Press "Enter" to skip to content

கொரோனா: மலேசியாவில் 553 பேருக்குத் தொற்று, பொது நடமாட்டத்துக்கு தடையா?

கொரோனா வைரஸ் தொற்று மலேசியாவில் மேலும் தீவிரமடைந்துவருகிறது.

இன்று (மார்ச் 16) ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 125 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் மலேசியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 553ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து நாடு முழுவதும் பொது நடமாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் (lockdown) என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர். தனியார் பள்ளிகள் சில ஏப்ரல் இரண்டாவது வாரம் வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அரசுப் பள்ளிகளின் நிலை தெரியவில்லை.

இந்நிலையில் மார்ச் 16ஆம் தேதி திங்கட்கிழமை இரவு, மலேசிய நேரப்படி 8 மணியளவில் மலேசியப் பிரதமர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு தொடர்பாக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பிரதமர் விவரிப்பார் என்றும், பொது நடமாட்டத்துக்கு தடை விதிப்பது தொடர்பில் அரசு எடுத்துள்ள முடிவை அறிவிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொது நடமாட்டத்துக்கு குறைந்தபட்சம் இரண்டு மாதங்கள் தடை விதிக்க வேண்டும் என சில தரப்பினர் வலியுறுத்தும் நிலையில், இரண்டு வாரங்களுக்கு தடை விதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

எனினும் இத்தகைய தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், பிரதமர் அறிவிப்பதே இறுதி முடிவு என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருட்களை வாங்கிக் குவிக்கும் மலேசிய மக்கள்

இதற்கிடையே, பொது நடமாட்டத்துக்கு தடை விதிப்பது தொடர்பாக பரவிய பல்வேறு தகவல்களை அடுத்து, பொதுமக்கள் கவலையடைந்தனர். இதன் எதிரொலியாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொது மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி குவித்து வருகின்றனர்.

தலைநகர் கோலாலம்பூர், சரவாக் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள பேரங்காடிகளில் திங்கட்கிழமை வழக்கத்தைவிட அதிகமானோர் பொருட்கள் வாங்க குவிந்தனர். பெரும்பாலானவர்கள் வழக்கத்தைவிட அதிக பொருட்களை வாங்கிச் சென்றனர்.

கோலாலம்பூரில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தாங்கள் வழக்கமாக பொருட்கள் வாங்கக் கூடிய கடைகளைத் தொடர்பு கொண்டு அத்தியாவசியமான பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்து கொண்டனர்.

வழக்கமாக ஒரு வாரத்துக்கு மட்டுமே பொருட்கள் வாங்குவோம் என்றும், கொரோனா பீதி காரணமாக இம்முறை ஒரு மாதத்துக்கு தேவையான பொருட்களை வாங்கியுள்ளதாகவும் சிலர் தெரிவித்தனர். இந்தியாவில் இருந்து வரக்கூடிய மளிகைப் பொருட்கள், காய்கறிகளை வாங்கி பழகிவிட்டது என்றும், பொது நடமாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டால் பொருட்கள் வந்து சேராது என்று கூறப்பட்டதால் இப்போதே கூடுதலாக அவற்றை வாங்கி இருப்பதாகவும் சிலர் கூறினர்.

தேவையின்றி பொருட்களை வாங்கிக் குவிக்க வேண்டாம்: பிரதமர் அறிவுறுத்து

இதையடுத்து அனைவரது தேவைகளையும் ஈடுகட்டும் அளவுக்கு உணவுப் பொருட்கள் இருப்பதாகவும், மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை என்றும் மலேசியப் பிரதமர் மொகிதின் யாசின் கூறியுள்ளார்.

“தேவையான, அத்தியாவசியமான பொருட்களை மட்டும் வாங்க வேண்டும். அளவுக்கு அதிகமாகவும், தேவையற்ற பொருட்களையும் வாங்க வேண்டாம். நாட்டில் உள்ள அனைவருக்கும் போதுமான அளவு உணவும் உணவுப்பொருட்களும் இருப்பதையும் அரசு உறுதி செய்யும்.

“பொது நடமாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டிய அவசியம் உள்ளது எனில், அது குறித்து திங்கட்கிழமை இரவு அறிவிக்கப்படும்,” என்று பிரதமர் மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »