Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) : ஆசிய பெண்களுக்கு பாதிப்பு – குடும்ப வன்முறை அதிகரிப்பு

லாரா ஓவன்ஸ்
பிபிசி உலக சேவை செய்தியாளர்

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால், ஆசியா முழுவதிலும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது உலகம் முழுவதும் இந்த வைரஸ் பாதிப்பு தீவிரமாக பரவி வருகிறது.

இந்த வைரஸை எதிர்த்து கடுமையாக போராடிவரும் நாடுகளில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. சமூகத்தில் ஏற்படும் இந்த மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்பட்டது ஆசிய நாடுகளின் பெண்கள்தான். அவசர காலங்களில் பாலின பாகுபாடுகள் அதிகரிக்கின்றன என்று ஐ.நா.வின் ஆசிய மற்றும் பசிஃபிக் பெண்கள் அமைப்பின் ஆலோசகர் மரியா ஹோல்ட்ஸ்பெர்க் கூறுகிறார்.

பள்ளிகளுக்கு விடுமுறை : பெண்களுக்கு பாதிப்பா ?

தென் கொரியாவில் வசிக்கும் சங் சோ யங் இரண்டு குழந்தைகளுக்கு தாய் மற்றும் பத்திரிகையாளர். பள்ளிகளுக்கு இரண்டு வாரம் விடுமுறை நாட்களை அதிகரித்ததால் தாம் சிரமத்தில் உள்ளதாகக் கூறுகிறார்.

சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் உள்ள 253 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் பள்ளி விடுமுறையால் வீட்டில் முடங்கி உள்ளனர் என்று யுனெஸ்கோவின் சமீபத்திய தகவல்கள் கூறுகின்றன.

பெரும்பாலும் கிழக்கு ஆசியாவில் உள்ள தாய்மார்கள் வீட்டை முழுமையாக பராமரிக்கும் சுமையை எதிர்கொள்கின்றனர். சங் சோ யங் மனதளவில் மிகவும் சோர்வு அடைந்துள்ளதாக கூறுகிறார்.

வீட்டில் இருந்து பணிகளை கவனிக்க முடியாததால், அலுவலகம் செல்ல விரும்புவதாக சங் கூறுகிறார். ஆனால் பொருளாதார ரீதியாக தனது கணவர் அலுவலகம் செல்வதே அவசியம் என்பதால், தான் வீட்டில் இருந்து அலுவலக பணிகளை கவனிப்பது சிரமமாக உள்ளது என கூறுகிறார். சங் சோ யங், தனது குழந்தைகள் உறங்கும்போது மட்டுமே வேலை செய்யமுடிகிறது என்று கவலை தெரிவிக்கிறார்.

பணி செய்யும் இடத்தில் நடக்கும் பாலின பாகுபாடின் எதிரொலியையே சங் சோ யங்யின் நிலை எதிரொலிக்கிறது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, குழந்தையை கவனித்துக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ள பெண்கள் அலுவலம் வராததால் அவர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என்று கேள்விப்பட்டதாக சங் கூறுகிறார்.

ஜப்பான் அரசாங்கம் ஒரு நாளைக்கு 80 டாலர் ஊதியம் அறிவிப்பு

குழந்தைகளை கவனித்துக்கொள்ள விடுப்பு எடுக்கும் ஊழியர்களுக்கு ஒரு நாளைக்கு 80 டாலர் ஊதியம் வழங்கப்படும் என ஜப்பான் அரசாங்கம் அறிவித்துள்ளது. பெற்றோர்களின் சுமையை குறைப்பதற்காக குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் தனியார் காப்பகங்கள் சில இயங்குகின்றன. ஆனால் நோய் தொற்று பரவாமல் இருக்க இது எந்த விதத்தில் உதவும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பெண்கள் வீட்டிற்குள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அதிகரிப்பு

சீனாவில் மில்லியன் கணக்கான மக்கள் வீட்டிற்குலேயே வசிப்பதால், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்துள்ளன என்று செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். பெண் செயற்பாட்டாளர் குவோ ஜிங் கடந்த நவம்பர் 2019ஆம் ஆண்டு தான் வுஹான் நகரம் சென்றார்.

தற்போது நோய் தொற்று பரவாமல் இருக்க தனித்து வைக்கப்பட்ட நகரங்களில் இருந்து பல இளம் பெண்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரால் பல பிரச்சனைகளை எதிர்கொள்வதாக குவோ ஜிங் கூறுகிறார். மேலும் யாரை தொடர்பு கொண்டு வீட்டை விட்டு வெளியேறுவது என்று தெரியவில்லை என பலர் அவருக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து புகார் அளிப்பதாகவும் கூறுகிறார்.

க்சியோ லி என்ற சீன செயற்பாட்டாளரின் உறவினர் பெண் ஒருவர் அவரது முன்னாள் கணவரால் கொடுமைப்படுத்தப்படுகிறார், ஹெனன் மாகாணத்திற்குள் மக்கள் யாரும் செல்ல அனுமதி இல்லாததால் அவரை சந்திக்க வழியில்லாமல் இருந்து என்று க்சியோ லி கூறினார். காவல் துறையினரை அணுகி, தன் உறவினரை கிராமத்தை விட்டு வெளியே அழைத்து வர அனுமதி கேட்டபோது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது தன் சகோதரரை உள்ளே அனுப்பி தனது உறவினருக்கு பாதுகாப்பாக இருக்க அவர் விரும்பியபோது, அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகளை சீனாவில் பல பெண்கள் தங்கள் சமூக ஊடகங்களில் பகிர்கின்றனர். #AntiDomesticViolenceDuringEpidemic என்ற ஹாஷ்டேக் சீனாவில் மிகவும் டிரெண்டிங்கில் உள்ளது.

கொரோனா வைரஸ் அச்சத்தால் நகரங்களை தனிமைப்படுத்துவதற்கு முன்பு வீட்டிற்குள் நடக்கும் கொடுமைகள் குறித்து வந்த தொலைபேசி அழைப்புகளை விட தற்போது மூன்று மடங்கு அழைப்புகள் அதிகரித்து வருகின்றன என்று பெய்ஜிங்கின் பெண்கள் உரிமைகளுக்கான தனியார் அமைப்பு ஒன்று கூறுகிறது.

மருத்துவத் துறை பெண் ஊழியர்கள்

மருத்துவம் மற்றும் சமூக பணிகளில் 70 சதவீத பெண்கள் ஈடுபட்டுள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

சீன ஊடகங்கள், ”அவசர நிலையில் மருத்துவப் பெண்களின் சேவை மிகவும் வலிமையாக உள்ளது என்றும், அவர்கள் தியாகமனப்பான்மையுடன் செயல்படுவதாகவும் ” பாராட்டுகின்றன. ஆனால் உண்மையில் சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையில் பணியாற்றும் பெண்களின் நிலை என்ன?

கடந்த மாதம் செவிலியர் ஒருவரிடம் பிபிசி பேசியது. மருத்துவ ஊழியர்கள் தொடர்ந்து 10 மணிநேரம் பணியில் ஈடுபடுவதாகவும், உணவு உண்ணவும் நேரமின்றி ஓய்வின்றி வேலை செய்வதாகவும் அவர் கூறினார்.

கொரோனா வைரசை ஒழிக்க இயங்கும் பிரச்சார கூட்டத்தில் ஜியாங் ஜின்ஜிங் என்ற அந்த செவிலியர் முக்கியப் பங்கு வகிக்கிறார். ஹூபேய் மாகாணத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பெண் மருத்துவ ஊழியர்கள் அனைவருக்கும் சுகாதார பொருட்கள் பலவற்றை இவர் வழங்கி வருகிறார். பணியில் உள்ள பெண்களின் மாதவிடாய் சார்ந்த தேவைகள் கவனிக்கப்படுவதில்லை என்றும் அவர் கூறுகிறார்.

பிப்ரவரி மாதம் வரை 86,000 மாதவிடாய் நாப்கின்கள் மற்றும் 4,81,377 மாதவிடாய் பேண்ட்டுகள் ஆகியவற்றை பெண் மருத்துவ மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு இலவசமாக வழங்கியதாக ஜியாங் ஜின்ஜிங் கூறுகிறார்.

சமூக ஆர்வலர்களின் இந்த பிரச்சாரத்தையும் சேவையையும் சீன சமூக ஊடகங்களில் பலர் பாராட்டினர். எனவே சீன அரசாங்கம் நடத்தும் பெண்கள் வளர்ச்சி அமைப்பு, பெண் மருத்துவ ஊழியர்களுக்குத் தேவையான மாதவிடாய் பொருட்களை விரைவில் அனுப்பவதாக தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »