Press "Enter" to skip to content

கொரோனா: மலேசியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது; ராணுவத்தை களமிறக்கும் அரசு

மலேசிய அரசின் பொது நடமாட்ட கட்டுப்பாடு நடவடிக்கைக்கு பொது மக்கள் சரிவர ஒத்துழைக்கவில்லை. இதையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்தைக் களமிறக்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது. இத்தகவலை பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்று, மார்ச் 20, வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி அந்நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,030ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆகவும் அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் புதிதாக 130 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொது நடமாட்ட கட்டுப்பாடு விதிக்கப்பட்ட போதும், மலேசியர்கள் பலர் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்கவில்லை. சுமார் 40 விழுக்காட்டினர் அரசாங்கத்தின் அறிவுறுத்தலை பொருட்படுத்தாமல் இருந்ததை அடுத்து, நிலைமையைக் கண்காணிக்கவும், கட்டுக்குள் கொண்டு வரவும் ராணுவத்தின் உதவி கோரப்படலாம் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ராணுவத்தைக் களமிறக்குவது என முடிவு செய்யப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார். இதன் மூலம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டார்.

வரும் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் மலேசிய முழுவதும் அந்நாட்டு ராணுவத்தினர் பொது நடமாட்ட கட்டுப்பாடு சரியாக அமல்படுத்தப் படுவதை உறுதி செய்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட இருப்பதாக வெளியான தகவல் வெறும் வதந்தி என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்ட அமைச்சர் இஸ்மாயில் சப்ரி, ராணுவத்தின் உதவி கோரப்படுவது ஊரடங்கு உத்தரவை செயல்படுத்துவதற்காக அல்ல என்று தெளிவுபடுத்தினார்.

மூன்றாவது நபர் உயிரிழப்பு

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூன்றாவது நபர் உயிரிழந்துள்ளார். அவர் 58 வயதான மலேசிய குடிமகன் என்றும், அவர் அண்மையில் கோலாலம்பூரில் நடைபெற்ற சமயக் கூட்டத்தில் பங்கேற்றவர் என்றும் சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

அவர் மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக அடையாளம் காணப்பட்ட 152ஆவது நபர் என்று குறிப்பிட்ட நூர் ஹிஷாம், அவரது இறப்பை தேசிய பேரிடர் முன்னேற்பாடு மையம் உறுதி செய்துள்ளது என்றும் கூறினார்.

இதற்கிடையே மலேசியாவில் சுகாதார ஊழியர்கள் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இவர்களில் 12 பேர் சுகாதார அமைச்சின் ஊழியர்கள் என்றும், மூன்று பேர் தனியார் சுகாதார ஊழியர்கள் என்றும் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்ததாக மலேசிய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

பொது மக்களின் நலன் கருதியே பொது நடமாட்ட கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த அவர், அரசாங்கத்தின் இந்த உத்தரவை அனைவரும் மதித்துச் செயல்பட வேண்டும் என்றார்.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக பொது மக்கள் சுகாதார அமைச்சிடம் உண்மையை மறைக்கக் கூடாது என்றும், உரிய தகவல்களை அளிக்க வேண்டும் என்றும் நூர் ஹிஷாம் அப்துல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.

ஓய்வுபெற்ற மருத்துவர்களும் அழைக்கப்படலாம்

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தீவிரமடையும் பட்சத்தில், ஓய்வு பெற்ற மருத்துவர்களின் சேவையை மீண்டும் பயன்படுத்திக் கொள்ள மலேசிய அரசு விரும்புவதாக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அதம் பாபா தெரிவித்துள்ளார்.

எனினும் அத்தகையதொரு தேவை ஏற்பட்டால் மட்டுமே இது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலை சமாளிக்கவும், இதர விஷயங்களை எதிர்கொள்ளவும் மலேசியாவில் போதுமான மருத்துவர்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையே, மலேசியாவில் உள்ள 44 மருத்துவமனைகளில் ஆயிரம் பயிற்சி மருத்துவர்களை பணியில் சேர்க்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும், ஏற்கனவே 830 தாதியர்களை அரசு பணியில் சேர்த்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கோவிட்-19க்கான தடுப்பூசியை உருவாக்கும் திறன் கொண்ட நாடுகளில் மலேசியாவும் இடம்பெற வாய்ப்புள்ளதாக அதம் பாபா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் செல்லலாம்; மார்ச் 31ஆம் வரை திரும்ப இயலாது

மலேசியர்கள் சிங்கப்பூரில் வேலை பார்க்கும் பொருட்டு அங்கு செல்லலாம் என மலேசிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனினும் அவ்வாறு செல்பவர்கள் மார்ச் 31ஆம் தேதிக்கு முன்பு நாடு திரும்ப அனுமதியில்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

மலேசியாவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் தினந்தோறும் பணிநிமித்தம் சிங்கப்பூர் சென்று திரும்புகிறார்கள். இந்நிலையில் பொது நடமாட்ட கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை அடுத்து, சிங்கப்பூருக்கு யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சிங்கப்பூரில் பல்வேறு பணிகள் முடங்க நேரிடும் என அந்நாட்டு அரசு கவலையில் உள்ளது.

வெளிநாடுகளில் உள்ள மலேசியர்கள் நாடு திரும்புவதில் தடையில்லை என்றாலும், விமான நிலைய பரிசோதனைக்குப் பிறகு 14 நாட்கள் தனிமைப் படுத்தப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் உள்ள வெளிநாட்டினர் நாட்டை விட்டு வெளியேற அனுமதியுண்டு என்றாலும் பொது நடமாட்ட கட்டுப்பாடு இருக்கும் வரை மலேசியா திரும்ப இயலாது.

மலேசியாவில் தவிக்கும் இந்திய மாணவர்கள்

மலேசியாவில் மருத்துவம் உட்பட பல்வேறு துறைகளில் பட்டப்படிப்பு படித்துவரும் இந்திய மாணவர்கள் 175 பேர் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

திடீரென மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு விமானங்கள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டதால், தாங்கள் செய்வதறியாது திகைத்து நிற்பதாக அம்மாணவர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

மாணவர்கள் சார்பாக தொடர்பு கொண்டு பேசிய மாணவி வஃபா (Wafa), தாயகம் திரும்ப முடியாததால் மாணவர்கள் பலர் கடும் மன உளைச்சலுக்கும் பீதிக்கும் ஆளாகி உள்ளதாகக் குறிப்பிட்டார்.

மாணவர்கள் வெவ்வேறு இடங்களில் தங்கியிருப்பதாகவும், பலர் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் தவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

“175க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியா திரும்ப தயாராக உள்ளனர். மாணவர்களைப் பற்றிய விவரங்களை அளிக்க தயார். கடந்த 17ஆம் தேதியே நாங்கள் அனைவரும் ஊர் திரும்ப திட்டமிட்டிருந்தோம். விமானங்கள் ரத்தானதால் முடங்க வேண்டியதாகிவிட்டது.

“இந்திய அரசு எப்படியேனும் ஒரு சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்தால், இந்தியா திரும்ப தயார் நிலையில் இருக்கிறோம். இந்திய பிரதமர் எங்களின் குரலைக் கேட்டு உதவ வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்,” என்று மாணவி வஃபா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »