Press "Enter" to skip to content

கொரோனா வைரசால் பாதி சம்பளத்தை இழக்கும் விமான நிறுவன ஊழியர்கள்

‘கோவிட் 19’ எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மலேசியாவில் அதிகரித்து வருவது அந்நாட்டில் பல வகையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதில் ஒன்று தனியார் விமான நிறுவன ஊழியர்கள் ஊதியத்தில் விழுந்த 50 சதவீத ஊதிய வெட்டு.

‘கோவிட் 19’ பரவலைத் தடுக்க மலேசியர்கள் சுகாதாரத்துறைக்கு ஒத்துழைக்க வேண்டும் என அந்நாட்டின் மாமன்னர் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், கொரோனா குறித்த வதந்திகளும் அதிகரித்துள்ளன.

கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பது மலேசிய மக்களுக்கு வழக்கமான செய்தியாகி வருகிறது. சனிக்கிழமை மதியம் வரையில் அங்கு கொரோனாவால் மேலும் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 93ஆக உயர்ந்துள்ளது என மலேசிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

‘கோவிட்-19’ பாதிப்பு இருப்பதாக அடையாளம் காணப்பட்ட 33ஆவது நோயாளி மூலமாகவே இந்த பத்து பேரும் கிருமித் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர் என்றும், 10 பேரும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாகவும் மலேசிய சுகாதாரத் துறை பொதுச் செயலர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

இதையடுத்து புதிதாக பாதிக்கப்பட்டுள்ள 10 பேருடன் அண்மைய சில நாட்கள் நெருக்கமாக இருந்தவர்கள் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், சந்தேக நபர்களுக்கு உரிய மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘கோவிட்-19’ பாதிப்புள்ள நாடுகளுக்கு கடந்த சில வாரங்களில் பயணம் மேற்கொள்ளாத நிலையில், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள் நாடு முழுவதும் கண்காணிக்கப்படுகின்றனர். இதற்குரிய நடவடிக்கைகளை மலேசிய சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளது.

அரசுடன் பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும்; மலேசிய மாமன்னர் வேண்டுகோள்

இதற்கிடையே, கொரோனா கிருமியுடனான போராட்டத்தில் மலேசிய மக்கள் அரசாங்கத்துக்கு தகுந்த ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மலேசிய மாமன்னர் அப்துல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.

சுகாதார அமைச்சு கிருமித் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், மலேசியர்களும் தங்கள் பங்களிப்பைசெய்து உதவ வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

மலேசியாவில் திடீரென மார்ச் 6ஆம் தேதி அன்று, ஒரே நாளில் 28 பேர் கொரோனா கிருமித் தொற்று பாதிப்புக்கு ஆளாகினர். இதையடுத்து மாமன்னர் தமது கவலையை வெளிப்படுத்தியதாக அரண்மனை முதன்மைக் கணக்காளர் அகமட் பாடில் ஷாம்சுடின் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

“கிருமித் தொற்றுப் பரவலை விரைவாகவும் திறம்படவும் கட்டுப்படுத்த உதவும் வகையிலும், புதிய நோயாளிகளைக் கண்டறியவும் சுகாதாரத் துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும்,” என மலேசிய மாமன்னர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பாதி சம்பளத்தை இழக்கப் போகும் மலிண்டோ விமான நிறுவன ஊழியர்கள்

கொரோனா கிருமி மனிதர்களின் உயிரை மட்டுமல்லாமல், இதர விஷயங்களையும் பறிக்கத் தொடங்கி உள்ளது. உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் வர்த்தகம் பாதிக்கப்பட்டதை அடுத்து, பல்வேறு தரப்பினரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மலேசியாவின் ‘மலிண்டோ ஏர்’ விமான நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை ஒன்றில், அனைவரது ஊதியத்திலும் 50 சதவீதம் வெட்டப்படும் என்றும், இனி மாதத்துக்கு இரு வாரங்கள் ஊதியமற்ற கட்டாய விடுமுறை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளதாக ராய்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. இதனால் அந்நிறுவன ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்திருப்பதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் உலகெங்கிலும் மக்கள் விமானப் பயணங்களைத் தவிர்த்து வருகின்றனர். விமானத்தில் செல்லும் போது எளிதில் கிருமித் தொற்று ஏற்படக் கூடும் என்று கூறப்படுவதால் எழுந்துள்ள அச்சமே இதற்குக் காரணம். இதனால் உலகம் முழுவதும் உள்ள விமான நிறுவனங்கள் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளன.

“திடீரென வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து, நிலைமையைச் சமாளிக்க விமானங்களை ரத்து செய்வது, ஊழியர்களுக்கு ஊதியமற்ற விடுமுறை அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

“இந்நிலையில் வேறு வழியில்லாததால் ஊழியர்கள் அடுத்த சில மாதங்களுக்கு தங்களது ஊதியத்தில் 50 விழுக்காடு வெட்டப்படுவதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பும் வரை இந்நடவடிக்கை நீடிக்கும்,” என மலிண்டோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மலேசியாவில் இயங்கி வரும் விமான நிறுவனங்களில் ஊழியர்களின் ஊதிய வெட்டு நடவடிக்கையை மேற்கொண்டுள்ள முதல் நிறுவனம் ‘மலிண்டோ ஏர்’ தான்.

‘யுனிசெஃப்’ பெயரில் பரவும் தகவல்கள் பொய்யானவை

இதற்கிடையே கொரோனா கிருமித் தொற்று குறித்து ‘யுனிசெஃப்’ அமைப்பு அறிவுரையோ, அறிக்கையோ வெளியிடவில்லை என அதன் மலேசியப் பிரிவு தெரிவித்துள்ளது.

‘யுனிசெஃப்’ பெயரில் சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்கள் எதையும் நம்ப வேண்டாம் என்றும், அவை வெறும் வதந்தியே என்றும் அந்த அமைப்பு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக மலேசியாவில் ‘யுனிசெஃப்’ வெளியிட்ட தகவல் என்ற பெயரில், சமூக வலைத்தளங்கள் மூலம் சில தகவல்கள் பரவலாகப் பகிரப்பட்டன.

“கொரோனா கிருமி அளவில் பெரியது. அதன் விட்டம் (diameter) சுமார் 400 முதல் 500 மைக்ரோ புள்ளிகள் என்பதால் எத்தகைய முகக்கவசமும் அதை உடலுக்குள் நுழையவிடாமல் தடுத்துவிடும். துணி மீது விழும் கொரோனா கிருமியின் ஆயுள் 9 மணி நேரம் என்பதால், துணிகளை நன்கு துவைக்க வேண்டும். பிறகு சூரிய ஒளியில் 2 மணி நேரம் காய வைக்க வேண்டும்,” என்பன உள்ளிட்ட தகவல்களை ‘யுனிசெஃப்’ வெளியிட்டதாக கூறப்பட்டது.

ஆனால் இத்தகைய தகவல்களை வெளியிடவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அந்த அமைப்பு, கொரோனோ குறித்து மருத்துவர்கள் மட்டுமே பேசுவது சரியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »