Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): சிங்கப்பூரை முந்துகிறதா மலேசியா? – 238 பேருக்கு பாதிப்பு

கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை மாலை நிலவரப்படி 238ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சிங்கப்பூரை முந்தியுள்ளது மலேசியா.

கடந்த பிப்ரவரி தொடங்கி இன்று வரை சிங்கப்பூரில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வருகிறது. எனினும் சிகிச்சைக்குப் பின்னர் அவர்களில் பெரும்பாலானோர் வீடு திரும்பிவிட்டனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்ச உணர்வு அதிகரிக்கவில்லை.

மலேசியாவைப் பொறுத்தவரை கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி வரை கொரோனா கிருமித் தொற்றால் 22 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர். மலேசிய அரசு கிருமித் தொற்றுப் பரவலை தடுக்க மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை உலக சுகாதார அமைப்பு பாராட்டியது. இந்நிலையில் பிப்ரவரி 27ஆம் தேதி தொடங்கி இன்று வரை கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது மலேசியாவில் மளமளவென அதிகரித்து வருகிறது.

குறிப்பாக கடந்த 3 தினங்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 27 முதல் மார்ச் 1ஆம் தேதி வரை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பள்ளிவாசலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் 1,500 வெளிநாட்டவர்களுடன், மலேசியர்கள் 14,500 பேர் கலந்து கொண்டனர். அதே நிகழ்வில் புருனே நாட்டைச் சேர்ந்த, கொரோனா கிருமித் தொற்றுள்ள நபரும் பங்கேற்றது தெரியவந்தது.

இதையடுத்து அவர் மூலம் பலருக்கு கிருமித்தொற்று பரவியிருக்கலாம் என அஞ்சப்பட்டது. பள்ளிவாசல் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் சிலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தவிர, மலேசியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் கொரோனா கிருமித்தொற்று பரவியுள்ளது.

பொருட்களின் விலை உயர்த்தும் வணிகர்களுக்கு எச்சரிக்கை

கொரோனா கிருமித் தொற்று பாதிப்புக்கு அஞ்சி பலரும் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக் கொண்டு வரும் நிலையில், ஒருசிலர் பொருட்களை வாங்கிக் குவிக்கின்றனர்.

மக்களின் இந்தச் செயல்பாட்டைப் பயன்படுத்திக் கொண்டு, பொருட்களின் விலையை உயர்த்தும் வணிகர்கள் மீது நடவடிக்கை பாயும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சபா மாநிலத்தில் கொரோனா கிருமித் தொற்று பாதிப்புக்கு ஆளான முதல் நபர் அண்மையில் அடையாளம் காணப்பட்டார். இதுகுறித்த தகவல் பரவியதும், ஏராளமானோர் பேரங்காடிகளில் குவிந்தனர். சீனா, இத்தாலி போன்ற நாடுகளைப் போல் நிலைமை மோசமாகிவிடுமோ என்ற அச்சம் காரணமாக பலரும் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் குவித்தனர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வணிகர்கள் சிலர் பொருட்களின் விலையை உயர்த்தியதாகத் தகவல் பரவியது.

இதையடுத்து உள்நாட்டு வாணிபம் மற்றும் பயனீட்டாளர் அமைச்சு வணிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. விலை உயர்த்தும் வணிகர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தை மீறும் வணிகர்களுக்கு ஒரு லட்சம் மலேசிய ரிங்கிட் (உத்தேசமாக 17.5 லட்சம் ரூபாய்) அபராதம் அல்லது மூன்று ஆண்டு சிறைத் தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என சபா மாநில அரசு எச்சரித்துள்ளது. பொருட்களின் விலையை உயர்த்தும் நிறுவனங்களுக்கு ஐந்து லட்சம் மலேசிய ரிங்கிட் அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பள்ளி நிர்வாகங்களுக்கு மலேசிய கல்வித் துறை அறிவுரை

இதற்கிடையே பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் கல்விசார் நடவடிக்கைகள், நிகழ்ச்சிகளை ஒத்திவைக்குமாறு மலேசிய கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

ஒரே சமயத்தில் பலர் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்பதால் இவ்வாறு அறிவுறுத்துவதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.

விளையாட்டு நிகழ்ச்சிகள், பண்டிகை கொண்டாட்டங்கள், பயிற்சி வகுப்புகள், பயிலரங்குகள், கருத்தரங்குகள், பெற்றோர்-ஆசிரியர் சங்க கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை பட்டியலிட்டு, அவற்றைத் தவிர்க்குமாறு கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

எனினும் தவிர்க்க முடியாது நிகழ்வுகள் எனில், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளுக்கு இதுவரை விடுமுறை அறிவிக்கப்படவில்லை. தேவையெனில் மாநில மற்றும் மாவட்ட சுகாதாரத் துறையை தொடர்பு கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கலாம் என்றும் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

எனினும் மலேசியாவில் உள்ள சில தனியார் பள்ளிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களுக்கு சில தினங்கள் விடுமுறை அளித்துள்ளன.

இளையராஜா இசை நிகழ்ச்சி ஒத்திவைப்பு

கொரோனா தொற்றுப் பரவலையடுத்து, மலேசியாவின் பல்வேறு மாநிலங்களில் முக்கிய நிகழ்ச்சிகள் பலவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேசிய மற்றும் மாநில அளவிலான பெரிய நிகழ்வுகளும் இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருமித் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இத்தகைய நடவடிக்கையை மாநில அரசுகள் மேற்கொண்டதாக மலேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் இறுதி வரை நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் பலவும் ஜூன் வரை ஒத்திவைக்கப்படுவதாக தெரிகிறது.

இந்நிலையில் தலைநகர் கோலாலம்பூரில் மார்ச் 14ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்காக ஏராளமான நுழைவுச் சீட்டுகள் விற்பனையானதாக கூறப்பட்ட நிலையில், வேறு வழியின்றி ஒத்திவைக்கப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் வரும் என்ற நம்பிக்கையில், ஜூன் மாதம் இந்நிகழ்ச்சி நடைபெறும் எனக் கூறப்படுகிறது. நிகழ்ச்சியில் பங்கேற்கும் இசைக் கலைஞர்கள், பார்வையாளர்களின் நலம் கருதி இவ்வாறு ஒத்திவைக்கப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

சிங்கப்பூர் நிலவரம்

மார்ச் 13ஆம் தேதி மாலை நிலவரப்படி, சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 200ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 97 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.

எஞ்சிய 103 பேரில், 11 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது. மற்றவர்களின் உடல்நலம் தேறியோ, மேம்பட்டோ வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மார்ச் 13ஆம் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட 13 பேரில், ஒருவர் இந்திய ஊழியர் ஆவார். சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 189ஆவது நபரான அவர், வேலை அனுமதிச்சீட்டுடன் அங்கு பணிபுரிந்து வருகிறார்.

அக்குறிப்பிட்ட நபர், கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி முதல் மார்ச் 1ஆம் தேதி வரை இந்தியாவில் இருந்தார் என்றும், தற்போது தேசிய தொற்று நோய்கள் தடுப்பு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சிங்கப்பூர் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »