Press "Enter" to skip to content

கொரோனா அச்சம்: மதுபானம் என நினைத்து எரிசாராயம் அருந்திய 16 பேர் இரானில் பலி

மது அருந்தினால் கொரோனா குணமாகும் என நம்பி எரிசாராயத்தை குடித்த 16 இரானியர்கள் உயிரிழந்துள்ளது அந்நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரானில் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, அந்நாட்டில் அது குறித்த பல பொய்ச்செய்திகள் பரவி வருகின்றன. குறிப்பாக மதுபானங்கள் அருந்தினாலே, அல்லது வாய் கொப்பளித்தாலோ கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்ற வதந்தி இரானில் வைரலாக பரவி வருகிறது. வோட்கா அருந்துவதால்தான், ரஷ்யர்களை கொரோனா பெரிய அளவில் தாக்கவில்லை என்ற செய்தியும் அதில் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் இரானின் குசெஸ்தான் மாகாணத்தில் இந்த வதந்திகளை நம்பி எரிசாராயம் மூலம் தயாரிக்கப்பட்ட மதுபானத்தை அருந்தியதால் குறைந்தபட்சம் 16 பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.ஆர்.என்.ஏ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

போலி மதுபானம்

மெத்தனால் கலந்திருந்த அந்த நச்சு மதுபானத்தை அருந்திய 331 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் குறைந்தபட்சம் 16 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இரானில் மதுபானங்கள் குடிப்பது சட்டப்படி குற்றம். இருந்தாலும் சட்டவிரோதமாக அண்டை நாடுகளிலிருந்து கடத்தி வரப்படும் எரிசாராயத்தை பலர் அங்கு ரகசியமாக அருந்து வருகின்றனர். இந்த எரிசாராயம் விஷமாக மாறி கடந்த காலங்களில் நூற்றுக்கணக்கானோரின் உயிரைப் பறித்துள்ளது. மேலும் எரிசாராயம் குடித்து உடல் நலம் பாதிக்கப்படோர் பலர், அரசு தங்களை கைது செய்து விடும் என்பதற்காக மருத்துவமனைகளுக்கு செல்வதும் இல்லை.

இந்நிலையில் இந்த போலி மதுபானத்தை தயாரித்ததாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என இரான் சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

வளைகுடா நாடுகளில் இரானில்தான் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் கொரோனாவினால் 43 பேர் இரானில் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை மொத்தம் 7,161 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சம் 237 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தீவிரத்தை கட்டுப்படுத்தும் வகையில் அந்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால் சீனா இத்தாலியைப் போல இல்லாமல், நாட்டின் எந்த ஒரு பகுதியையும் இரான் தனிமைப்படுத்தவில்லை.

இரான் முக்கிய மையம்

ஆப்கானிஸ்தான், இராக், குவைத், பஹ்ரைன், லெபனான், ஓமன், கத்தார், செளதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் கொரோனா பரவ இரான் முக்கிய மையமாக இருந்துள்ளது.

தற்போது கொரோனா தொற்று ஏற்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், ஆனால் இந்த தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக தற்போதே முடிவு செய்ய முடியாது எனவும் இரான் கூறியுள்ளது. ஆனால் தற்போது வரை கொரோனா பாதித்த சுமார் 2,400 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் இரான் தெரிவித்துள்ளது.

இரானின் தலைநகர் கொரோனாவினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்நகரில் மட்டும் 1945 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் கோம் நகரம் உள்ளது.

இந்நிலையில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு, இரானில் அரசு உயரதிகாரிகள் 30 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இரானின் 11 துணை அதிபர்களில் ஒருவரான மசுமே எப்டேகரும், அந்நாட்டின் சுகாதாரத்துறை துணை அமைச்சரும்,. 24 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடக்கம்.

இந்நிலையில் இரானுக்கு புனிதப்பயணம் மேற்கொள்ளச் சென்று அங்கு சிக்கித்தவித்து வந்த இந்தியர்களில் முதல்கட்டமாக 58 பேர் இன்று டெல்லி வந்தடைந்துள்ளனர். இந்தியர்களை மீட்பதற்காக இரானுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்திய விமானப்படையின் தனி விமானம், இன்று காலை உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படைத்தளத்தை அடைந்தது. மீதமுள்ள இந்தியர்களை இரானிலிருந்து மீட்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »