Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): மலேசியாவில் ஒரே வாரத்தில் மும்மடங்கான கொரோனா பாதிப்பு – நடப்பது என்ன? – விரிவான தகவல்கள்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மலேசியாவில் இன்று ஒரே நாளில் நான்கு பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் பலியானவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 19ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று ஒரே நாளில் 172 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வைரஸ் தொற்றியோர் எண்ணிக்கை 1,796ஆக (மார்ச் 25 மதியம் வரையிலான நிலவரம்) அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், மலேசியாவில் பொது நடமாட்டத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு ஏப்ரல் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகப் பிரதமர் மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார். இதைத் தவிர, மக்களைக் காக்க தமக்கு வேறு வழி தெரியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

ஏப்ரல் 14ஆம் தேதி வரை இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், மலேசியாவிலும் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதையடுத்து இன்று கோலாலம்பூரில் உள்ள முக்கிய பகுதிகள் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. மேலும் வாகனப் போக்குவரத்தும் மிகக் குறைவாகவே இருந்தது.

இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர்களின் சந்திப்பின் போது மொத்த நோயாளிகளில் 45 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருப்பதாகவும், அவர்களில் 34 பேருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

இன்று உயிரிழந்தவர்களில் மூன்று பேர் வயதில் மூத்த ஆடவர்கள் என்றும், அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முன்பே உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும், நான்காவதாக உயிரிழந்த பெண்மணிக்கு 68 வயது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“ஆணையை மீறினால் லாக்கப்பில் சில இரவுகளைக் கழிக்க வேண்டும்”

இதற்கிடையே, பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைய மீறுபவர்கள் கைதாவதைத் தவிர்க்க இயலாது என மலேசியக் காவல்படைத் தலைவர் அப்துல் ஹமீத் படோர் தெரிவித்துள்ளார். இந்த காரணத்துக்காக இதுவரை 110 பேர் கைதாகி உள்ளதாக அவர் கூறினார்.

மேலும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே செல்வோர், தகுந்த காரணங்கள் இன்றி வலம் வருவோர் கைது செய்யப்படுவர் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

“இதுவரை 110 பேரை கைது செய்துள்ளோம். அவர்கள் பொது நடமாட்டக் கட்டுப்பாடு தொடர்பான ஆணையை மீறியது மட்டுமல்லாமல், அந்த ஆணையை அமல்படுத்தும் அதிகாரிகளையும் ஏசியுள்ளனர். தங்களை எந்த நோயும் அண்டாது என்று கருதிக் கொண்டு கடுமையாக நடந்து கொள்பவர்கள் கைதாவது குறித்து ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

“அத்தகையவர்கள் போலிஸ் லாக்கப்பில் சில இரவுகளைக் கழிக்க தயாராக வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையையும் மக்களின் பதற்றத்தையும் பயன்படுத்தி லாபம் சம்பாதிக்க நினைக்கும் வணிகர்களுக்கும் காவல்துறை எச்சரிக்கை விடுக்கிறது.

“இத்தகைய புகார்களின் பேரில் 25 பேர் கைதாகி உள்ளனர். அவர்களில் 11 பேர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்,” என்று ஐஜிபி அப்துல் ஹமீத் படோர் தெரிவித்தார்.

அரசாங்கம் பிறப்பித்துள்ள பொது நடமாட்ட கட்டுப்பாடு ஆணையை அமல்படுத்துவதில் நாடு முழுவதும் காவல்துறை, முப்படை வீரர்கள், அதிகாரிகள் என மொத்தம் 42 ஆயிரம் பேர் சாலைத் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எனக்கு வேறு வழி தெரியவில்லை என்கிறார் மலேசியப் பிரதமர்

மலேசியாவில் பொது நடமாட்டக் கட்டுப்பாடு எதிர்வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு மன்றமும், சுகாதார அமைச்சும் நிலைமையின் தீவிரம் குறித்து தமக்கு விவரித்ததாகவும், இதையடுத்து கடினமான முடிவை எடுக்க வேண்டியிருந்ததாகவும் மலேசிய பிரதமர் மொகிதின் யாசின் விளக்கம் அளித்துள்ளார்.

“தற்போதைய நிலைமை சில காலம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகே புதிதாக நோய்த் தொற்றியோர் எண்ணிக்கை குறைவதை நாம் பார்க்க முடியும். எனவே பொது நடமாட்டக் கட்டுப்பாடு தொடர்பான ஆணையை நீட்டிக்க வேண்டும் என மலேசிய அரசு கருதுகிறது.

“நாட்டு மக்கள் இதற்கு தங்களை முன்கூட்டியே தயார்படுத்திக் கொள்ள ஏதுவாக இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். அன்றாட நடவடிக்கைகள் மூலமாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு மக்கள் ஆளாவதை தடுக்க வகுக்கப்பட்டுள்ள வியூகம் வெற்றிபெற இந்த நடவடிக்கை அவசியம்,” என்றார் பிரதமர் மொகிதின் யாசின்.

கடந்த வாரம் மட்டுமே 673 பேர் புதிதாக நோய்த் தொற்றுக்கு ஆளாகி இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், சற்று அதிகமான காலத்துக்கு பொதுமக்கள் தங்கள் வீட்டிற்குள்ளேயே இருப்பதற்கு மனதளவிலும் உடலளவிலும் தயாராக வேண்டும் என்றார்.

பொது நடமாட்டக் கட்டுப்பாடு நீட்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பொருட்களை வாங்கி குவிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், அனைவருக்கும் தேவையான உணவுப் பொருட்கள் கிடைக்கும் என உறுதியளிக்க முடியும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

“அரசின் இந்த உத்தரவைப் பொதுமக்கள் சுமையாகக் கருதுவீர்கள் என்பது தெரியும். எனினும் எனக்கு வேறு வழி தெரியவில்லை. உங்களின் பாதுகாப்புக்காகவே பொது நடமாட்டக் கட்டுப்பாடு நீட்டிக்கப்பட்டுள்ளது,” என்று பிரதமர் மொகிதின் யாசின் மேலும் தெரிவித்தார்.

ஒரு வாரத்தில் மும்மடங்கானது நோயாளிகளின் எண்ணிக்கை

மலேசியாவில் கடந்த ஒரே வாரத்தில் கொரோனா வைரஸ் தொற்றியோர் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு 673 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த எண்ணிக்கை தற்போது 1,796ஆக அதிகரித்துள்ளது.

எண்ணிக்கை கிட்டத்தட்ட மும்மடங்கு அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் மொகிதின் யாசின், அரசாங்கம் தற்போது அதிக எண்ணிக்கையில் மருத்துவப் பரிசோதனைகளை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

“தற்போதைய சூழ்நிலையில் நோய்த் தொற்று இருப்பவர்களை அடையாளம் காண்பது, பரிசோதனை செய்வது, தனிமைப் படுத்துவது, சிகிச்சை அளிப்பது என்பதே அரசாங்கத்தின் வியூகம். ஒரே சமயத்தில் ஏராளமானோருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வது தொடர்பாக சுகாதார அமைச்சு நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.

“நோய்த் தொற்றுப் பரவல் அதிகமாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படும் அபாயப் பகுதிகளில் மிகப் பெரிய அளவில் பரிசோதனை மேற்கொள்ளப்படும். நோய்த் தொற்றால் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என்ற நிலை ஏற்படும் வரை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நீடிக்கும்.

“நாடு முழுவதும் உள்ள 34 மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என 3,585 படுக்கைகள் தயார் நிலையில் இருக்கிறது,” என்று பிரதமர் மொகிதின் யாசின் மேலும் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »