Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): கோவிட் 19க்கான தடுப்பு மருந்துகளைப் பணக்கார நாடுகள் பதுக்கி வைக்குமா?

உலகெங்கிலும் கொரோனா வைரஸ் தொற்றை ஒழிப்பதற்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் முயற்சியில் 44 ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆராய்ச்சியில் மூலக்கூறு மரபியலாளர் கேட் ப்ரோடெரிக் ஈடுபட்டுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள உயிரி தொழில்நுட்ப நிறுவனமான இன்னோவியோவில் மருத்துவர் கேட் ஆராய்ச்சியாளராக பணிபுரிகிறார்.

இந்நிறுவனம் டிசம்பர் மாதத்திற்குள் 10 லட்சம் தடுப்பு மருந்துகளைத் தயாரித்து உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது. ஆனால் இந்த 10 லட்சம் டோஸ்களை எங்கு யார் பெற்றுக்கொள்வார்கள் யாருக்குக் கிடைக்கும்.

மருத்துவர் கேட்டின் சகோதரி பிரிட்டனில் செவிலியராக பணிபுரிகிறார். ”எனது சகோதரி தினமும் கோவிட் 19 வைரசால் பாதிக்கப்பட்டவர்களுடன் போராடி வருகிறார். அவர்கள் அனைவருக்கும் எப்படித் தடுப்பு மருந்துகளை அனுப்ப முடியும். இந்த தடுப்பு மருந்து இப்போதே தயாராக வேண்டும்” என்கிறார் கேட்.

தடுப்பு மருந்து பதுக்கப்படுமா?

ஆனால் இன்னோவியோ போன்ற நிறுவனம் உருவாக்கும் தீர்வுகளைப் பணக்கார நாடுகளால் “யாருக்கும் தெரியாமல் பதுக்கி வைக்கும்,” வாய்ப்புள்ளது என்ற கவலைகள் உள்ளன. அப்படி கவலையை வெளிப்படுத்தும் குரல்களில் ஒன்று தொற்று நோயியல் நிபுணர் சேத் பெர்க்லி என்பவரின் குரல்.

தடுப்பு மருந்து கிடைப்பதில் பாரபட்சமான இடைவெளி தோன்ற வாய்ப்புள்ளது என்கிறார் அவர்.

உலகின் 73 ஏழ்மையான நாடுகளில் நோய்த்தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் உலகளாவிய சுகாதார கூட்டமைப்பான ‘வேக்சின் அலையன்ஸ்’ (Gavi) என்ற அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி அவர். உலக சுகாதார நிறுவனம் இந்த கூட்டமைப்பின் உறுப்பினர்களில் ஒன்று.

இவ்வாறான நெருக்கடி நிலையில் “செல்வந்த நாடுகளில் தடுப்பு மருந்து அவசியம் தேவைப்படும் மக்களுக்கு மட்டுமல்லாமல் ஏழை நாடுகளில் தடுப்பு மருந்து தேவைப்படுபவர்களுக்கும் போதுமான எண்ணிக்கையில் இவை சென்று சேருவதை உறுதி செய்வதே சவால்” என்று பெர்க்லி பிபிசியிடம் கூறினார்.

ஜெர்மன் பயோடெக்னாலஜி நிறுவனமான க்யூர்வாக் உருவாக்கியுள்ள தடுப்பு மருந்தை ஏற்கனவே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது நாட்டு மக்களுக்காக மட்டும் பிரத்தியேகமாகப் பெற முயற்சி செய்து அது தோல்வியில் முடிந்ததாக ஜெர்மன் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஹெபடைடிஸ் பி

நோய்த்தடுப்பு மருந்தை முதலில் பணக்கார நாடுகள் மட்டுமே வாங்கி பயன்படுத்துவதால் ஏழை நாடுகள் கடுமையாகப் பாதிக்கும் என்ற இந்த அச்சத்திற்கு ஹெபடைடிஸ் பி தடுப்பூசியே சிறந்த எடுத்துக்காட்டு.

கல்லீரல் புற்றுநோய்க்கு முக்கிய காரணம் ஹெபடைடிஸ் பி என்ற வைரஸ். இது எச்.ஐ.வி.யை விட 50 மடங்கு அதிகம் தொற்றக்கூடியது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 2015ஆண்டு நிலவரப்படி உலகளவில் 257 மில்லியன் மக்கள் ஹெபடைடிஸ் பி நோய்த் தொற்றுடன் வாழ்ந்து வந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நோய்க்கு எதிரான தடுப்பு மருந்துகள் 1982 ஆம் ஆண்டிலேயே பணக்கார நாடுகளுக்குக் கிடைத்தன. ஆனால் 2000ஆம் ஆண்டுவரை உலகின் ஏழ்மையான நாடுகளில் 10% க்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே ஹெபடைடிஸ் பி தடுப்பு மருந்து கிடைத்துள்ளது.

பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் ஆகியோரால் 2000 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட வேக்சின் அலையன்ஸ் அமைப்பு, அரசாங்கங்கள் மற்றும் மருந்து நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் மூலமாகப் பிற தடுப்பு மருந்துகளில் இந்த பின்னடைவைக் கணிசமாகக் குறைத்தது.

நார்வே நாட்டை சேர்ந்த கொயலேஷன் ஃபார் எபிடமிக் பிரிப்பேர்ட்னஸ் இன்னோவேஷன் (Cepi) (என்ற அமைப்பும் தடுப்பு மருந்து எல்லா நாட்டு மக்களுக்கும் கிடைப்பதற்காக வெளிப்படையாகக் குரல் கொடுக்கிறது.

அமெரிக்காவின் அணுகுமுறை எப்படி உள்ளது?

2007 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மெர்க் என்ற ஆராய்ச்சி மையம் எச்.பி.வி என்ற நோய் கிருமி தொற்றை போக்குவதற்கான கர்டசில் என்ற தடுப்பு மருந்தை உருவாக்கியது. 2014ம் ஆண்டு இந்த தடுப்பு மருந்தைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதலை அமெரிக்க அதிகாரிகள் வழங்கினார்.

உலகளவில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு இந்த எச்.பி.வி கிருமி தொற்றே முக்கிய காரணம். ஆனால் 2019ம் ஆண்டு வரை குறைந்த வருமானம் கொண்ட 13 நாடுகளுக்கு மட்டுமே இந்த கர்டசில் தடுப்பு மருந்து கிடைத்திருக்கிறது. இதற்கு யார் காரணம் ?

உலகளாவிய அளவில் வளரும் நாடுகளில் கருப்பை வாய்ப் புற்றுநோயால் 85% இறப்புகள் நிகழ்கின்றன.

இந்த தடுப்பு மருந்துப் பற்றாக்குறை ஏன் நிகழ்கிறது என்பதைப் புரிந்து கொள்ள தடுப்பு மருந்துகள் எப்படி விற்பனை செய்யப்படுகின்றன என்பதைப் பார்க்க வேண்டும்.

தடுப்பு மருந்துகளும் மருந்து தொழிற்சாலைகளும்

தடுப்பு மருந்துகள் மட்டுமே மருந்து துறையின் வருமானம் அல்ல. சிகிச்சை அளிக்க பயன்படுத்தும் மருந்துகளை விட தடுப்பு மருந்துகளை உருவாக்குவது மிகுந்த இடர்ப்பாடு மிகுந்த வணிகம்.

தடுப்பு மருந்து தயாரிக்க அதிக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செலவுகள் செய்ய வேண்டும் . பரிசோதனை மேற்கொள்ள மிகவும் சிக்கலான விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும்.

மேலும் பொதுச் சுகாதார நிறுவனங்கள், மற்றும் முக்கிய வாடிக்கையாளர்கள் பலர் தனியார் வாடிக்கையாளர்களை விட மிகக் குறைந்த விலையில் தடுப்பு மருந்துகளை வாங்குகிறார்கள். எனவே சாதாரண மருந்துகளை விடத் தடுப்பு மருந்துகள் மிகக் குறைந்த லாபத்தையே ஈட்டுகின்றன. ஒருவர் தன் வாழ்வில் ஒரு முறை தான் தடுப்பு மருந்து பயன்படுத்துவார் என்பதால் தடுப்பு மருந்துகளில் பெரிய லாபம் இல்லை என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

1967 ல் அமெரிக்காவில் மட்டும் 26 தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தன. ஆனால் 2004ம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 5 ஆகக் குறைந்துள்ளது. அந்நிறுவனங்கள் நோய்த் தடுப்பு மற்றும் பாதுகாப்பில் கவனம் செலுத்த விரும்பாமல், நோய் ஏற்பட்டவுடன் அளிக்க வேண்டிய சிகிச்சைக்கான மருந்துகளில் கவனம் செலுத்துகின்றன.

‘பிளாக்பஸ்டர்’ தடுப்பு மருந்துகள்

நிமோனியாவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களிலிருந்து குழந்தைகள் மற்றும் பெரியவர்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் தடுப்பு மருந்தான ப்ரீவெனார் போன்ற கண்டுபிடிப்புகள் இந்தத் துறையில் குறிப்பிடத்தக்க வகையில் வணிகத்திலும் கூட வெற்றி கண்டுள்ளது.

உலகளவில் 2019 ஆம் ஆண்டில் அதிக விற்பனையாகும் முதல் 10 மருந்துகளில் ப்ரீவெனர் தடுப்பு மருந்தும் ஒன்றாகும், இது 5.8 பில்லியன் டாலர்களை ஈட்டித்தந்தது என அறிவியல் சஞ்சிகையான நேச்சர் தெரிவிக்கிறது.

இதே நிறுவனம் தயாரித்த ”வயகரா” விற்பனையை மிஞ்சும் அளவிற்கு ப்ரீவெனர் தடுப்பு மருந்து ”பிளாக்பஸ்டர்” தடுப்பு மருந்தாக விளங்கியது.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து

எனவே பணப் புழக்கம் அதிகம் இருக்கும் சந்தைகளில் அதிக லாபம் ஈட்ட முடியும். குறைந்தபட்சம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செலவுகளையாவது பணக்கார நாடுகளின் சந்தைகள் ஏற்றுக்கொள்ளும்.

ஒரு புதிய தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு 1.8 பில்லியன் டாலர்கள் வரை செலவாகும் என்று பிரிட்டனில் உள்ள மருந்துகளுக்கான தொழில் சங்கம் மதிப்பிடுகிறது.

“நாம் பெரும் சந்தைகளுக்கு மத்தியில் தடுப்பு மருந்துகளை விற்க அனுமதித்தால், பணக்கார நாடுகளில் உள்ளவர்களுக்கு மட்டுமே கோவிட் -19 தடுப்பூசி கிடைக்கும்” என்று லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் பேராசிரியர் மார்க் ஜிட் பிபிசியிடம் விளக்கம் அளிக்கிறார்.

இறுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தில் “மிகப் பெரிய மருந்து நிறுவனங்கள்” ஒரு பெரும் பங்கு வகிக்கும் என்பதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளது. உண்மையில் பெரிய மருந்து நிறுவனங்களிடம் இருந்து கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை உருவாக்கும் யோசனைகள் உருவாகி இருக்காது, ஆனால் இறுதியில் தடுப்பூசிகளைத் தயாரித்து அதைச் சந்தைக்கு கொண்டு வருவதற்கான பொருளாதார வசதி அவர்களிடம் தான் உள்ளது என்கிறார் மருத்துவத் துறையின் பொருளாதார ஆராய்ச்சியாளர் ஆனா நிக்கோலஸ்.

ஒருமித்த கருத்து

உதாரணமாக, இனோவியோ போன்ற ஒரு மருந்து நிறுவனம் மற்ற மருந்து நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து தான் 100 மில்லியன் கணக்கான கோவிட் 19 வைரசுக்கான தடுப்பு மருந்துகளைத் தயாரிக்க முடியும். மேலும் கோவிட் -19 டி.என்.ஏ அடிப்படையிலான தடுப்பு மருந்து வெற்றிகரமாக நிரூபிக்கப்பட வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாக உலகளாவிய அளவில் தடுப்பு மருந்துகளை அனைவருக்கும் சென்று சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சில பெரிய நிறுவனங்கள் பணியாற்றி வருகின்றன.

உலகின் மிகப்பெரிய மருந்து நிறுவனங்களில் ஒன்றான இங்கிலாந்தின் கிளாக்சோஸ்மித்க்லைன் (ஜி.எஸ்.கே) என்ற நிறுவனம் கோவிட் -19 தடுப்பு மருந்தை உருவாக்கப் பல கூட்டமைப்புகளில் ஈடுபட்டு பணியாற்றி வருகின்றனர். “COVID-19 வைரஸை முழுமையாக ஒழிக்க சுகாதாரத்துறையில் பணிபுரியும் அனைவரிடமிருந்தும் ஒரு கூட்டு முயற்சி தேவைப்படுகிறது” என்று இந்நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி எம்மா வால்ம்ஸ்லி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“நோய்த்தடுப்பு மருந்து அனைவருக்கும் சரியான நேரத்தில்” சென்று சேர வேண்டுமானால் இந்த ஒருமித்த கருத்து முக்கியமாக இருக்க வேண்டும் என்று சேத் பெர்க்லி நம்புகிறார்.

“நிச்சயமாக உலகளாவிய அளவில் அனைவருக்கும் தடுப்பு மருந்து என்பது உடனடியாக நடக்காது”

யாருக்கு அதிகம் இந்த தடுப்பு மருந்து தேவைப்படுகிறதோ அவர்களுக்கு முதலில் இந்த தடுப்பு மருந்தைச் சென்று சேர்க்காவிட்டால், நிச்சயம் இந்த தொற்று தொடர்ந்து பரவிக்கொண்டே இருக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »