Press "Enter" to skip to content

ஆப்கானிஸ்தான் தேர்தல் முடிவில் 2 பேர் ஏட்டிக்குப் போட்டியாக அதிபர் பதவி ஏற்பு

ஆப்கானிஸ்தானில் செப்டம்பரில் நடந்த அதிபர் தேர்தலின் முடிவில் தற்போது பதவியில் இருக்கும் அதிபர் அஷ்ரஃப் கனி தேர்தலில் வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அவர் அதிபர் மாளிகையில் பதவியேற்றார்.

அதே நேரம், இந்த வெற்றி அறிவிப்பு மோசடியானது என்று கூறியதுடன் தாமே வெற்றி பெற்றதாக அறிவித்து போட்டி பதவியேற்பு விழா நடத்தி, பதவியேற்றுள்ளார் மூத்த அரசியல்வாதியும், முதன்மை நிர்வாகியுமான அப்துல்லா அப்துல்லா.

கடந்த அரசாங்கத்தில் இந்த இருவருமே பங்கு வகித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பல்லாண்டு காலமாக நடந்து வரும் வன்முறையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தாலிபன் தீவிரவாதிகளுடன் ஆப்கானிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில் இந்த குழப்பமும் முரண்பாடும் எழுந்துள்ளன.

செவ்வாய்க்கிழமை தொடங்கும் ஆப்கன் உள்நாட்டுப் பேச்சுவார்த்தையில் அரசாங்கத்தின் நிலையை இந்த அரசியல் முரண்பாடு வெகுவாகப் பாதிக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பேச்சுவார்த்தையில் வெல்லவேண்டும் என்றால் அதற்கு ஒற்றுமையே ஒரே வழி என்று அரசியல் விமர்சகர் அட்டா நூரி ஏ.எஃப்.பி. முகமையிடம் கூறியுள்ளார்.

இந்த இரண்டு பதவியேற்பு விழாக்களின்போது வெடிச்சத்தங்கள் கேட்டன. ஆனால், யாரும் இந்த நிகழ்வுகளில் காயம்பட்டதாக தகவல்கள் இல்லை.

அஷ்ரஃப் கனி 2014 முதல் அந்நாட்டின் அதிபராக இருந்து வருகிறார். தலைநகர் காபூலில் உள்ள அதிபர் மாளிகையில் நடந்த அவரது பதவியேற்பு விழாவில் அமெரிக்க சிறப்புத் தூதர் ஜால்மே கலில்ஜாத், ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதரகத்தின் சார்ஜ் டி’அஃபயர்ஸ் ராஸ் வில்சன், நேட்டோ படைகளின் கட்டளை அதிகாரி ஜெனரல் ஸ்காட் மில்லர், ஐரோப்பிய ஒன்றியம், கனடா, ஆஸ்திரேலியா, டென்மார்க், ஜெர்மனி, நார்வே ஆகிய நாடுகளின் தூதுவர்கள் பங்கேற்றனர்.

சிறிது தொலைவு தள்ளி இருக்கிற சபேதார் மாளிகையில் தமது போட்டி பதவியேற்பு நிகழ்வை நடத்தினார் அப்துல்லா. கடந்த ஆட்சியில், ஆப்கானிஸ்தான் தலைமை நிர்வாகியாக அப்துல்லா பதவி வகித்தபோது இந்த மாளிகையைத்தான் அவர் தமது அலுவலகமாகப் பயன்படுத்தி வந்தார்.

அப்துல்லா மீது தாக்குதல்

அமெரிக்க சிறப்புத் தூதர் கலில்ஜாத் தலையிட்டுப் பேசியதை அடுத்து, தாங்கள் இந்த நிகழ்வை ரத்து செய்யத் தயாராக இருப்பதாக அப்துல்லா முகாமில் இருப்பவர்கள் கூறியிருந்தபோதும், இந்த நிகழ்ச்சி நடந்துவிட்டது.

களத்தில் இருப்பவர்களுக்கு இந்தப் பிளவால் என்ன விளைவு ஏற்படும் என்று தெளிவாகத் தெரிந்திருக்கிறது. இந்நிலையில், இரண்டு முகாம்களும் ஒரு அதிகாரப் பகிர்வு உடன்படிக்கையை எட்ட வேண்டும் என்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

சில நாள்களுக்கு முன்பு அப்துல்லா கலந்துகொண்ட ஒரு நிகழ்வில் நடத்தப்பட்ட ஆயுதத் தாக்குதலில் அவர் தப்பித்திருந்தாலும் 32 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் அறிவித்தனர். இந்த நிகழ்வுக்குப் பிறகே, அரசியல் சிக்கல் ஆரம்பமானது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »