Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) சுனாமி போன்ற அலையை ஏற்படுத்தும்: மலேசிய சுகாதார அமைச்சு எச்சரிக்கை

மலேசியாவில் கொரோனா வைரஸ், சுனாமி போன்ற அலையை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. எனவே பொதுமக்கள் அரசாங்கம் விதித்துள்ள பொது நடமாட்ட கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் எனவும் அந்த அமைச்சு அறிவுறுத்தி உள்ளது.

மலேசியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை இன்றும் அதிகரித்துள்ளது. இன்று (மார்ச் 18) ஒரே நாளில் மேலும் 117 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 790ஆக ஏற்றம் கண்டுள்ளது.

இதே வேளை, 60 பேர் மருத்துவ சிகிச்சைக்குப் பின் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர் என்று மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே பொது நடமாட்டத்துக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது நடவடிக்கை பாயும் என மலேசிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இத்தகைய குற்றங்களை புரிவோர்க்கு ஆயிரம் மலேசிய ரிங்கிட் அபராதம் அல்லது ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும் என சுகாதார அமைச்சர் டாக்டர் அதம் பாபா தெரிவித்துள்ளார்.

சுனாமி போன்ற மூன்றாம் அலை உருவாக வாய்ப்பு

மலேசியர்கள் அடுத்த இரு வாரங்களுக்கு அரசாங்கம் அறிவித்துள்ள பொது நடமாட்ட கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என சுகாதார அமைச்சின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அறிவுறுத்தி உள்ளார்.

இல்லையெனில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் என்றும், கட்டொழுங்கைப் புறக்கணித்தால் சுனாமி போன்ற மூன்றாம் அலையை கொரோனா ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

“அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், அவற்றை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். இந்தக் கட்டுப்பாடுகளை மக்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். அனைவரும் கூடுமானவரை வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

“நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான சிறிய வாய்ப்பும் சக்தியும் மலேசியாவுக்கு கிடைத்துள்ளது. ஒவ்வொரு தனி நபரும் தனது சுய நலனுக்காகவும், குடும்பத்தின் நலன்களுக்காகவும் செயல்பட வேண்டியுள்ளது. எனவே நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் பொறுப்பேற்று சுகாதார அமைச்சுக்கு உங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும்,” என்று நூர் ஹிஷாம் வலியுறுத்தி உள்ளார்.

வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்திய பிரதமர்

பொது நடமாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மலேசியர்கள் தங்களையும் குடும்பத்தாரையும் பாதுகாத்துக் கொள்ள வீட்டிலேயே இருக்குமாறு பிரதமர் மொகிதின் யாசின் கேட்டுக் கொண்டுள்ளார்.

மக்கள் பொது இடங்களில் அதிகளவில் நடமாடுவதைக் குறைக்க வேண்டும் எனும் நோக்கத்துடனேயே அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை விதித்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கட்டுப்பாடு விதிக்கப்பட்ட இரண்டு வார காலத்துக்கு நீங்களும் உங்கள் குழந்தைகளும் வீட்டிலேயே அதிக பொழுதைச் செலவிட வேண்டும். எங்கும் வெளியே செல்லாதீர்கள். இதன் மூலம் கொரோனா வைரஸ் பரவலைத் தவிர்க்கவும், தடுக்கவும் அனைவரும் தங்கள் பங்களிப்பைத் தர இயலும்,” என்று பிரதமர் மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.

அரசு நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு

இந்நிலையில் பொது நடமாட்டத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை பெரும்பாலான மலேசியர்கள் வரவேற்றிருப்பதாக மலேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கட்டுப்பாடுகள் தொடர்பாக மலேசிய சுகாதார அமைச்சின் ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் வெளியானது. மேலும் அந்த அமைச்சின் சார்பில் இந்நடவடிக்கை தொடர்பாக ஒரு வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது.

இதில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இவர்களில் 97 விழுக்காட்டினர் அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் பொது நடமாட்டம் என்றால் என்ன என்பது குறித்தும் பலர் விவாதித்துள்ளனர்.

மலேசிய அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் திருப்திகரமாக இருப்பதாகவும், மலேசியர்கள் இந்தக் கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். சிலர் மக்கள் பொது இடங்களில், குறிப்பாக உணவகங்களில் தேவையின்றி அதிகளவில் கூடுவதை குறைகூறியுள்ளனர்.

முகக்கவசங்கள், கிருமிநாசினிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக குறிப்பிட்டுள்ள ஒருவர், அரசு இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தார்.

பயணத் தடையை நீக்கிய மலேசிய காவல்துறை

மலேசியாவில் மாநிலங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெறுவதாக காவல்துறை அறிவித்துள்ளது.

முன்னதாக மார்ச் 17ஆம் தேதி இரவு முதல் மலேசியாவில் மக்கள் தாங்கள் வசிக்கும் மாநிலத்தில் இருந்து வெளியே தடை விதிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

சொந்த ஊருக்கு திரும்புகிறவர்கள், வேறு காரணங்களுக்காக பிற மாநிலங்களுக்குச் செல்பவர்கள் காவல்துறையிடம் தகவல் தெரிவித்து அனுமதி பெற வேண்டும் எனக் கூறப்பட்டது. இதையடுத்து நூற்றுக்கணக்கானோர் இரவு நேரத்திலும் காவல் நிலையங்களில் குவிந்தனர்.

அரசாங்கம் இரு வாரங்களுக்கு அறிவித்துள்ள பொது நடமாட்ட கட்டுப்பாடுகளை முழுமையாக அமல்படுத்த தயாராக இருப்பதாக காவல்துறைத் தலைவர் அப்துல் ஹமீத் படோர் தெரிவித்தார்.

நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை மீறும் எந்தவொரு நபரும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படலாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்கும் வகையில் இந்தப் பயணத் தடையைத் திரும்பப் பெறுவதாக காவல்துறை தற்போது அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பயணத்துக்கான அனுமதியைப் பெற மக்கள் குவிந்ததால் தடை அகற்றப்பட்டுள்ளது என்று அப்துல் ஹமீத் படோர் தெரிவித்தார்.

தற்போது தடையை நீக்கியுள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு புதிய முடிவு அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »