Press "Enter" to skip to content

என் கருப்பையை அவர்கள் அகற்றிவிட்டார்கள் : தென்னாப்பிரிக்காவில் கட்டாய கருத்தடை சிகிச்சை

தன்னுடைய 17வது வயதில் பிரசவம் நடந்த போது, தன்னுடைய அனுமதி இல்லாமல் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துவிட்டதாகவும், 11 ஆண்டுகள் கழித்து இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பிய போதுதான் இதுபற்றி தெரிய வந்தது என்றும் தென்னாப்பிரிக்க பெண்மணி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

அரசு மருத்துவமனைகளில் ஒப்புதல் இல்லாமல் கருத்தடை சிகிச்சை செய்யப்பட்ட 48 பெண்களில் ஒருவர் போங்கிலே மிசிபி என்று, மக்கள் சமத்துவத்துக்கான ஆணையம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சட்டபூர்வ அமைப்பாக இருந்தாலும், நோயாளிகளின் கோப்புகள் “காணாமல் போனதால்” தங்களுடைய விசாரணைக்கு தடங்கல் ஏற்பட்டுள்ளது என்று இந்த ஆணையம் கூறியுள்ளது. மருத்துவமனை அலுவலர்கள் “ஒத்துழைக்காத போக்கை” கடைபிடிப்பதாக இந்த அமைப்பின் விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மக்கள் உரிமை குழுக்கள் இதுபற்றி பிரச்சினை எழுப்பியதை அடுத்து, ஆணையத்தின் விசாரணை அதிகாரிகள் 15 மருத்துவமனைகளுக்குச் சென்றுள்ளனர். இவற்றில் சில சம்பவங்கள் 2001ல் கூட நடந்துள்ளன.

இந்த அறிக்கை பற்றி தென்னாப்பிரிக்காவின் சுகாதாரத் துறை விரிவான பதில் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் இதுபற்றி விவாதிக்க ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு ஆணையத்தை அத் துறையின் அமைச்சர் ஜ்வெலி மிக்கிஜே கேட்டுக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமதி போங்கிலே மிசிபி தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து பிபிசியின் கிளாரே ஸ்பென்சரிடம் விவரித்தார்.

பிரசவத்துக்குப் பிறகு நான் எழுந்து கீழே பார்த்தவுடன், “என் வயிற்றில் எதற்கு பெரிய பேண்டேஜ் போடப்பட்டுள்ளது” என்று கேட்டேன்.

நான் அதுபற்றி அதிகம் விசாரிக்கவில்லை. அப்போது தான் மகள் பிறந்திருந்தாள். குழந்தை பெரியதாக இருந்தது. எனக்கு மயக்க மருந்து கொடுத்து, அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்தார்கள்.

தென்னாப்பிரிக்காவில் பெண்களுக்கு எப்படி கருத்தடை செய்யப்படுகிறது?

ஹிஸ்டெரெக்டமி: கருப்பை அல்லது அதன் ஒரு பகுதியை அகற்றுதல்

கருப்பை குழாய் அடைத்தல்: கருப்பை குழாயின் பாதை தடுக்கப்படுதல் அல்லது சீல் செய்யப்படுதல்.

ஆதாரம்: தென்னாப்பிரிக்க மக்கள் சமத்துவக்கான ஆணையம்.

குழந்தை பிறந்து ஐந்து நாட்கள் கழித்து ஆரோக்கியமான குழந்தையுடனும், வயிற்றில் பெரிய தழும்புடனும் நான் வீடு திரும்பினேன்.

எனக்கு அப்போது என்ன நடந்தது என்பது பற்றி அடுத்த 11 ஆண்டுகளாக எனக்குத் தெரியவில்லை.

மறுபடியும் கருத்தரிக்க நான் முயற்சி செய்தபோது தான் இதுபற்றிய உண்மைகள் தெரிய வந்தன.

முதல் குழந்தை பிறந்ததில் இருந்து நான் கருத்தடை மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததால், எனக்கு மாதவிலக்கு ஏற்படாததில் எந்த சந்தேகமும் எழவில்லை.

ஆனால் திருமணத்துக்கு உறுதியாகி, இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பி நான் டாக்டரிடம் சென்றேன்.

என்னைப் பரிசோதித்த அவர், என்னை உட்கார வைத்து, ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்துவிட்டு, எனக்கு கருப்பை இல்லை என்ற தகவலைக் கூறினார்.

`அது மிகவும் கொடூரமானது’

எனக்கு பேரிடியாகவும், குழப்பமாகவும் இருந்தது. ஏற்கெனவே நான் தாயாகி இருப்பதால், அதில் பொருள் இருப்பதாகத் தோன்றவில்லை.

என்னுடைய கருப்பை நீக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நான் கருதினேன். எனக்கு பிரசவம் நடந்த போது தான் அது நடந்திருக்க வேண்டும் என்றும் நினைத்தேன்.

“எனக்கு ஒரு குழந்தை கட்டாயமாக வேண்டும். என்னுடன் வேலை பார்க்கும் ஒரு பெண் கர்ப்பமாக இருந்ததை இந்த வாரம் நான் பார்த்தபோது, என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.”

போங்கிலே மிசிபி

அவர்கள் எனக்கு கொடூரமான செயலைச் செய்திருக்கிறார்கள்.

பத்திரிகைகளிடம் சென்றேன். பிறகு சுகாதார அமைச்சகத்தை நாடினேன். கடைசியில் அந்த மருத்துவமனைக்குச் சென்று, அன்றைக்கு பிரசவம் பார்த்த டாக்டரிடம் சென்றேன்.

அவர் மன்னிப்பு கேட்கவில்லை. என்னுடைய உயிரைக் காப்பாற்றுவதற்காக கருத்தடை சிகிச்சை செய்ததாக அவர் கூறினார்.

எதில் இருந்து என்னைக் காப்பாற்ற அப்படி செய்தார் என்று எனக்கு இன்னும் புரியவில்லை. மருத்துவமனையில் எந்த பதிவேடுகளும் இல்லை.

பாதிக்கப்பட்டிருப்பது நான் மட்டுமல்ல. விசாரணை நடத்தியதில் வேறு 47 பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. சிலருக்கு எச்.ஐ.வி. தொற்று இருந்ததால் அப்படி செய்ததாகச் சொன்னார்கள். ஆனால் எனக்கு அப்படியில்லை. எனக்கு ஏன் அப்படி செய்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

ஒப்புதல் படிவத்தில் நான் கையெழுத்திட்டிருப்பதாக டாக்டர் தெரிவித்தார். நான் கையெழுத்திடவில்லை. அந்த சமயத்தில் நான் மைனர். எனவே அப்படி நான் கையெழுத்து போட்டிருக்க முடியாது.

பிரசவத்தின் போது என்னுடன் இருந்த எனது தாயார் அந்தப் படிவத்தில் கையெழுத்து போட்டிருப்பதாக, பிறகு டாக்டர் கூறினார். தாம் அப்படி கையெழுத்திடவில்லை என்று என் தாயார் கூறினார்.

இத்தகவல் என் வாழ்க்கையை மாற்றிவிட்டது.

கடைசியில், நான் திருமணம் செய்து கொள்ள இருந்தவரை விட்டுப் பிரிந்தேன். அவர் குழந்தை வேண்டும் என்று விரும்பினார். என்னால் அவருக்கு அதைத் தர முடியாது என்பதால் பிரிய நேரிட்டது.

டாக்டரை நான் சந்தித்தபோது, எனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.

கட்டாயமாக எனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்றேன். என்னுடன் வேலை பார்க்கும் ஒரு பெண் கர்ப்பமாக இருந்ததை இந்த வாரம் நான் பார்த்தபோது, என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

என் மகள் தனக்கு ஓர் உடன்பிறப்பு வேண்டும் என்று விரும்புகிறாள். சாலையில் நாங்கள் செல்லும்போது குழந்தைகளைப் பார்க்கும்போது, என்னிடம் அவள் கேட்கிறாள்.

எனக்கு இன்னும் கரு முட்டைகள் உற்பத்தியாகின்றன. எனவே நான் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான செலவை மருத்துவமனை செலுத்த வேண்டும்.

கருத்தடை சிகிச்சை பற்றிய தென்னாப்பிரிக்க சட்டம்

பாதுகாப்பான முறைகளில் இதை பெரியவர்கள் செய்து கொள்ளலாம்.

இதற்கான நடைமுறைகள் தெளிவாக விளக்கப்பட வேண்டும். ஆபத்து வாய்ப்புகள், பின் விளைவுகள் உள்ளிட்டவற்றை விளக்க வேண்டும்.

ஒப்புதலை எந்த நேரத்திலும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

சம்மதிக்கும் படிவங்கள் தெளிவாக புரிந்து கொண்டு கையெழுத்திடப் பட்டிருக்க வேண்டும்.

ஒப்புதல் அளிக்கும் “நிலையில் இல்லாதவர்களுக்கு” தனிப்பட்ட விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

ஆதாரம்: தென்னாப்பிரிக்க மக்கள் சமத்துவத்துக்கான ஆணையம்

இதற்குக் காரணமான யாராவது பொறுப்பேற்கும்படி செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

டாக்டர்கள் தொடர்ந்து இவ்வாறு செய்ய நாம் அனுமதிக்க முடியாது. ஏனென்றால் பெண்களின் உரிமைகள் மீறப்படுகின்றன.

தாங்கள் கண்காணிப்புக்கு உட்பட்டவர்கள் என்பதை டாக்டர்கள் அறிந்திட வேண்டும். நாங்கள் மயக்கமாக இருந்தபோது என்ன நடந்தது என்பதை நாங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

பிறகு எனக்கு இவ்வாறு செய்த டாக்டரிடம் சென்று, மன்னிப்பு கேட்க சொன்னேன்.

அவர்கள் இந்த விஷயத்தைக் கையாண்ட விதத்தைப் பார்த்தால், ஒரு விரலை அகற்றியதைப் போல தான் அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் என்னுடைய பெண் தன்மையை அவர்கள் திருடிவிட்டார்கள்.

அதை ஒருபோதும் என்னால் மறந்துவிட முடியாது. அந்தத் தழும்பு எப்போதும் எனக்கு நினைவில் இருந்துகொண்டே இருக்கும்.

பெருவில் ஒரு பெண்மணி 2018ல் பிபிசியிடம் கூறியது : “கட்டாய கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டதற்கு எனக்கு நீதி வேண்டும்.”

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »