Press "Enter" to skip to content

மலேசியா: மகாதீர் v/s அன்வார் – அடுத்தடுத்த சந்திப்புகள், நடவடிக்கைகளால் அரசியல் களத்தில் பரபரப்பு

சதீஷ் பார்த்திபன்
கோலாலம்பூர், பிபிசி தமிழுக்காக

தமது கூட்டாளிகள் எனக் கருதியவர்களே தமக்கு துரோகம் இழைத்துவிட்டதாக மலேசியாவின் அடுத்த பிரதமர் எனக் கருதப்பட்ட அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

அங்கு புதிய ஆட்சியை அமைப்பது தொடர்பாக நிகழ்ந்து வரும் புதிய திருப்பங்கள் தங்கள் தரப்புக்கு அதிர்ச்சி அளித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலேசிய அரசியல் களத்தில் திடீர் திருப்பமாக எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து புதிய ஆட்சியை அமைக்க பிரதமர் மகாதீர் மொஹம்மத் தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நேற்று காலை தகவல் வெளியானது. இதையடுத்து நிகழ்ந்த சம்பவங்களால் அரசியல் களத்தில் பரபரப்பு நிலவுகிறது.

நாட்டின் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்கும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த அன்வார் தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தமது சொந்தக் கட்சியை சேர்ந்த சிலரும், பிரதமர் மகாதீர் சார்ந்துள்ள பெர்சாத்து கட்சியும் தமக்கு துரோகம் இழைத்துள்ளதாக அவர் சாடியுள்ளார்.

“புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெறுவது தெரியும். திங்கட்கிழமைக்குள் புதிய அமைச்சரவை அமையக்கூடும்.

“இது நிச்சயமாக அதிர்ச்சி அளிக்கிறது. ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பதாக அளிக்ககப்பட்ட வாக்குறுதி உள்ளது. அதையும் மீறி துரோகம் இழைக்கப்பட்டுள்ளது,” என்று அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி சிதைய யார் காரணம்?

அன்வாரின் பிகேஆர் கட்சியில் துணைத் தலைவராக இருந்த அஸ்மின் அலிதான் இந்த ஆட்சி மாற்றத்துக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்ததாக அன்வார் ஆதரவாளர்கள் தொடர்ந்து கூறி வந்தனர்.

ஆட்சிக்காலம் முடியும் வரை மகாதீர் பிரதமராக நீடிக்க வேண்டும் என்றும், அதுவே நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும் என்றும் பல மாதங்களுக்கு முன்பே வெளிப்படையாகக் கருத்துரைத்தார் மலேசியாவின் நடப்பு பொருளாதார விவகார அமைச்சருமான அஸ்மின் அலி.

ஆளும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சி அமைந்தது முதல் பிகேஆர் கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அன்வாரை விட்டு விலகியே இருந்த அஸ்மின் அலி, சில மாதங்களுக்கு முன்பு எதிர்க்கட்சியான அம்னோவைச் சேர்ந்த எம்பிக்கள் சிலரை ரகசியமாக சந்தித்ததாக ஒரு தகவல் வெளியானது.

அப்போதே பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை உடைப்பதற்கான ஏற்பாடுகளை அவர் துவங்கிவிட்டதாக அன்வார் ஆதரவாளர்கள் குரல் எழுப்பினர். அப்படியொரு எண்ணம் தமக்கு இல்லை என அவர் மறுத்தார்.

எனினும் அன்வார் ஆதரவாளர்கள் சொன்னபடியும் பயந்தபடியும் தான் அனைத்தும் நடந்தேறியுள்ளன என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

பிகேஆர் கட்சியிலிருந்து கணிசமான எண்ணிக்கையிலான எம்பிக்களுடன் அஸ்மின் அலி கட்சி தாவி, பிரதமர் மகாதீருக்கு ஆதரவளித்திருப்பதாகத் தெரிகிறது. இதேபோல் எதிர்க்கட்சியான அம்னோவின் முக்கிய தலைவர்களையும் அவ்வப்போது தொடர்புகொண்டு பேசி, புதிய ஆட்சி அமைய அவர் தன் பங்கை ஆற்றியிருப்பதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.

பிரார்த்தனைகூட்டத்தில் பங்கேற்ற அன்வார்

புதிய ஆட்சியை அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, அன்வார் இப்ராஹிம் ஆதரவாளர்களோ நேற்று மாலை அவரது வீட்டில் நடைபெற்ற வாராந்திர பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றில் பங்கேற்றிருந்தனர்.

அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள இடைஞ்சல்கள் காரணமாக பிரார்த்தனை பாதிக்கப்படக்கூடாது என்றும், இது நாட்டின் 8ஆவது பிரதமராக தாம் பொறுப்பேற்பதற்காக நடத்தப்படும் பிரார்த்தனை அல்ல என்றும் ஆதரவாளர்களிடம் பேசிய அன்வார் குறிப்பிட்டார்.

இந்தப் பிரார்த்தனைக் கூட்டம் இணையத்தில் நேரலையாக ஒளிபரப்பானது. எந்தவித உணர்வையும் வெளிக்காட்டாமல் அமைதியாகக் காணப்பட்ட அன்வார், தொடர்ந்து அடிக்கடி தனது கைபேசியை மட்டும் பார்த்துக்கொண்டே இருந்ததாக ஊடகச்செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

அடுத்தடுத்த சந்திப்புகள், நடவடிக்கைகளால் அரசியல் களத்தில் பரபரப்பு:

முன்னதாக புதிய ஆட்சிக்கான நடவடிக்கைகள் நேற்று மதியத்துக்கும் மேல் திடீரென வேகம் பெற்றன. நேற்று காலை தமது பெர்சாத்து பூமி கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார் பிரதமர் மகாதீர். இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

நேற்று மாலை அதிரடித் திருப்பமாக தாம் பிரதமர் பதவியில் நீடிப்பதை விரும்பும் கட்சிகளின் தலைவர்களோடு சென்று மாமன்னரைச் சந்தித்தார் மகாதீர். இதனால் புதிய ஆட்சி அமைவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இதன் பின்னர் கோலாலம்பூரில் உள்ள நட்சத்திர தங்கு விடுதி ஒன்றில் மகாதீரை ஆதரிக்கும் கட்சிகளின் முக்கியப் பிரமுகர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அவர்களில் மலேசிய இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் விக்னேஸ்வரனும் ஒருவர்.

இதையடுத்து தேசிய முன்னணி தலைவர்களை அஸ்மின் அலி சந்தித்துப் பேசினார். இத்தகைய பரபரப்பான சந்திப்புகள், ஆலோசனைக் கூட்டங்கள் ஆகியவற்றை அடுத்து முக்கிய தலைவர்கள் மாமன்னரைச் சந்தித்ததால் புதிய அரசாங்கம் அமைப்பது குறித்த அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமை இரவுக்குள் வெளியாகும் என்று மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

எனினும் இரவு 11 மணி வரை இப்படிப்பட்ட அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இதனால் சந்திப்புகள் நிகழ்ந்த தனியார் தங்கு விடுதிக்கு வெளியே குழுமியிருந்த செய்தியாளர்கள் மெல்ல கலையத் தொடங்கினர்.

“பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் கதை முடிந்துவிட்டது”

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய இந்தியர் காங்கிரஸ் தலைவர் விக்னேஸ்வரன் அவர், பிகேஆர் கட்சியின் துணைத் தலைவரான அஸ்மின் அலி தமது ஆதரவாளர்களுடன் அக்கட்சியில் இருந்து விலகிவிட்டதாகவும், பிரதமர் மகாதீரின் பெர்சாத் பூமி கட்சி, ஆளும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியிலிருந்து விலகக் கூடும் என்றும் தெரிவித்தார்.

மஇகாவைப் பொறுத்தவரை தேசிய முன்னணி (பாரிசான் நேஷனல்) என்ன முடிவெடுக்கிறது அதைப் பின்பற்றுவோம் என்றும் விக்னேஸ்வரன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய அம்னோ கட்சியின் பொதுச்செயலர் அனுவார் மூசா ஆளும் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி இறந்து விட்டதாக வர்ணித்தார். மலேசியாவில் புதிய கூட்டணி ஆட்சி அமைக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஒருகாலத்தில் அம்னோவின் தேசியத் தலைவர் பதவியை வகித்தவர் மகாதீர் என்பதால் இன்று அவர் சார்ந்துள்ள பெர்சாத்து கட்சி அம்னோவுடன் இணைக்கப்படுமா? என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், இணைப்பு இருக்காது என்றும் கூட்டணி அமைக்கப்படும் என்றும் கூறினார்.

அன்வார் முதுகில் வலுவாகக் குத்திவிட்டனர்: பினாங்கு ராமசாமி கண்டனம்

நடப்பு மகாதீர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஜனநாயக செயல் கட்சியின் அவசரக் கூட்டம் கோலாலம்பூரில் இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் பெருந்தன்மையாக நடந்துகொண்ட அன்வார் முதுகில் சிலர் குத்திவிட்டதாக பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கான அன்வாரின் தலைமைத்துவத்துக்குத் தமது முழு ஆதரவும் உண்டு என அவர் கூறியுள்ளார்.

“ஏபெக் மாநாடு முடிந்த பிறகு பதவி விலகுகிறேன் என்ற மகாதீரின் கோரிக்கையை அன்வார் பெருந்தமையாக ஏற்றுக்கொண்டார். ஆனாலும் கொல்லைப்புறம் வழியாக ஆட்சி அமைப்பதற்காக இன்று அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது மிகப்பெரிய துரோகம். அன்வார் முதுகில் வலுவாகக் குத்தி விட்டனர். இன்று முதல் மலேசிய அரசியல் முன்பு போல் இருக்காது,” என்று பேராசிரியர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

“சட்டவிரோதமான, ஒழுக்கக் கேடான வகையில் ஒரு மாற்றுக் கூட்டணி அமைக்கப்படுவதை நாட்டு மக்கள் பார்க்க வேண்டி இருக்கலாம். அவ்வாறு நிகழ்ந்தால் கடந்த பொதுத்தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்புக்கு செய்யப்படும் துரோகமாகவே இம்முயற்சி அமையும்,” என்றார் ராமசாமி.

மகாதீருக்கு எத்தனை எம்பிக்களின் ஆதரவு உள்ளது?

மலேசிய நாடாளுமன்றத்தில் மொத்தம் 222 எம்பிக்கள் உள்ளனர். இதில் அன்வார் இப்ராகிம் தலைமையிலான பிகேஆர் கட்சி 50 இடங்களைப் பிடித்து முதலிடத்தில் உள்ளது. இக்கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள ஜனநாயக செயல் கட்சிக்கு 42 இடங்கள் உள்ளன. மகாதீரின் பெர்சாத் பூமி கட்சிக்கு 26 எம்பிக்கள் உள்ளனர். இந்நிலையில் மகாதீர் தரப்புக்கு 130க்கும் மேற்பட்ட எம்பிக்களின் ஆதரவு இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது மலேசிய மத்திய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 முழு அமைச்சர்களும் ஒரு துணை அமைச்சரும் இடம்பெற்றுள்ளனர். ஆட்சி மாற்றத்துக்குப் பின் இவர்களது நிலை என்னவாகும்? எனும் கேள்வி எழுந்துள்ளது.

இன்று மாமன்னரை சந்திக்கும் அன்வார் இப்ராஹிம்

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் மலேசிய மாமன்னரை இன்று அன்வார் இப்ராஹிமும் சந்திப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மதிய பொழுதுக்கும் மேல் இந்தச் சந்திப்பு நிகழும் எனத் தெரிகிறது.

ஒருபக்கம் புதிய ஆட்சி அமைக்க மகாதீர் தரப்பு முயற்சி மேற்கொண்டுள்ள நிலையில், அன்வாரும் மாமன்னரைச் சந்திக்கச் செல்வது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனினும் இது முன்கூட்டியே அனுமதி பெறப்பட்ட சந்திப்பு என்றும், தற்போதைய அரசியல் நிகழ்வுகளுக்கும் இந்தச் சந்திப்புக்கும் இடையே எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும் அன்வாருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்ததாக மலேசிய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

நள்ளிரவில் ஆலோசனை நடத்திய அன்வார்

நேற்று நள்ளிரவு வேளையில் ஜனநாயக செயல் கட்சி, அமானா கட்சித் தலைவர்களை அன்வார் சந்தித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. ரகசிய இடத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றதாகவும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாவகவும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

“அன்வார் தற்போது அமைதியாக உள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பக்காத்தான் ஹரப்பான் கூட்டணித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தின் போதுகூட மகாதீர் அவர் விரும்பும் வரை பிரதமர் பதவியில் நீடிக்க அன்வர் ஆதரவு தெரிவித்தார். எனவே, இந்த விஷயத்தில் பிரச்னை இருப்பதாகத் தெரியவில்லை.

“பிகேஆர் கட்சியிலிருந்து பல தலைவர்கள் விலகிவிட்டதாகக் கூறப்படுவது தவறு. நிறைய பேர் செல்லவில்லை. எனினும் இன்றிரவு சிலரது உண்மை முகம் தெரியவந்துள்ளது,” என்று அன்வாரின் அரசியல் செயலர் தெரிவித்துள்ளார்.

பரபரப்புகளுக்கு மத்தியில் அமைதி காத்த பிரதமர் மகாதீர்

நேற்று ஒரே நாளில் அரசியல் களத்தில் அதிரடித் திருப்பங்கள், சந்திப்புகள் தொடர்பாக ஊடகங்களில் இடைவிடாமல் செய்திகள் வெளியான வண்ணம் இருக்க, பிரதமர் மகாதீரோ ஊடகங்களுடன் பேசுவதை தவிர்த்தார்.

நேற்று தமது கட்சியினருடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு அவர் அங்கு காத்திருந்த செய்தியாளர்களை சந்திக்காமல் கிளம்பிச் சென்றார். மேலும், நேற்று மாமன்னரை சந்தித்த பிறகும் அவர் செய்தியாளர்களிடம் பேசவில்லை.

கடைசியாக அவர் செய்தியாளர்களிடம் பேசிய தருணங்களில், ஏபெக் மாநாடு முடிந்த பிறகு பதவி விலகப் போவதை உறுதி செய்திருந்தார். மேலும் எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

முன்னதாக நேற்றிரவு அவர் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. எனினும் அதற்கு வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டதால் செய்தியாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இப்படி மலேசிய அரசியல் களத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்துவரும் திருப்பங்களால் ஏற்பட்டுள்ள பரபரப்பும் கொந்தளிப்பும் அடங்குவதற்கு மேலும் சில நாட்களாகக்கூடும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »