Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும்?

ஜேம்ஸ் கேலகர்
அறிவியல் செய்தியாளர்

உலகம் முடங்கிக் கொண்டிருக்கிறது. தினசரி பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த பகுதிகள் எல்லாம், இப்போது பேய்கள் நடமாடும் இடங்களைப் போல மாறிவிட்டன.

மக்களின் இயல்பு வாழ்க்கையில் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாலும், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டதாலும், பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டது முதல் பயணக் கட்டுப்பாடுகள் வரையிலான நடவடிக்கைகளாலும், அதிக எண்ணிக்கையில் பொது இடங்களில் கூடுவதற்குத் தடை விதித்ததாலும் இந்த சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில், இந்த நோய்க்கு எதிராக உலக நாடுகள் போராடி வருகின்றன. ஆனால், இது எப்போது முடிவுக்கு வரும், நமது இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும்?

பிரிட்டனில் இந்தத் தொற்றுநோய் பரவுதலுக்கு எதிரான “நடவடிக்கைகள்” அடுத்த 12 வாரங்களில் முடிவுக்கு வந்துவிடும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் இருந்து“கொரோனா வைரஸை பொட்டலம் கட்டி அனுப்பிவிடலாம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த மூன்று மாதங்களில், இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்தாலும், எப்போது முழுமையாக சரியாகும்?

இதன் தாக்கம் முழுமையாக மறைவதற்கு நீண்டகாலம் ஆகலாம் – ஆண்டு கணக்கில்கூட ஆகலாம்.

சமூகத்தில் பெரும் பகுதியை முடக்கி வைக்கும் இப்போதைய அணுகுமுறையை நீண்ட காலத்துக்குத் தொடர முடியாது என்பது தெளிவாகத் தெரிந்த விஷயம். சமூக மற்றும் பொருளாதாரப் பாதிப்புகள் பேரழிவு நிலையை ஏற்படுத்தும்.

எல்லா நாடுகளுக்கும் இப்போது இந்தப் பாதிப்பில் இருந்து “வெளியேறும் நுட்பம்” தான் தேவைப்படுகிறது. கட்டுப்பாடுகளை நீக்கி, இயல்பு வாழ்க்கையை மீட்பதாக அந்த அணுகுமுறை அமைய வேண்டும் என்பது நாடுகளின் தேவையாக உள்ளது.

ஆனால் இந்த கொரோனா வைரஸ் மறைந்துவிடப் போவதில்லை.

வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்கிவிட்டால், பாதிப்பு எண்ணிக்கைகள் தடுக்க முடியாத அளவில் உயரக்கூடும்.

“வெளியேறுவதற்கான வழிமுறை எது என்பதிலும், இதில் இருந்து எப்படி வெளியேறுவது என்பதும் எங்களுக்கு பெரிய பிரச்னையாக இருக்கிறது” என்று எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் தொற்று நோய்கள் துறை நிபுணர் பேராசிரியர் மார்க் உல்ஹவுஸ் கூறியுள்ளார்.

“இது பிரிட்டனில் மட்டும் என்றில்லை. எந்த நாட்டிலும் இதில் இருந்து விடுபடுவதற்கான நுட்பம் இல்லை.”

இது பெரிய அளவிலான அறிவியல்பூர்வமான, சமூக ரீதியிலான சவாலாக உள்ளது.

இந்தச் சிக்கலில் இருந்து விடுபடுவதற்கு 3 வழிமுறைகள் உள்ளன.

  • தடுப்பூசி போடுதல்
  • நிறைய பேருக்கு தொற்றும் தன்மை செயல்பாடு மூலம் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்தல்
  • அல்லது நிரந்தரமாக சமூக பழக்கவழக்கத்தில் மாற்றம் ஏற்படுத்துதல்

இதில் ஒவ்வொரு நடைமுறையும், இந்த வைரஸ் பரவும் திறனைக் குறைப்பதாக இருக்கும்.

தடுப்பூசிகள் – நடைமுறைக்கு வருவதற்குக் குறைந்தது 12 – 18 மாதங்கள் ஆகும்

ஒரு தடுப்பூசி என்பது உங்களுக்கு நோய் எதிர்ப்பாற்றலை வழங்குவதாக, அந்தக் கிருமியின் தாக்கத்துக்கு ஆளானால் நோயுறாத வகையில் பாதுகாப்பு தரும் வகையில் இருக்க வேண்டும்.

மக்கள் தொகையில் 60 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டால், வைரஸ்கள் தொற்றுநோய்களை உருவாக்காது.

புதிய மருந்துகளை முதலில் விலங்குகளிடம் தான் பரிசோதிக்க வேண்டும் என்ற விதியில் இருந்து ஆராய்ச்சியாளர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டதை அடுத்து, இந்த வாரத்தில் அமெரிக்காவில், பரிசோதனைக்குரிய தடுப்பூசி மருந்து முதலாவது மனிதருக்கு போடப்பட்டுள்ளது.

தடுப்பூசி தயாரிப்பதற்கான முயற்சிகள் முன் எப்போதும் இல்லாத வேகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், அது வெற்றிகரமாக அமையும் என்பதற்கான உத்தரவாதம் கிடையாது. எல்லோருக்கும் தடுப்பூசி போட வேண்டிய அவசியம் வருமா என்பதும் தெரியவில்லை.

இப்போதைக்கு எல்லாமே திட்டமிட்டபடி நடந்தாலும், தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதற்கு 12 – 18 மாதங்கள் வரை ஆகலாம் என்று ஊகிக்கப்படுகிறது. அமைதியான சூழ்நிலையிலும், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சமூகக் கட்டுப்பாடுகளை மக்கள் எதிர்கொண்டிருக்கும் நிலையில், இது மிக நீண்ட காத்திருப்புக் காலமாக இருக்கும்.

“தடுப்பூசிக்காக காத்திருக்கும் காலத்தை `வியூகம்’ என்ற பெயரில் கௌரவமாக சொல்லிக் கொள்ளலாம். அது ஒரு வியூகம் கிடையாது” என்று பிபிசியிடம் பேராசிரியல் உல்ஹவுஸ் கூறினார்.

இயற்கை நோய் எதிர்ப்புத் திறன் – குறைந்தது 2 ஆண்டுகளாகும்

மருத்துவமனைகளில் கூட்டம் அளவுக்கு அதிகமாக வந்துவிடாமல் தடுப்பதற்கு, முடிந்த வரையில் பாதிப்பு அளவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது பிரிட்டனின் குறுகிய கால திட்டமாக உள்ளது. தீவிர சிகிச்சைக்கான படுக்கை வசதிகள் போதிய அளவு இல்லாமல் போனால், மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

நோய்த் தாக்குதல் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டால், கட்டுப்பாடுகளை சில காலத்திற்கு தளர்த்த வசதியாக இருக்கும். மீண்டும் நோய்த் தாக்குதல் பரவத் தொடங்கி, கட்டுப்பாடுகளுக்கான அவசியம் எழும் வரையில் தளர்த்தி வைக்கலாம்.

இது நிச்சயமற்றதாக இருக்கும்போது, “விஷயங்களுக்கு காலக்கெடு விதிப்பது சாத்தியமற்றது” என்று பிரிட்டனின் முதன்மை அறிவியல் ஆலோசகர் சர் பாட்ரிக் வால்லன்ஸ் கூறியுள்ளார்.

உள்நோக்கம் இல்லாமல் இதைச் செய்தால், நிறைய பேருக்கு தொற்று ஏற்படும்போது மிக அதிகமான நபர்களுக்கு தடுப்பூசி போடும் நிலை ஏற்படலாம்.

ஆனால் அது பாரத்தை அதிகப்படுத்துவதாக இருக்கும் என்று லண்டன் இம்பீரியல் கல்லூரியின் பேராசிரியர் நீல் பெர்குசன் கூறியுள்ளார். “குறிப்பிட்ட அளவில் இந்தத் தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்துவது பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். நாட்டில் மிக சிறிய அளவில்தான் பாதிப்பு ஏற்படும் என்று நம்புவோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இறுதியாக நாம் இதை இரண்டுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குத் தொடர்ந்தால், அந்த சமயத்தில் நாட்டில் போதிய அளவிற்கான மக்களுக்கு தொற்று ஏற்பட்டு சமுதாயப் பாதுகாப்பை ஏற்படுத்துவதாக இருக்கும்.”

ஆனால் இந்த நோய் எதிர்ப்பாற்றல் நீடித்திருக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. சாதாரண சளி அறிகுறிகளை ஏற்படுத்தும் மற்ற கொரோனா வைரஸ்கள், நோய் எதிர்ப்பாற்றலை பலவீனப்படுத்தும். அதனால் தங்கள் வாழ்நாளில் அதே வைரஸ் பாதிப்பு மக்களுக்கு பல சமயங்களில் ஏற்படக் கூடும்.

மாற்றுவழிகள் – தெளிவான நிறைவுப்புள்ளி கிடையாது

“நோய் பரவல் அளவைக் குறைவாக வைத்திருப்பதற்கு, நம்முடைய வாழ்க்கை பழக்கவழக்கத்தில் நிரந்தரமான மாற்றங்களைச் செய்வது மூன்றாவது தேர்வுக்கான வாய்ப்பாக இருக்கும்” என்று பேராசிரியர் உல்ஹவுஸ் கூறுகிறார்.

ஏற்கெனவே அமலில் இருக்கும் சில நடைமுறைகளை, அப்படியே பராமரிப்பதும் இதில் அடங்கும். அல்லது எந்த தொற்று பரவலையும் தடுப்பதற்கு, தீவிர பரிசோதனை மற்றும் நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் நடைமுறைகளை அறிமுகம் செய்யலாம்.

“நாங்கள் ரொம்ப முன்கூட்டியே கண்டறிந்து, முதன்முறையாக அவர் தொடர்பு கொண்டவர்களை பின்தொடர்ந்து கவனித்தோம். அது சரிப்பட்டு வரவில்லை” என்றும் பேராசிரியர் உல்ஹவுஸ் தெரிவித்தார்.

கோவிட் – 19க்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்க ரசாயன மருந்துகள் உருவாக்குவது, மற்ற நடைமுறைகளுக்கும் உதவிகரமாக இருக்கும்.

மக்களுக்கு அறிகுறிகள் தென்பட தொடங்கியதும், மற்றவர்களுக்கு அது பரவிடாமல் தடுப்பதற்கு “பரவுதல் கட்டுப்பாடு” எனப்படும் நடைமுறையின்படி இந்த மருந்துகளைப் பயன்படுத்தலாம்.

அல்லது இந்த நோய் உயிர்ப்பலி வாங்குவதைக் குறைக்கவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் பளுவைக் குறைக்கவும் நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை தரலாம். முடக்க நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கு முன்னதாக, கூடுதல் நோயாளிகளை கவனிக்க நாடுகளுக்கு இது உதவிகரமாக இருக்கும்.

தீவிர சிகிச்சை படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, நிறைய பேருக்கு சிகிச்சை அளிக்கும் வசதியை அளித்து, இதே பயனைத் தரும்.

இது பற்றி பிரிட்டனின் முதன்மை மருத்துவ ஆலோசகர் பேராசிரியர் கிறிஸ் விட்டியிடம் நான் கேட்டேன்.

“நீண்டகால நோக்கில், தடுப்பூசி என்பது ஒரு வழிமுறையாக இருக்கும். அது கூடிய சீக்கிரத்தில் நடக்கும் என்று நாங்கள் அனைவரும் நம்புகிறோம்” என்று அவர் கூறினார்.

“உலக அளவில் இதற்கான தீர்வுகளை அறிவியல் உருவாக்கித் தரும்” என்றும் குறிப்பி்ட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »