என்றும், இந்த எச்சரிக்கைக்குப் பிறகே சூடான, காரசார விவாதங்கள் முடிவுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது என ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் வேறு வழியின்றி தாம் மேலும் சில மாதங்கள் காத்திருப்பது என அன்வார் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் கூட்டணிக் கட்சித் தலைவர்களோ ஆலோசனைக் கூட்டத்தில் யாரும் கொந்தளிப்பாகப் பேசவில்லை என்றும், இது தொடர்பான ஊடகத் தகவல்கள் பல வெறும் யூகச்செய்திகள் என்றும் மறுத்துள்ளனர்.

மகாதீர், அன்வார் இடையேயான ஒப்பந்தம் என்ன?

பொதுத் தேர்தலுக்கு முன்பு, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றி பெற்றால் தாம் குறிப்பிட்ட காலம் வரை பிரதமர் பதவியை வகிக்கப் போவதாகவும், நாட்டை மீ்ண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திருப்பிய பின்னர் அன்வார் இப்ராகிமிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கப் போவதாகவும் மகாதீர் அறிவித்திருந்தார். அந்தக் கூட்டணியின் சார்பில் இது தேர்தல் வாக்குறுதியாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை தாம் ஒருபோதும் மீற வாய்ப்பில்லை என்று பலமுறை கூறிவிட்டார் மகாதீர்.

இதைச் சுட்டிக் காட்டும் அன்வார் ஆதரவாளர்கள், புதிய ஆட்சி அமைத்து எதிர்வரும் மே மாதம் 2 ஆண்டுகள் பூர்த்தியாகும் என்பதால், அதற்குள் பிரதமர் மகாதர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்துகின்றனர். ஆனால் ஏபெக் மாநாட்டுக்குப் பிறகுதான் தம்மால் பதவி விலக இயலும் என அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இதனால் அன்வார் இப்ராகிம் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். 22 ஆண்டுகளுக்கு முன்பு அவர் கைது செய்யப்பட்டபோது அவரை விடுவிக்க வலியுறுத்தி ‘மறுமலர்ச்சி’ (Reformasi) என்ற இயக்கம் தொடங்கப்பட்டு, மாபெரும் வீதிப் பேரணிகள் நடைபெற்றது. தற்போது மீண்டும் அன்வாருக்காக வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்த தயார் என ஆதரவாளர்கள் அறிவித்துள்ளதாக மலேசிய ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

மாமன்னரை எதற்காக சந்திக்கிறார் பிரதமர் மகாதீர்?

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் தான் மலேசிய மாமன்னரை நாளை சந்திக்க உள்ளார் பிரதமர் மகாதீர். இது புதிய ஆட்சியை அமைப்பதற்கான சந்திப்பு அல்ல என்றும், தமது தலைமையிலான அமைச்சரவையில் பெரியளவில் மாற்றம் செய்ய மகாதீர் விரும்புவதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.

அதேசமயம், இன்று இரவுக்குள் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாவதற்கான வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை என விவரமறிந்த தரப்பில் இருந்து தங்களுக்குத் தெரியவந்துள்ளதாக மலேசிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மலேசியாவின் மத்திய அரசில் மாற்றங்கள் ஏற்பட்டால் அது மாநில அரசுகளிலும் பல மாற்றங்களுக்கு வழிவகுக்கக்கூடும். மேலும், மலாய் மக்களை பெரும்பான்மை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள கட்சிகள் புதிய ஆட்சியில் பங்கேற்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

பரபரப்பு நிலவும் சூழ்நிலையில் அடுத்து என்ன நடக்கும்? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் பெரும்பாலும், “தெரியவில்லை… சற்று பொறுங்கள் விரைவில் தெரியவரும்…” என்பதையே வெவ்வேறு வார்த்தைகளில், தொனிகளில் தங்கள் பதிலாக அளிக்கின்றனர்.

இதற்கிடையே இன்று மாலை அன்வார் இப்ராகிம் வீட்டிலும் ஆலோசனைக் கூட்டம் நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கூட்டங்களின் முடிவை தெரிந்து கொள்வதற்கு முன்பே, ஆட்சி மாற்றம், புதிய ஆட்சி, நாடாளுமன்றம் கலைக்கப்படும், மீண்டும் தேர்தல் வரும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆருடங்களைப் பலரும் வெளியிட்டு வருகின்றனர்.

பல சமயங்களில் அரசியல் களம் எதிர்பாராத முடிவுகளை அளிக்கும். 2018 பொதுத்தேர்தல் களமும் அப்படியொரு ஆச்சரியகரமான முடிவையே அளித்தது. இந்நிலையில் நடப்பு உண்மை நிலவரத்தை அறிய மலேசிய மக்களும் காத்திருக்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »