Press "Enter" to skip to content

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி பரிசோதனை – கடந்த 24 மணி நேரத்தில் நடந்தவை Corona Latest Live Updates

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து முதல்முறையாக அமெரிக்காவில் பரிசோதனை செய்யப்பட்டது.

வாஷிங்டன் சியாட்டிலில் உள்ள ஒர் ஆய்வகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நான்கு பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

இந்த தடுப்பூசி தீர்வாகுமா என்று உடனே சொல்ல முடியாது. அதற்கு சில காலங்கள் ஆகும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பரிசோதனை தடுப்பூசி செலுத்தப்பட்ட 43 வயதான பெண்மணி ஜெனிஃபர், “இந்த பரிசோதனைக்கு உள்ளாவது என் பேறு,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சரி சர்வதேச அளவில் கொரோனா தொடர்பாக கடந்த 24 மணி நேரத்தில் நடந்த நிகழ்வுகளைப் பார்ப்போம்

மரணங்கள்

  • உலக சுகாதார நிறுவனத்தால் திங்கட்கிழமை தொகுக்கப்பட்ட தகவல்களின்படி இதுவரை கொரோனாவால் 6606 பேர் பலியாகி உள்ளனர். 167,511 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.
  • 151 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது.
  • கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஐரோப்பாவில் உள்ள நாடுகள் பல முயற்சிகளை எடுத்துவரும் நிலையில், சமூக ரீதியிலான தொடர்புகளைக் கட்டுப்படுத்தும் விதமாக ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் சில புதிய நடவடிக்கைகளை அமல்படுத்துள்ளன.

சர்வதேச நிலை

  • ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் கொரோனா பரவலுக்கு எதிராக அவசர நிலையை அறிவித்து, அங்கு அலுவலகங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை அரசின் உத்தரவுப்படி கட்டாயமாக மூடப்பட்டுள்ளது போல பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங்கும் அவ்வாறான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
  • ”சுகாதார ரீதியிலான ஒரு போரில் தற்போது நாம் உள்ளோம்” என்று மக்ரோங் தெரிவித்துள்ளார்.ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரான்ஸின் எல்லைகள் வரும் செவ்வாய்க்கிழமை முதல் மூடப்படும் என்றும் இமானுவேல் மக்ரோங் மேலும் குறிப்பிட்டார்.
  • ஜெர்மனியில் மளிகைக்கடைகள் அல்லாத பிற கடைகள் மற்றும் நிறுவனங்கள் மூடப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
  • ஜெர்மனியில் மத ரீதியிலான நிகழ்வுகளுக்குத் தற்காலிகமாகத் தடை விதித்துள்ள அந்நாட்டின் சான்சிலர் ஏங்கெலா மெர்கல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலா பயணங்களை ரத்து செய்யுமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
  • ஜெர்மனி முழுவதிலும் பள்ளிகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • இதனிடையே, பிரிட்டனில் கட்டாய தடைகள் எதனையும் பிரதமர் போரீஸ் ஜான்சன் அறிவிக்காத போதும், மதுபான கூடங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று மக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தேவையற்ற பயணங்களை மக்கள் தவிர்ப்பது நல்லது என்றும் அவர் கூறியுள்ளார்.

கண்களைக் கட்டிக்கொண்டு நீங்கள் தீயினை அணைக்க முடியாது

  • முன்னதாக கொரோனா தொற்று பரவல் குறித்து கவலை தெரிவித்த உலக சுகாதார நிறுவனத்தின் தலைவரான டெட்ரோஸ் அதனோம் கிப்ரயெசூஸ், உலக அளவில் பல அரசுகளும் இந்த தொற்றை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.
  • மேலும் அரசுகள் கொரோனா தொற்று சோதனை நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்த வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
  • ”கண்களைக் கட்டிக்கொண்டு நீங்கள் தீயினை அணைக்க முடியாது. எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்று முழுவதுமாக அறியாமல் இந்த தொற்று பரவலை நாம் முடிவுக்குக் கொண்டு வர முடியாது” என்று ஜெனீவாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார். ”அனைத்து நாடுகளுக்கும் ஒரு செய்தியைத்தான் நாங்கள் சொல்கிறோம். சோதனை செய்யுங்கள்! சோதனை செய்யுங்கள்! என்பதுதான் அது” என்றார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »