Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): உலகம் முழுவதும் 3 லட்சம் பேர் பாதிப்பு; ஒரே நாளில் 1344 பேர் பலி – Coronavirus Live World Update

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை 3,07,280 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனாவில், 80 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று ஏற்பட்ட சீனாவில் இதுவரை 3,261 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடான இத்தாலியில் தினந்தோறும் புதிய உச்சத்தை அடைந்து வரும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 4,825 ஆகியுள்ளது என்கிறது ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிவரம்.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட சமீபத்திய சூழ்நிலை அறிக்கையில், முந்தைய 24 மணி நேரத்தில் உலகில் 32 ஆயிரம் பேருக்கு இந்த நோய் இருப்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், 24 மணி நேரத்தில் 1344 பேர் இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ஐரோப்பிய நேரப்படி மார்ச் 20ம் தேதி நள்ளிரவு இந்த அறிக்கை வெளியானது.

இந்த நோய்த் தொற்று சீனாவில் தொடங்கிய நாளில் இருந்து ஒரே நாளில் இவ்வளவு பேர் இறந்ததில்லை என்பதால் இந்தப் புள்ளிவிவரங்கள் அச்சத்தில் உறையவைப்பனவாக இருக்கின்றன.

இந்நிலையில், இத்தாலியை தொடர்ந்து மற்றொரு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 32 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம், ஸ்பெயினில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,326ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து நேற்று (சனிக்கிழமை) இரவு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சஞ்செஸ், “இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் நாட்களை நாம் எதிர்கொண்டுள்ளோம்” என்று எச்சரித்தார்.

ஸ்பெயினில் அமல்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலையால் நாடு முழுவதும் சுமார் 46 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, அத்தியாவசிய வேலைகள், உணவுப்பொருட்கள் வாங்குவதற்கு மற்றும் மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டும்.

மற்ற உலக நாடுகளின் நிலை என்ன?

கொரோனா வைரஸ் பரவலால் பெரிதும் பாதிக்கப்பட்ட சீனா, மெல்ல மெல்ல அதன் பாதிப்பிலிருந்து மீண்டு வருவதை போன்ற சூழ்நிலை தென்படும் நிலையில், கொரோனா வைரஸின் தாக்கம் மற்ற உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இதையொட்டி, உள்ளூரில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப, அரசுகள் அறிவித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு மக்கள் கட்டுப்பட்டு செயல்பட வேண்டுமென்று மக்களை உலகத் தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பிரிட்டனில் கொரோனா வைரஸின் அதிவேக பரவலை பொது மக்கள் கட்டுப்படுத்தாவிட்டால் நிலைமை மோசமாகி விடும் என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார். மேலும், கொரோனா வைரஸுக்கு எதிரான தேசிய அளவிலான கூட்டு தடுப்பு நடவடிக்கையில் மக்கள் பங்கேற்க வேண்டுமென்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. சமூக விலகல்தான் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் ஒரே வழி என்று கூறப்பட்டு வரும் நிலையில், அதை மீறி செயல்படும் மக்களை பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர் “அபாயகரமானவர்கள்” மற்றும் “பொறுப்பற்றவர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸால் இதுவரை பிரான்சில் 12,500 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 562 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஆஸ்திரேலியாவில் இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்; ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இதே நிலை தொடர்ந்தால் ஆஸ்திரேலியாவில் விரைவில் நாடு தழுவிய முடக்க நிலை அறிவிக்கப்படலாம் என்று அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸுக்கு எதிராக போராடுவதற்கு இந்தியாவுக்கு உள்ள திறனை பரிசோதிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோதி அறிவித்திருந்த 14 மணி நேர மக்கள் ஊரடங்கு நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 341 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »