Press "Enter" to skip to content

மலேசியா அமைச்சரவையில் துணை பிரதமர் இல்லை – 2 இந்திய வம்சாவளியினருக்கு வாய்ப்பு

மலேசியாவின் எட்டாவது பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள மொகிதின் யாசின் இன்று திங்கட்கிழமை தனது அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பவர்களை அறிவித்துள்ளார். இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சரவணன் முழு அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். எட்மண்ட் சந்தாரா துணையமைச்சராகி உள்ளார்.

மலேசிய அரசியலில் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பும் திடீர் திருப்பங்களும் நிகழ்ந்து வந்தன. அவற்றின் முடிவில் கடந்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அரசில் உள்துறை அமைச்சராக இருந்த மொகிதின் யாசின் புதிய பிரதமரானார்.

தமது தலைமையில் இயங்கும் பெர்சாத்து கட்சி, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த மொகிதின், உடனடியாக எதிர்க்கட்சிகள் சிலவற்றுடன் கூட்டணி அமைத்து பெரிக்காத்தான் நேசனல் என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளார்.

இதனால் மலேசியாவின் அடுத்த பிரதமராவார் எனக் கருதப்பட்ட அன்வார் இப்ராகிம் எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் மகாதீர், நாடாளுமன்றம் கூடட்டும் என அமைதி காக்கிறார். சில நாட்களுக்கு முன்பு வரை நாட்டின் பிரதமராக வலம் வந்தவர், தற்போது பதவியில் இருந்து விலகிவிட்டாலும், தனக்குள்ள பிற பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஒத்தி வைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டத்தொடர்

புதிய பிரதமர் மொகிதின் யாசின் பிரதமராகப் பதவியேற்கும் முன்பே நாடாளுமன்றத்தில் தமது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தின. பின்னர் நாடாளுமன்றம் மார்ச் 9ஆம் கூடுவதாக இருந்ததால், அப்போது பெரும்பான்மையை நிரூபிக்குமாறு அக்கூட்டணி சார்பில் வலியுறுத்தப்பட்டது.

ஆனால் இவை இரண்டுமே நடைபெறவில்லை. மாறாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் இரு மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மே 18ஆம் தேதிதான் நாடாளுமன்றம் கூடும் என சபாநாயகர் அறிவித்துள்ளார். இதனால் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக் கட்சிகள் அதிருப்தியும் ஏமாற்றமும் அடைந்துள்ளன.

அதேசமயம் நாடாளுமன்றம் கூடும்போது தங்களுக்குத்தான் பெரும்பான்மை பலம் உள்ளது என்பதை நிரூபிக்க இயலும் என அக்கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால். பெரிக்காத்தான் நேசனல் அணிக்கு முன்பு அறிவித்ததைவிட தற்போது கூடுதல் எம்பிக்களின் ஆதரவு இருப்பதாக இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள அம்னோ கட்சியின் தேசியத் தலைவரான சாகித் ஹமிடி தெரிவித்துள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு இடம் இல்லை

அரசியல் களத்தில் பரபரப்பு சற்றே ஓய்ந்திருந்தாலும், எந்நேரமும் ஏதேனும் ஒரு திருப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவே அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர். இந்நிலையில், தற்போது தமது அமைச்சரவையை அறிவித்துள்ளார் பிரதமர் மொகிதின் யாசின்.

முன்னதாக ஊழல் கறை படிந்தவர்களையும், ஊழல் வழக்குகளை எதிர்நோக்குபவர்களையும் அமைச்சரவையில் இடம்பெற பிரதமர் அனுமதிக்கக் கூடாது எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.

ஏனெனில் அம்னோ கட்சியின் தேசியத் தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான சாகித் ஹமீடி ஊழல் வழக்குகளை எதிர்கொண்டுள்ளார். முன்னாள் பிரதமரும் அம்னோவின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான நஜீப்பும் பல்வேறு வழக்குகள், குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நிலையில், புதிய பிரதமர் எத்தகைய அமைச்சரவையை அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

தமது அமைச்சரவை கறைபடியாததாக இருக்கும் என திட்டவட்டமாக அறிவித்திருந்தார் பிரதமர் மொகிதின் யாசின்.

4 மூத்த அமைச்சர்கள் நியமனம்: துணைப் பிரதமர் நியமிக்கப்படவில்லை

இந்நிலையில், மலேசியாவில் முதன்முறையாக புதிய அமைச்சரவையில் துணைப் பிரதமராக யாரும் அறிவிக்கப்படவில்லை. முந்தைய ஆட்சிக் காலங்களில் துணைப் பிரதமர்கள் நியமிக்கப்படுவது வழக்கமாக இருந்தது. இதன் மூலம் துணைப் பிரதமராக இருப்பவர் பிரதமரின் கீழ் நிர்வாக அனுபவம் பெற முடியும் எனக் கருதப்பட்டது. எனினும் புதிய பிரதமரான மொகிதின் யாசின் தனக்குத் துணைப் பிரதமராக யாரையும் நியமிக்கவில்லை.

மொத்தம் 31 அமைச்சர்களை நியமித்துள்ளார் மொகிதின். இவர்களில் நான்கு பேர் மூத்த அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அஸ்மின் அலி (அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர்), இஸ்மாயில் சப்ரி யாக்கோப் (தற்காப்பு அமைச்சர்), படிலா யூசோப் (பொதுப்பணி அமைச்சர்), டாக்டர் முகமட் ரட்சி முகமட் ஜிடின் (கல்வி அமைச்சர்) ஆகியோரே அந்த நால்வராவர்.

துணைப் பிரதமர் நியமிக்கப்படாததால், நடப்புப் பிரதமர் வெளிநாடுகளுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளும்போது நான்கு மூத்த அமைச்சர்களும் அரசாங்கத்தைக் கூட்டாக நிர்வகிப்பர். மூத்த அமைச்சர்கள் இருப்பதால் துணைப் பிரதமரை நியமிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை எனப் பிரதமர் மொகிதின் கூறியுள்ளார்.

மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கக் கூடிய அமைச்சரவையை அமைக்க விரும்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை ஒற்றுமைத் துறை அமைச்சு புதிதாக அமைக்கப்படுவதாகவும் பிரதமர் மொகிதின் அறிவித்துள்ளார். மேலும், கல்வி அமைச்சு இரண்டாகப் பிரிக்கப்பட்டு உயர்கல்வி அமைச்சு என்ற புதிய அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது. சபா, சரவாக் விவகாரங்களுக்கான அமைச்சு புதிதாக அமைக்கப்படுகிறது.

வங்கி உயரதிகாரியை நிதியமைச்சராக்கிய மொகிதின்

இம்முறை மலேசியாவின் முக்கிய வங்கிகளில் ஒன்றான CIMB குழம வங்கியின் தலைமைச் செயல் இயக்குநரான தெங்கு ஸஃப்ரூல் அசிஸ் அந்நாட்டின் புதிய நிதியமைச்சராகி உள்ளார். பிரதமரின் இத்தேர்வுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

நாட்டின் பொருளாதாரம் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ள நிலையில், வங்கி தலைமைப் பதவியில் உள்ள ஒருவரை தேர்ந்தெடுத்திருப்பது மிகச்சரியான முடிவு என பிரதமர் மொகிதினுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கொரோனா கிருமி பாதிப்பால் பல்வேறு தொழில்கள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. இதையடுத்து இடைக்கால பிரதமராக சில தினங்களுக்குப் பொறுப்பு வகித்த போது, 20 பில்லியன் மலேசிய ரிங்கிட் அளவிலான பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் ஒன்றை அறிவித்திருந்தார் மகாதீர் மொஹம்மத். தற்போது அதைச் செயல்படுத்த வேண்டிய பொறுப்பு புதிய நிதியமைச்சரான ஸஃப்ரூல் அசிஸ் வசம் ஒப்படைக்கப்படுகிறது.

மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இந்தியர்கள்

இம்முறை மலேசிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சார்ந்த இருவர் இடம்பெற்றுள்ளனர்.

மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சியின் (மஇகா) தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் மனித வள அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

கூட்டரசுப் பிரதேச துணையமைச்சராக சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினரும், அஸ்மின் அலியின் அணியில் இணைந்து அன்வாரின் பிகேஆர் கட்சியில் இருந்து வெளியேறியவருமான எட்மண்ட் சந்தாரா நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மனித வள அமைச்சராகும் சரவணன் இதற்கு முன்பு தேசிய முன்னணி (பாரிசான் நேசனல்) ஆட்சிக் காலத்திலும் அமைச்சராக பதவி வகித்த அனுபவம் உள்ளவர். தற்போது முழு அமைச்சராகி உள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மஇகாவின் முக்கிய தலைவர்கள் அனைவரும் தோல்வி கண்ட நிலையில், சரவணன் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றார்.

பரிக்காத்தான் நேசனல் கூட்டணியில் இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் கட்சியாக மஇகா இடம்பெற்றுள்ளது. எனவே அதன் ஒரே நாடாளுமன்ற உறுப்பினரான சரவணன் அமைச்சராகி உள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »