Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றை தனிமைப்படுத்தி கொள்ளுதலால் கட்டுப்படுத்த முடியுமா?

கை கழுவுதல், மற்றவர்களிடம் இருந்து விலகி இருத்தல், கொரோனா வைரசுக்கான அறிகுறிகள் தென்பட்டால் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் என கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இவ்வாறான அறிவுரைகளையே உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்துகிறது.

ஆனால் பல மில்லியன் மக்களுக்கு இவற்றைப் பின்பற்றுவதால் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை இல்லை. சுமார் ஒரு மில்லியன் மக்கள் சுகாதார வசதிகள் இன்றி நெரிசலான இடங்களில் வசிக்கின்றனர். ஒரே அரை உள்ள வீடுகளில் பெரிய குடும்பங்களாக வாழ்கின்றனர். உலகின் நகர்ப்புற மக்கள் தொகையில் இவர்களே 30 சதவிகிதம் வாழ்கின்றனர். இந்த வீடுகளில் மிகக் குறைந்த காற்றோட்டம், மோசமான வடிகால் மற்றும் கழிவுநீர் வசதிகளைக் கொண்டிருக்கின்றன, மேலும் நோய்கள் எளிதில் பரவும் அபாயம் அங்கு நிலவுகிறது.

நைரோபியின் முக்குரு பகுதியில் செலஸ்டின் அத்தியாம்போ தனது ஆறு குழந்தைகள் மற்றும் கணவருடன் வசிக்கிறார். ஒரு அரை மட்டுமே இருக்கும் இவரின் வீட்டில் தண்ணீர் மற்றும் மின்சார வசதிகள் கூட கிடையாது. தனது குழந்தைகள் ஒருவருக்கொருவர் இடிக்காமல் இந்த வீட்டில் சுற்றி வர முடியாது என இவர் கூறுகிறார்.

”ஏதேனும் தொற்று ஏற்பட்டால் ஒரு குழந்தையை இன்னொருவரிடமிருந்து பிரித்து தனிமைப்படுத்த முடியாது. எங்களிடம் இடமும் கிடையாது அறையும் கிடையாது. எங்கள் குடும்பத்தில் யாராவது பாதிக்கப்பட்டால் அரசாங்கம் அவரை மருத்துவமனைக்குத் தான் அழைத்துச் செல்ல வேண்டும்” என்கிறார் செலஸ்டின்.

தனது கணவர் மர தச்சராக வேலை செய்து தினம் 400 கேன்யன் ஷெல்லிங் சம்பாதிக்கிறார். அதாவது தினம் 4 டாலர்கள் சம்பாதிக்கிறார். அதில் தண்ணீர் வாங்குவதற்குத் தினமும் 0.5 டாலர்கள் செலவு செய்கின்றனர். ஆனால் தண்ணீர் கிடைக்காத நாட்களில் அவர்களின் அவசர குளியலைக்கூடத் தவிர்கின்றனர்.

முக்குருவில் அரை மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். வீடுகள் அட்டை அல்லது பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்திக் கட்டுகின்றனர், அதே சமயம் இரும்புத் தகடுகளால் கட்டப்படும் வீடுகள் சிறந்த வீடுகளாக கருதப்படுகிறது. இங்குக் கழிவுகள் அனைத்தும் நதியில் கலக்கின்றன.

மெர்சி என்கிற தொண்டு நிறுவனம் முக்குருவில் நான்கு தொடக்கப் பள்ளிகளை நடத்துகின்றனர். இதில் 7000 மாணவர்கள் படிக்கின்றனர். இங்குப் படிக்கும் முக்கால்வாசி மாணவர்கள் சோப்பை பயன்படுத்துவதில்லை என்று அந்த தொண்டு நிறுவனத்தின் தலைவர் மேரி கூறுகிறார்.

வைரஸ் அவர்களின் பகுதியில் பரவினால் மிக மோசமாக இருக்கும் என செலஸ்டின் கூறுகிறார்.

மத்திய மற்றும் மேற்கு ஆஃப்ரிக்காவில் பணியாற்றிய உலக சுகாதார அமைப்பின் முன்னாள் பிரதிநிதி டாக்டர் பைரி கூறுகையில், ஆப்ரிக்காவில் சிறிய வீடுகளில் 12 பேர் வசிக்கும் நிலை உள்ளது என்கிறார். அங்குத் தனிமைப்படுத்திக்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது என்றும் பைரி கூறுகிறார். அவர்கள் நெரிசலுக்கு மத்தியில் தண்ணீர் இன்றி வாழ்கின்றனர். ஜொஹான்ஸ்பேர்க் மற்றும் சென்னையில் உள்ள நகரங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

சென்னையின் பு நகர் பகுதியில் வசிக்கும் ஷாந்தி சசிதரன் பிபிசியிடம் கூறுகையில், ”கடந்த ஆண்டை போல இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு நிலவினால், அதிகம் முறை கைகளைக் கழுவ தண்ணீர் பயன்படுத்த முடியாது. கடந்த ஆண்டு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டபோது 50 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ஒரு கிணற்றில் இருந்து லாரி தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தனர். மேலும் இங்கு குறைந்த அளவிலேயே பொது கழிப்பறைகள் உள்ளன, மக்களும் பெரிதாக எந்த சுகாதார அறிவுரைகளையும் கடைப்பிடிப்பதில்லை.

மின்சார ரயிலில், சிலர் உங்கள் அருகில் நின்றபடியே இருமுகிறார்கள். ஏன் இப்படி இருமுகிறீர்கள், துணியை வைத்து வாயை மூடிக்கொள்ளலாமே என்று கேட்டால் நம்மிடம் சண்டையிடுவார்கள், இன்னும் சிலர் மன்னிப்பு கேட்டு விட்டு சென்று விடுவார்கள். நாங்கள் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் எப்போதும் போல நண்பர்கள் உறவினர்கள் என பலர் வந்து செல்கின்றனர்.

என் குழந்தைகளை மெதுவாகவும் சுத்தமாகவும் கை கழுவும் படி அறிவுறுத்தியுள்ளேன். மேலும் நாங்கள் பெரும்பாலும் வெளியில் செல்லுவதைத் தவிர்த்து விட்டோம். என்கிறார் ஷாந்தி.

லண்டனின் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் போப்பி லேம்பெர்ட்டன் கூறுகையில், ”அரசாங்கம் பெரிய அளவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நிறைய ஏழை மக்களுக்கு இரண்டு வாரங்களுக்குத் தேவையான உணவை வாங்க முடியாது. பலரின் வீட்டில் உணவை வாங்கி சேகரித்து வைப்பதற்கான குளிர் சாதன பெட்டிகள் கூட கிடையாது. சில அரசாங்கத்தாலும் பெரிய அளவில் பணம் செலவு செய்ய முடியாது. எனவே அவ்வாறான பகுதிகளில் தொற்று ஏற்பட்டால், அந்த முழு நகரத்தையே தனிமைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்கிறார்.

இந்த பெரும் தொற்றை எதிர்கொள்ள அரசாங்கங்களுக்கு உலக சுகாதார அமைப்பு முன் வந்து உதவி செய்யும் என அறிவித்துள்ளது. ஆனால் வளரும் நாடுகளில் சுகாதார பணிகளை மேற்கொள்ளத் தேவையான வழிகாட்டுதலுடன் வர வேண்டும் என்று டாக்டர் ம்பிலி விரும்புகிறார். ஆப்பிரிக்காவில் ஒரு பெரும் நெருக்கடி நிலை ஏற்படுவதற்கு முன்பு அந்நாட்டு தலைவர்களுடன் கலந்து பேசி நிலைமையை தெரிந்துக்கொண்டு தயார் நிலையில் இருக்கும்படியும் அறிவுறுத்துகிறார்.

மேலும் ஆஃப்ரிக்காவில் இந்த தொற்று வேகமாக பரவவில்லை. தற்போது அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் சீனா மாற்றும் சில ஐரோப்பிய நாடுகள் சென்று திரும்பி வந்தவர்கள். அங்கு மட்டும் ஏன் கொரோனா வைரஸ் வேகமாக பரவவில்லை என்பதற்கான காரணம் தெரியவில்லை, என்றும் ம்பிலி சுட்டிக்காட்டுகிறார். உள்ளூரில் பரவும் இந்த தொற்று, அதிக பயணங்களை மேற்கொள்பவர்கள் இல்லாததால் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இன்னும் அதிகம் பரவவும் இல்லை, கட்டுப்படுத்துவதற்கும் உதவியாக இருக்கிறது என்றும் ம்பிலி கூறுகிறார்.

முக்குருவில் கடந்த சில வாரங்களாகப் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் ”எங்கள் பகுதியில் வைரஸ் பாதிப்பு ஏற்படக்கூடாது என இறைவனை வேண்டுகிறேன்” என்கிறார் செலஸ்டின்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »