Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): மலேசியாவில் நாடு திரும்பும் நபர்களால் தொற்று பரவும் ஆபத்து

பல்வேறு நாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் மலேசியர்களால் உள்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் புதுடெல்லியில் நடைபெற்ற சமய நிகழ்வில் பங்கேற்ற மலேசியர்களைத் தேடி வருவதாக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று மேலும் ஆறு பேர் உயிரிழந்ததையடுத்து மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 43ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்று புதிதாக மேலும் 140 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதியானது.

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மார்ச் 31 மாலை நிலவரப்படி 2,767 ஆக உள்ளது என்றும், சிகிச்சைக்குப் பின்னர் முழுமையாகக் குணமடைந்த 58 பேர் இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாகவும் சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தற்போது 94 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், 60 பேருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக கூறினார்.

நாடு திரும்புகிறவர்களுக்கு 364 தனிமைப்படுத்தும் மையங்கள்

பல்வேறு நாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் மலேசியர்களால் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதாக சுகாதார அமைச்சு அதிருப்தியும் கவலையும் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து திரும்புபவர்கள் வீட்டில் தங்கியிருந்தபடியே தங்களைத் தனிமைப் படுத்திக்கொள்ள வேண்டும் என மலேசிய அரசு அறிவுறுத்தி உள்ளது. எனினும் இவர்களில் 15 விழுக்காட்டினர் இந்த உத்தரவை மீறுவதாகவும், அத்தகையவர்களால் உள்நாட்டில் வைரஸ் தொற்று பரவுவது உறுதியாகி உள்ளது என்றும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே இனி வெளிநாடுகளில் இருந்து திரும்புவோரை சிறப்பு மையங்களில் தனிமைப்படுத்துவது அவசியமாகிறது என்று சுகாதார அமைச்சின் பொது ஆணையர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 3ஆம் தேதியில் இருந்து நாடு திரும்புவோர் விமான நிலையத்தில் இருந்து நேரடியாக இத்தகைய தனிமைப் படுத்தப்படும் மையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர் என்று அவர் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

“நாடு திரும்பும் மலேசியர்களை தங்க வைப்பதற்கான 364 தனிமைப்படுத்தும் மையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. வீட்டிலேயே தனிமைப்படுத்தப் படுபவர்களில் சுமார் 80 விழுக்காட்டினர் மட்டுமே அரசின் அறிவுறுத்தல்களை முறையாகப் பின்பற்றுகிறார்கள். ஒருசிலர் கட்டுப்பாட்டு ஆணையை மீறி வெளியே செல்கிறார்கள்.

“எனவே தான் தனிமைப்படுத்தும் மையங்கள் தேவைப்படுகின்றன. இனி விதிமுறைகளை மீறுவோரும் இம்மையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர்,” என்றார் நூர் ஹிஷாம்.

டெல்லி சமய நிகழ்வில் பங்கேற்றவர்களைத் தேடும் மலேசிய சுகாதார அமைச்சு

இந்தியாவில் நடைபெற்ற சமய மாநாட்டில் பங்கேற்று நாடு திரும்பிய மலேசியர்களை அடையாளம் காணும் நடவடிக்கை தீவிரப்படுத்தப் பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் இந்தோனீசியாவின் சுலாவேசியில் நடைபெற்ற சமய நிகழ்வில் பங்கேற்றவர்களும் அடையாளம் காணப்பட்டு வருவதாக அந்த அமைச்சு கூறியுள்ளது.

“இரு நிகழ்விலும் கலந்து கொண்டவர்களுக்கு நோய்த்தோற்று ஏற்பட்டிருக்க அதிக வாய்ப்புள்ளன. எனவே அவர்களைப் பற்றிய விவரங்களை சேகரித்து வருகிறோம். இதுவரை 87 நபர்களின் பெயர்கள் தெரிய வந்துள்ளது. அதை வைத்து அவர்களைக் கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறோம்,” என்றார் நூர் ஹிஷாம்.

இந்தியாவில் நடந்த சமய நிகழ்வில் சுமார் இரண்டாயிரம் பேர் பங்கேற்றதாக தெரிகிறது. இவர்களில் மலேசியர்களும் இருந்தது உறுதியாகி உள்ளது. குறைந்தபட்சம் 20 மலேசியர்கள் இந்நிகழ்வுக்காக டெல்லி வந்திருந்தனர் என்று இந்திய ஊடகத்தை மேற்கோள் காட்டி மலேசிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் மலேசியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மார்ச் 13 முதல் 15ஆம் தேதி வரை நடந்த இந்நிகழ்வில் பங்கேற்ற சிலர் கொரோனா கிருமித் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

அடிக்கடி வெளியே செல்வதால் நோய்த் தொற்று ஏற்படும் என எச்சரிக்கை

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளவர்களில் 26 முதல் 30 வயதுக்குட்பட்டோரும், 56 முதல் 60 வயதுக்குட்பட்டோரும் தான் எண்ணிக்கை அளவில் அதிகமாக இருப்பதாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கு இவ்விரு பிரிவினரும் வெளியே அதிகம் நடமாடுவது தான் காரணம் என்று இந்த அமைச்சு சுட்டிக்காட்டி உள்ளது.

“இவர்களில் சிலர் மாணவர்களாக இருக்கக் கூடும். மேலும் சிலர் பொது நடமாட்ட கட்டுப்பாட்டை மீறுபவர்களாக இருக்கலாம். மேலும் வெளிநாடுகளில் இருந்து வந்த இளையர்கள் அரசு உத்தரவை மீறி சகஜமாக நடமாட விரும்பி இருக்கக்கூடும்.

“வயதானவர்கள் குடும்பத் தலைவர் பொறுப்பில் இருப்பதால் வீட்டுத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அடிக்கடி வெளியே செல்ல வேண்டியிருக்கலாம். இதனால் அவர்களுக்கு எளிதில் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு,” என டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

நாடு திரும்ப முடியாமல் 56 நாடுகளில் சிக்கியுள்ள 4,374 மலேசியர்கள்

இதற்கிடையே உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள மலேசியர்களை மீட்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மலேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

அனைத்துலக பயணக் கட்டுப்பாடுகள், சில நாடுகள் எடுத்துள்ள முடிவுகள் காரணமாக மலேசியர்கள் பலர் நாடு திரும்ப முடியவில்லை என அந்த அமைச்சு கூறியுள்ளது.

மொத்தம் 56 நாடுகளில் 4,374 மலேசியர்கள் நாடு திரும்ப காத்திருப்பதாக வெளியுறவு துணை அமைச்சர் கமருடின் ஜாஃபர் தெரிவித்துள்ளார். இவர்களில் இந்தியாவில் மட்டும் 2,156 பேர் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

“இந்தியாவில் உள்ள மலேசியர்களை அழைத்துவர 11 சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனவே அங்கு சிக்கியுள்ள மலேசியர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறையும்.

“இதுவரை தனியார் அமைப்புகளின் உதவியோடு 3,201 மலேசியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்களில் நேற்று இரவு இந்தியாவின் அம்ரிஸ்டர் நகரில் இருந்து வந்த 179 பேரும், மியான்மரில் இருந்து மீட்கப்பட்ட 144 பேரும் அடங்குவர்,” என்று கமருடின் ஜாஃபர் தெரிவித்தார்.

தற்போது இந்தோனீசியாவில் இருந்து 680 மலேசியர்களும், ஆஸ்திரேலியாவில் இருந்து 226 பேரும், நியூசிலாந்தில் 153, தாய்லாந்தில் 337, சவுதி அரேபியாவில் 121, பாகிஸ்தானில் 128, பிலிப்பீன்சில் 54, இலங்கை 50 மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 43 பேரும் நாடு திரும்ப காத்திருப்பதாக அவர் பட்டியலிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »