Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு ஏப்ரல் மத்தியில் உச்சத்தை தொடும்: மலேசியாவுக்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஏப்ரல் மாத மத்தியில் உச்சத்தை தொடக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

இதே வேளையில் பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் பலனாக நோய்த் தொற்றியோரின் எண்ணிக்கை குறைவதற்கான தொடக்க நிலை அறிகுறிகள் தென்படுவதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு ஆசியாவில் கொரோனா வைரஸ் தொற்றியோர் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கிறது மலேசியா. சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று ஒரே நாளில் ஐந்து பேர் பலியானதை அடுத்து, ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளது. எனினும் சிகிச்சைக்குப் பின் முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் மலேசியாவில் சீராக அதிகரித்து வருகிறது.

“இன்று ஒரே நாளில் புதிதாக 208 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,116ஆக அதிகரித்துள்ளது. நோய்த் தொற்றுக்காக சிகிச்சை பெற்று குணமடைந்த 122 பேர் இன்று வீடு திரும்பினர். மலேசியாவில் குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 767ஆக அதிகரித்துள்ளது,” என்று மலேசிய சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

கவலைக்கிடமாக உள்ளோரின் எண்ணிக்கை ஒரு வாரத்தில் உச்சம் தொடும்

இந்நிலையில் இதுவரை கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில் பார்க்கும் போது மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றியோரின் எண்ணிக்கை ஏப்ரல் மாத மத்தியில் உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கலாம் என்கிறார் மலேசியா, புரூனே மற்றும் சிங்கப்பூருக்கான உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதியான யிங் ரூ லோ (Ying-Ru Lo).

ஏப்ரல் மத்தியில் மலேசியாவில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உச்சத்தை தொடும் என அவர் தெரிவித்துள்ளார்.

“எங்களுக்கு கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில் இந்த கணிப்பை தெரிவித்துள்ளோம். அடுத்த வாரத்துக்குள் கவலைக்கிடமாக உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என கணிக்க முடிகிறது. ஒருவேளை ‘WHO’ வெளியிடும் இந்த கணிப்புகள் மாறக்கூடும்.

“தற்போது நோய்த் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக சாதகமான அறிகுறிகள் தென்படுகின்றன என்றாலும் இந்நிலை திடீரென தலைகீழாக மாறக்கூடும். ஒருவேளை அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் நின்றுபோனால் அல்லது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால், மக்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் போனால் நோயாளிகளின் எண்ணிக்கை நிச்சயம் அதிகரிக்கும்.

“இதுவரை புது நோய்த் தொற்று குறித்து கிடைத்த தரவுகளின் அடிப்படையில் பார்க்கும் போது மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்று சமூக தொற்றாக மாறவில்லை என்பது தெரிகிறது,” என்றார் யிங் ரூ லோ.

அடுத்த இரு வாரங்கள் மிகவும் முக்கியமானவை

இந்நிலையில் பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைக்கும் பட்சத்தில் பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மேலும் நீட்டிக்கப்பட மாட்டாது என சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

“அடுத்த இரு வாரங்கள் மிகவும் முக்கியமானவை. நாம் அனைவரும் அரசின் அறிவுறுத்தலுக்கேற்ப சுய சுகாதாரத்தைப் பேணுவதுடன் வீட்டிலேயே இருந்தோம் எனில் நோய்த் தொற்று சங்கிலித் தொடரை துண்டிக்க முடியும். இதன் மூலம் நோய்த் தொற்று பாதிப்பு வெகுவாக குறையும்,” என்று நூர் ஹிஷாம் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 14ஆம் தேதியுடன் பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் இரண்டாம் கட்டம் நிறைவடையும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்த அவர், இந்த ஆணையை மேலும் நீட்டிப்பது குறித்து ஏப்ரல் 10ஆம் தேதி அன்று கைவசம் உள்ள தரவுகளின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்றார்.

நாட்டில் பதிவாகியுள்ள ஒட்டுமொத்த நோய்த் தொற்று சம்பவங்களில் சுமார் 40 விழுக்காடு கோலாலம்பூரில் நடைபெற்ற சமய நிகழ்வுடன் தொடர்புள்ளவை என நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

அந்த நிகழ்வில் பங்கேற்ற 18,826 பேர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவர்களில் 1,407 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதியானது என்றும் அவர் குறிப்பிட்டார். அந்நிகழ்வில் பங்கேற்ற மேலும் 3,400 பேர் இன்னும் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்றார் அவர்.

தற்போது நாடு முழுவதும் தினந்தோறும் ஏழாயிரம் பேருக்கு கொவிட்-19 பாதிப்புக்கான பரிசோதனை செய்யப்படுவதாக குறிப்பிட்ட நூர் ஹிஷாம், இந்த எண்ணிக்கை விரைவில் 16,500ஆக அதிகரிக்கும் என்றார்.

நாடு முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது

பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறிய வகையில் நாடு முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் உரிய காரணம் இன்றி வெளியே சுற்றித் திரிந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.

கைதானவர்களில் 1,500 பேர் மீது வழக்குப் பதிவாகி நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார். அவர்களில் சிலருக்கு சிறைத் தண்டனையும், சிலருக்கு அபராதமும் விதிக்கப்பட்டதாகவும், ஒருசில வழக்குகளில் 8 மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“பொது நடமாட்டக் கட்டுப்பாட்டை மீறியதற்காக மட்டும் அவர்கள் கைது செய்யப்படவில்லை. காவல்துறைக்கு எதிராகவும், அவர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாலும் கைது செய்யப்பட்டனர்,” என்றார் அமைச்சர் இஸ்மாயில் சப்ரி.

புதன்கிழமை அன்று நாடு முழுவதும் 687 சாலைத் தடுப்புகள் போடப்பட்டு, வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்ட அவர், மொத்தம் 3,80,342 வாகனங்களும், 3,791 கட்டட வளாகங்களும் சோதனையிடப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் நாடு முழுவதும் 23,256 திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், கைதாவோரின் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும், இத்தகைய நடவடிக்கை நீடிக்கும் என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »