Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): மலேசியாவில் பாதிப்பு எண்ணிக்கை 2,000-ஐ கடந்தது

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இன்று ஒரே நாளில் புதிதாக 235 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது என மலேசிய சுகாதார அமைச்சு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அங்கு நோய்த்தொற்று ஏற்பட்டோர் ஒட்டுமொத்த எண்ணிக்கை 2,031 ஆகும். நோய்த்தொற்று காரணமாக சிகிச்சை பெற்றவர்களில் 215 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராகப் போராடி வரும் மருத்துவர்கள், தாதியர் உள்ளிட்ட யாருக்கும் வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்றாலும் சுகாதார துறையின் ஊழியர்கள் 80 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்த அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்திக் கொண்ட மலேசிய மாமன்னர் தம்பதியர்

மலேசிய மாமன்னரும் அவர்தம் துணைவியாரும் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இத்தகவலை அரண்மனை வட்டாரம் இன்று தெரிவித்தது.

அரண்மனை ஊழியர்கள் 7 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவப் பரிசோதனை மூலம் இது உறுதியான நிலையில், மாமன்னர் தம்பதியர்க்கும் உரிய பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக அரண்மனைக் கட்டுப்பாட்டாளர் அகமட் படேல் சம்சுதீன் தெரிவித்துள்ளார்.

எனினும் பரிசோதனையின் முடிவில் மாமன்ன தம்பதியர்க்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

இத்தகவலை அறிந்தபோதும் மாமன்னர் தம்பதியர் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அகமட் படேல் சம்சுதின் மேலும் தெரிவித்தார்.

மகாதீர்: மக்களை பாதுகாக்கவே பொது நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை நீட்டிப்பு

இதற்கிடையே மக்களின் நலன் கருதியே மலேசியாவின் பொது நடமாட்டு கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.

அண்மையில் தமக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொண்டார் மகாதீர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவுகிறது என்றும் நாள்தோறும் 100 பேராவது அதனால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அவர் சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களில் சிலர் இறக்க நேரிடுகிறது என்று அவர் கவலை தெரிவித்தார்.

“இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றாமல் போனால், நம்மைத் தனிமைப்படுத்திக் கொள்ளாவிட்டால் சிக்கல்தான். நாம் வீட்டை விட்டு வெளியேறி தொடர்ந்து வெளியே வலம் வந்தால் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் ஏராளமான மலேசியர்கள் பாதிக்கப்படுவர்,” என்று தமது சமூக வலைத்தள பதிவு ஒன்றில் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

அடிப்படையில் எம்பிபிஎஸ் மருத்துவம் படித்த மருத்துவரான மகாதீர், கட்டொழுங்குடன் நடந்துகொள்ளவில்லை என்றால், ‘ஒருநாள் நமக்கும் கிருமித்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2 மாத ஊதியத்தை வழங்கும் பிரதமர், அமைச்சர்கள்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான மலேசிய அரசின் நடவடிக்கைகளுக்குத் தோள் கொடுக்கும் விதமாக பிரதமரும் அமைச்சர்களும் தங்களது பங்களிப்பாக 2 மாத ஊதியத்தை வழங்க உள்ளனர். நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மலேசியப் பிரதமரின் மாதச் சம்பளம் 22,826.65 மலேசிய ரிங்கிட் ஆகும். அமைச்சர்களின் மாதச் சம்பளம் 14,907 மலேசிய ரிங்கிட். துணை அமைச்சரின் ஊதியம் 10,747 மலேசிய ரிங்கிட் ஆகும். தற்போதுள்ள கூட்டணி அரசாங்கத்தில் 31 முழு அமைச்சர்களும், 37 துணை அமைச்சர்களும் உள்ளனர். இவர்களின் மொத்த பங்களிப்பு 17,72,625 மலேசிய ரிங்கிட் ஆகும். (1 மலேசிய ரிங்கிட் = ரூ.17 உத்தேசமாக).

கடும் நடைமுறைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரிக்கை

இதற்கிடையே பொது நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை முறையாகப் பின்பற்றாதவர்கள் கடுமையான நடைமுறைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என மலேசிய தேசிய பாதுகாப்புக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

அடுத்து வரும் நாட்களில் மக்கள் எதற்காக வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள் என்பது தொடர்பில் கூடுதல் கட்டுப்பாடுகள் இருக்கும் என பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறியுள்ளார்.

“அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவது, உணவு வாங்குவது என்று பல காரணங்களுக்காக மலேசியாவில் பொதுமக்கள் அவ்வப்போது வீட்டை விட்டு வெளியே சென்று திரும்புகிறார்கள். இந்நிலையில் வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டி சில கடுமையான நடைமுறைகளை அறிவிக்க வேண்டி உள்ளது,” என்றார் அமைச்சர் இஸ்மாயில் சப்ரி.

இந்நிலையில் நாடு முழுவதிலும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறிய 110 பேரைக் கைது செய்துள்ள மலேசிய போலிசார் 1,63,487 வாகனங்களை சாலைத் தடுப்புகளை நிறுத்தி வைத்து சோதனையிட்டுள்ளனர். முறையான காரணமின்றி வெளியே சுற்றித் திரிந்ததாக நம்பப்பட்டவர்களின் வாகனங்கள் பறிமுதல் ஆகியுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »