Press "Enter" to skip to content

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட சீனாவிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ளலாமா ?

பேப்லோ உச்சோவா
பிபிசி உலக சேவை

கடந்த ஜனவரி மாதம் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சீனா பல நடவடிக்கைகளை அறிவித்தபோது, ஜனநாயக நாட்டில் அவற்றை நடைமுறைப்படுத்துவது சாத்தியமா என்பது போன்ற பல கேள்விகளை விமர்சகர்கள் முன்வைத்தனர.

56 மில்லியன் மக்களை கொண்ட ஹுபேய் மாகாணத்தை தனிமைப்படுத்துவது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பத்து நாட்களில் புதிய மருத்துவமனை கட்டுவது போன்ற நடவடிக்கைகளை சீனா அறிவித்து நடைமுறைப்படுத்தியது.

அதேபோல கொரோனா பாதிப்பு சீனாவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா பாதிப்பு உலகின் பிற பகுதிகளில் பல மடங்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் பாதிப்பை உலகளாவிய தொற்றாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தபோது, அதன் தலைவர் டெட்ரோஸ் ஹெபிரியேசஸ் உலக நாடுகளை மிகவும் விரைவாக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தினார்.

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட எத்தனை ஜனநாயக நாடுகள் சீனாவிடமிருந்து பாடம் கற்றுக் கொண்டன?

சீனா அபாய கட்டத்தை தாண்டியதா ?

கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கிய இடத்திற்கே மார்ச் 10 ம் தேதி சீன அதிபர் ஷி ஜின் பிங் சென்று ஆய்வு மேற்கொண்டது தேசிய அவசர நிலை முடிவுக்கு வந்ததற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வ தரவுகளின்படி புதிதாக கொரோனா தொற்று தொற்றுகிறவர்கள் எண்ணிக்கை அந்நாட்டில் ஒரு நாளைக்கு சில டஜன் என்ற அளவில் இருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.

நியூயார்க்கில் உள்ள உலக சுகாதார கவுன்சிலின் மூத்த உறுப்பினர் யான்சுவாங் பிபிசி யிடம் பேசுகையில் சீனா இந்த நோயை எதிர்கொண்ட விதம் மற்ற எந்த நாட்டிலும் பிரதிபலிக்க வாய்ப்பு இல்லை என்று கூறினார். மேலும் சீனாவை முன்னோடியாக வைத்து விரைவாக சில அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சில நாட்டு தலைவர்கள் விரும்பினாலும், அவர்களிடம் போதிய அதிகாரம் இருக்காது என்றும் யான்சுவாங் கூறுகிறார்.

சர்வாதிகாரம் மேற்கொள்ளப்படவில்லை

கொரோனா வைரசை எதிர்த்து போராட சீன அரசாங்கம் சர்வாதிகாரப் போக்கை மேற்கொள்ளவில்லை என மிலனில் உள்ள மருத்துவர் மற்றும் பேராசிரியர் ராபர்டோ புரியாணி கூறுகிறார் .

ஐரோப்பாவில் இத்தாலி மிகக்கடுமையான பாதிப்பை எதிர்கொள்கிறது. 60 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நாடு முற்றிலும் முடங்கியுள்ளது. உணவு மற்றும் மருந்து கடைகளைத் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.

பொது இடங்களில் கூடுவதை தவிர்த்து விட்டிற்குள்லேயே இருக்கும் படி மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பயணம் மேற்கொள்பவர்கள் பயணத்திற்கான காரணம் குறிப்பிடப்பட்ட சான்றிதழுடன்தான் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எனவே, இத்தாலியில் ஏற்கனவே சர்வாதிகாரம் அமலில் உள்ளது என்றே கூறவேண்டும். மிகவும் கொடிய கொரோனா வைரசால் , மக்கள் கட்டி அணைப்பதற்கு, முத்தம் கொடுப்பதற்கு, நண்பர்களுடன் விருந்துகளை நடத்துவதற்கு, மதுபானங்கள், இசை நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைவரும் தங்களின் பங்களிப்பை அளிக்க வேண்டும். நாம் வெற்றி அடையும் நாள் மிகவும் அழகாக இருக்கும் என ட்விட்டரில் பேராசிரியர் ராபர்டோ புரியாணி பதிவிட்டுள்ளார்.

எவ்வளவு விரைவாக செயல்பட வேண்டும் ?

உலக சுகாதார அமைப்பின் தலைமை நிர்வாக குழுவின் முக்கிய ஆலோசகர் புரூஸ் அயல்வார்ட் கூறுகையில், அவசர நிலையில் ஒரு நோய்த் தொற்றை நாடு எதிர்கொள்ளும் விதம் அதன் ஜனநாயக தன்மை அல்லது எதேச்சாதிகாரத் தன்மையைப் பொறுத்தது அல்ல.

ஹுபேயில் ஒரு உண்மை கண்டறியும் ஆய்வை வழிநடத்திய மருத்துவர் அயல்வார்ட், சீனா எதிர்கொண்ட அனுபவத்தின் உண்மைகளை உலக நாடுகள் இன்னும் முழுமையாக கற்றுக்கொள்ளவில்லை என்கிறார்.

விரைவாக செயலாற்றவும், வேகமாக எதிர்வினையாற்றவும் சீனாவிடம் கற்றுக்கொள்ள வேண்டும். சுவாச நோய்த் தொற்றை மிக விரைவாக கண்டறிந்தவுடன், பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடித்து, உடனடியாக தனிமைப்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் உடனடியாக தனிமைப்படுத்தினர். இவ்வாறு விரைவாக செயல்பட வேண்டும் என்று அயல்வார்ட் பிபிசியிடம் கூறினார்.

சீன அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தனர். சூழ்நிலையின் தீவிரத்தை அவர்கள் புரிந்துக்கொண்டனர். மக்கள் அரசாங்கத்தை அச்சுறுத்தவில்லை. மாறாக வைரசுக்குத்தான் அச்சமூட்டினர். வைரசுக்கு எதிராகப் போராட அரசாங்கம் வழிகாட்டியது, அனைத்து மக்களும் கூட்டியக்கமாக சேர்ந்துதான் வைரசுக்கு எதிராகப் போராடினர் என்கிறார் மருத்துவர் அயல்வார்ட்.

சாத்தியமான அனைத்து வழிகளிலும் மக்களின் உடல்நிலையை கண்காணித்தல்

தென் கொரியாவில் மக்கள் யாரும் முடங்கி போகாமல் வைரசை மிகக் கடுமையாக எதிர்த்துப் போராடி வருகின்றனர். சீனா, இத்தாலி, இரானை அடுத்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நான்காவது நாடாக தென் கொரியா விளங்குகிறது.

ஆயிரக்கணக்கான மக்களுக்கு கொரோனா பாதிப்பு சோதனை தென் கொரியாவின் பல நகர வீதிகளிலேயே அந்நாட்டு அரசாங்கம் மேற்கொள்கிறது. கார் ஓட்டுனர்களை சாலைகளில் ஆங்காங்கே பரிசோதிக்கின்றனர். மொபைல் மற்றும் செயற்கைகோள் உதவியுடனும் நோய் தொற்றின் சாத்தியக்கூறுகள் குறித்தும் கண்காணிக்கின்றனர். தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் வைரஸ் அச்சுறுத்தலுக்கு எதிரான இந்த முயற்சியை “போர்” என விவரிக்கிறார்.

தென் கொரியாவில் புதிதாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற எண்ணிக்கையை காட்டிலும் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிற கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

தென் கொரியாவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் வைரசை கட்டுப்படுத்துவதற்கு மட்டுமல்ல, தென் கொரியாவின் பொருளாதாரத்தை பாதுகாக்கவும் செய்யப்படும் முயற்சியாக இருக்கிறது என்று பேராசிரியர் ஹுவாங் சுட்டிக்காட்டுகிறார்.

வுஹானில் தேவைக்கதிகமாக மருத்துவ வசதிகளை ஏற்படுத்தியது போன்ற சில எதேச்சதிகார நடவடிக்கைகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தின. இதைப் பிற நாடுகள் பின்பற்ற விரும்பவில்லை.

சீனா மேற்கொண்ட நடவடிக்கைகளை மற்ற நாடுகளால் பின்பற்ற முடியாது என்பது உண்மைதான். ஆனால், அதே சமயம் சீனா மேற்கொண்ட நோய் எதிர்ப்பு நடவடிக்கைகள் தலைசிறந்த நடவடிக்கைக்கான தர அளவுகோல் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது என்று பேராசிரியர் ஹுவாங் விளக்கம் தருகிறார்.

மற்ற நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் என்னென்ன ?

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நோய் தொற்று பரவாமல் இருக்க ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள தடை விதித்துள்ளார். ஆனால் அமெரிக்காவிற்குள் தகுந்த நடவடிக்கைகளை அதிபர் மேற்கொள்ளவில்லை என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்புப்பை பரிசோதிக்க போதிய பரிசோதனை உபகரணங்கள் இல்லை என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களே குற்றம்சாட்டுகின்றனர்.

சவுதி அரேபியா, குவாடிஃப் மாகாணத்தை முற்றிலும் முடக்கியுள்ளது. குவாடிஃப் மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் தொற்று பரவியது என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜப்பான், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளில் ஏப்ரல் மாதம் வரை கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

யுனெஸ்கோவை பொறுத்தவரை உலகம் முழுவதும் 330 மில்லியன் குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறுகிறது. 60 மில்லியன் பல்கலைக்கழக மாணவர்களும் கல்வி நிலையங்களுக்கு செல்வதில்லை.

இத்தாலிக்கு பயணம் மேற்கொண்டவர்கள் அவர்களே தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று பிரிட்டன் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் பள்ளிகளை முடக்குவது நல்ல யோசனை இல்லை என்று பிரிட்டன் அதிகாரிகள் கூறுகின்றனர்.

”மக்கள் பெரிய அளவில் கூடும் கூட்டங்களை முற்றிலும் தடை செய்வது என்பது பயனுள்ள நடவடிக்கையாக இருந்திருந்தால், அந்த நடவடிக்கையை பிரிட்டன் அரசாங்கம் மேற்கொண்டிருக்கும்”. நாங்கள் அறிவியல் ரீதியாக தொற்றை அணுகுகிறோம் என்று இங்கிலாந்தின் மருத்துவதுறை துணைத் தலைவர் ஜென்னி ஹாரிஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.

உலகம் முழுவதும் பரவும் தொற்றாக இருந்தாலும் அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் தங்கள் சூழ்நிலைக்கும் தேவைக்கும் ஏற்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு நோய் பாதிப்பை கட்டுப்படுத்தலாம் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »