Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): மலேசியா, சிங்கப்பூரில் என்ன நிலைமை?

மலேசியாவில் கொரோனா கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் நூறை தாண்டிய பிறகும் வேகம் குறையாமல் தொடர்ந்து தனது தாக்கத்தை நிலைநாட்டி வருகிறது.

இதுவரை மலேசியாவில் 117 பேர் அக்கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (திங்கள்கிழமை) ஒரே நாளில் 18 பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

அந்த 18 பேரில் ஒருவர் மட்டுமே வெளிநாடு சென்று திரும்பியவர், மற்ற 17 பேருக்கு கிருமித் தொற்று ஏற்பட உள்நாட்டுத் தொடர்புகளே காரணமாக இருக்கக் கூடும் என மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அந்தக் குறிப்பிட்ட நபர் அண்மையில் இரான் சென்று திரும்பியுள்ளார். அவர்தான் ‘நோயாளி 101’ என சுகாதார அமைச்சு அடையாளம் கண்டுள்ளதாக அதன் பொதுச் செயலர் நூர் ஷிஷாம் அப்துல்லா குறிப்பிட்டார்.

வணிக ரீதியில் இரானுக்குப் பயணம் மேற்கொண்ட அவர், தனது கூட்டாளியுடன் பிப்ரவரி 20 முதல் 27ஆம் தேதி வரை அங்கு தங்கியிருந்துள்ளார்.

பின்னர் நாடு திரும்பிய அவருக்கு மார்ச் 5ஆம் தேதிதான் கொரோனா கிருமித் தொற்றுக்கான அறிகுறிகள் தென்படத் துவங்கின. அடுத்த மூன்றே தினங்களில் அவருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும், இதையடுத்து அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகவும் சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது.

இரண்டாவது சுற்று ஆட்டத்தை தொடங்கிய கொரோனா: பள்ளிகளுக்கு அறிவுரை

மலேசியாவில் தற்போது இரண்டாம் கட்டமாக கொரோனா கிருமித் தொற்று பரவி வருகிறது. கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி வரை மொத்தம் 22 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர். இதை முதல் கட்டம் எனக் குறிப்பிடுகின்றனர். பின்னர் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி முதல் இந்த எண்ணிக்கை மளமளவென அதிகரித்து தற்போது 117ஆக உள்ளது. இது இரண்டாம் கட்டம் எனக் குறிப்பிடப்படுகிறது.

தற்போது கிருமித் தொற்றுக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இருவர் மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளும் தொற்றுக்கு எதிரான செயல் திட்டத்தைக் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா கிருமியின் இரண்டாம் சுற்று தாக்குதலானது தீவிரமடைந்து வருவதையொட்டி இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.

காய்ச்சல் அறிகுறியுடன் பள்ளிக்கு வரும் மாணவர்களை அனுமதிக்கக் கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கு வரும் அனைத்து மாணவர்களுக்கும் உடல்வெப்ப பரிசோதனை தினமும் மேற்கொள்ளப்படுகிறது. வெப்பம் அதிகமாக இருப்பின் அம்மாணவர்களின் பெற்றோருக்கு உடனடியாகத் தகவவல் தெரிவிக்கப்படும்.

அதேபோல் சீனா, ஜப்பான், இரான், தென்கொரியா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று திரும்பி 14 நாட்கள் நிறைவடையாத மாணவர்கள் பள்ளிக்கு வர தடை விதிக்க வேண்டும் என கல்விக்கான பெற்றோர் செயற்குழு வலியுறுத்தி உள்ளது.

“கொரோனா கிருமித் தொற்று உள்ளவர்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட மாணவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என அக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

இருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது

கொரோனா கிருமித் தொற்று பாதிப்பு காரணமாக மலேசியாவில் இதுவரை உயிரிழப்புகள் ஏதுமில்லை. சரியாகச் சொல்வதென்றால், அங்கு அக்கிருமியின் முதல் சுற்று தாக்குதலுக்கு ஆளான அனைவரும் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், கிருமித்தொற்று பாதிப்புடன் இரு வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சுகாதாரத்துறை பொதுச்செயலர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். இருவருக்கும் செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“இருவரது பெயரை வெளியிட இயலாது. அதேசமயம் இருவருக்கும் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் கிருமித்தொற்றுக்கு ஆளான 26ஆவது நபரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வெளியான தகவல் வெறும் வதந்தி,” என்றார் ஹிஷாம் அப்துல்லா.

சிங்கப்பூர் நிலவரம்

சிங்கப்பூரில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றாலும், அரசு மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கைகளால் அந்நாட்டு மக்கள் இந்தப் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்.

எனினும் கொரோனா கிருமித் தொற்று வேகமாகப் பரவ வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டின் தேசிய அபிவிருத்தி அமைச்சர் லாரன்ஸ் வோங்கும், சுகாதார அமைச்சர் கன் கிம் யோங்கும் (Gan Kim Yong), மேற்குறிப்பிட்ட கவலையை வெளிப்படுத்தினர். மேலும், கிருமித்தொற்று காரணமாக ஏற்படக்கூடிய உயிரிழப்புகளை ஏதேனும் ஒரு கட்டத்தில் தவிர்க்க இயலாது என்றும் குறிப்பிட்டனர்.

மொத்தம் 160 பேருக்கு கிருமித்தொற்று:

மார்ச் 9ஆம் தேதி மாலை நிலவரப்படி சிங்கப்பூரில் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 160ஆகும். இவர்களில் 93 பேர் உரிய சிகிச்சை பெற்ற பின்னர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளனர்.

“மருத்துவமனையில் எஞ்சியுள்ள 67 நோயாளிகளில் 10 பேர், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். எஞ்சியவர்களின் உடல்நிலை சீராக உள்ளது, அல்லது மேம்பட்டு வருகிறது,” என சிங்கப்பூர் ஊடகச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

சுற்றுலா பயணிகள்தான் மருத்துவச் செலவுகளை ஏற்க வேண்டும்: சிங்கப்பூர் அரசு

சிங்கப்பூர் வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா கிருமித் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் தங்களுக்கான சிகிச்சைக்குரிய முழுச்செலவுகளையும் அவர்களே ஏற்க வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

எனினும் சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தர வசிப்பிட அனுமதி பெற்றவர்கள், நீண்டகால விசா வைத்திருப்போருக்கு அங்குள்ள பொது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டால், சிகிச்சைக்கான முழு செலவையும் அரசாங்கம் தொடர்ந்து ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் கொரோனா தாக்குதல் மோசமடைந்து வரும் நிலையில், சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே, அங்குள்ள பொது மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ வளங்களை முன்னுரிமைப் படுத்துவது தொடர்பில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எனவே சிங்கப்பூருக்கு குறுகிய கால வருகை மேற்கொள்வோருக்கு கொரோனா கிருமித் தொற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படும் என்றும், தீவிர நுரையீரல் நொற்று உள்ளிட்ட உபாதைகளுக்காக சிங்கப்பூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால் அதற்குரிய கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இத்தகைய சிகிச்சைக்கு குறைந்தபட்சம் 6 முதல் அதிகபட்சம் 8 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் செலவாகக்கூடும். (ஒரு சிங்கப்பூர் டாலர் = 51 ரூபாய் – உத்தேசமாக).

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »