Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): ஊரடங்கால் மலேசிய தலைநகரில் குறையும் குற்றங்கள்

இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசிய தப்லிக் உறுப்பினர்களை மலேசிய வெளியுறவு அமைச்சு உன்னிப்பாகக் கவனித்து வருவதாக துணை அமைச்சர் கமாலுடீன் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.

தடுப்புக்காவலில் மலேசியர்கள் நலமாக இருப்பதை அரசு உறுதி செய்யும் என்றும் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் குறிப்பிட்டார். மேலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்கள் தங்களது விசாவைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுவதன் பின்னணி குறித்து ஆராயப்படும் என்றார் அவர்.

அண்மையில் டெல்லியில் நடைபெற்ற சமய நிகழ்வில் மலேசியாவை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பங்கேற்ற பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகப் புகார் எழுந்தது. மேலும் சுற்றுலா விசாவில் இந்தியா வந்த மலேசிய தப்லிக் உறவினர்கள் விசா விதிமுறைகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து சிலர் கைதாகினர், பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

“17 மலேசியர்கள் மீதும் இந்திய தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005, வெளிநாட்டவர்கள் சட்டம் 1946 மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவாகி உள்ளதாக டெல்லியில் உள்ள மலேசிய தூதரகம் தெரிவித்துள்ளது. அவர்கள் அனைவரும் நல்ல நிலையில் இருப்பதை வெளியுறவு அமைச்சு உறுதி செய்யும். வெளிநாடு செல்லும் மலேசியர்கள் அந்தந்த நாடுகளின் சட்டங்களை முறையாகப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்துகிறேன்,” என்றார் கமாலுடீன் ஜாஃபர்.

தற்போது மலேசிய தப்லிக் யாத்ரீகர்கள் 191 பேர் இந்தியாவில் தனிமைப்படுத்துப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்தியாவில் உள்ள மலேசியர்கள் தாயகம் திரும்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். இதுவரை இந்தியாவிலிருந்து 2,873 மலேசியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டு இருப்பதாகவும் இதற்காக 21 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டதாகவும் துணை அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

53.4 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளனர்

மலேசியாவில் இன்று புதிதாக 110 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து கிருமி தொற்றியோர் எண்ணிக்கை 5,182ஆக அதிகரித்துள்ளது. அதேவேளையில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் 19 நோயிலிருந்து 119 பேர் முழுமையாகக் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சின் பொது இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் தெவித்துள்ளார்.

மேலும் மலேசியாவில் இதுவரை 2,766 கிருமித்தொற்று நோயாளிகள் குணமடைந்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது 2,332 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை 53.4 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளனர் என்றும், தற்போது 56 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மலேசியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 84 ஆக அதிகரித்துள்ளது என்று இன்று நிர்வாகத் தலைநகர் புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது நூர் ஹிஷாம் மேலும் குறிப்பிட்டார்.

கோலாலம்பூரில் குற்றச்செயல்களின் எண்ணிக்கை குறைந்தது

இதற்கிடையே பொதுநடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டதை அடுத்து தலைநகர் கோலாலம்பூரில் குற்றச்செயல்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக அந்நகரின் ஆணையர் மஸ்லான் லாஸிம் தெரிவித்துள்ளார்.

பொதுநடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் முதற்கட்டமான மார்ச் 18 முதல் 31ஆம் தேதி வரையிலான காலத்தில் கோலாலம்பூரில் குற்ற விகிதாச்சாரம் 57.4 விழுக்காடு வரை குறைந்திருந்தது என்று அவர் கூறியுள்ளார். அச்சமயம் வன்முறை சார்ந்த குற்றங்கள் 62.8 விழுக்காடு அளவுக்குக் குறைந்திருந்தது என அவர் கூறினார்.

இந்நிலையில் பொதுநடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் இரண்டாம் கட்டமான ஏப்ரல் 1 முதல் 14 வரையிலான காலகட்டத்தில் கோலாலம்பூரில் 63 விழுக்காடு அளவுக்குக் குற்றங்கள் குறைந்ததாக மஸ்லான் லாஸிம் குறிப்பிட்டுள்ளார். நாடு முழுவதும் சாலைத் தடுப்புகளும் காவல்துறையின் ரோந்துப் பணியும் அதிகரித்ததன் காரணமாகவே குற்றச்செயல்களின் எண்ணிக்கை இந்தளவிற்கு குறைந்திருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.

“அரசாங்கத்தின் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்துவதில் காவல்துறையினர் மிகத் தீவிரமாக இருந்தனர். மேலும் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டன. கடந்த மார்ச் 18 முதல் இதுவரை கோலாலம்பூரில் 930 பேர் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறிய குற்றத்தின் பேரில் கைதாகி உள்ளனர். இவர்களில் 502 பேர் வெளிநாட்டவர்களாவர்.

“முறையான காரணங்களின்றி வீடுகளை விட்டு வெளியேறியவர்கள் ஒப்புக்கொள்ள முடியாத காரணங்களைத் தெரிவித்தவர்கள்தான் கைதாகி உள்ளனர். ஒட்டுமொத்த கோலாலம்பூர் மாநகரமும் பாதுகாப்பாக இருப்பதைக் காவல்துறை தொடர்ந்து உறுதி செய்யும்,” என்று மஸ்லான் லாஸிம் தெரிவித்துள்ளார்.

உலகளவில் நம்பகமான மருத்துவர்கள் பட்டியலில் நூர் ஹிஷாம்

கொரோனா வைரஸ் தொற்றுக்குச் சிகிச்சை அளிப்பதில் உலகில் மூன்று சிறந்த மற்றும் நம்பகமான மருத்துவர்களை சீனத் தொலைக்காட்சி நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. அதில் மலேசிய சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவும் இடம்பெற்றுள்ளார்.

சீனாவில் இருந்து ஒளியேறும் சைனா குளோபல் டிவி நெட்வொர்க் நிறுவனம் தீவிர ஆய்வுக்குப் பிறகு இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் அந்தோணி ஃபாசி, நியூசிலாந்தைச் சேர்ந்த மருத்துவர் ஆஷ்லே ப்ளூம்ஃபீல்டு ஆகியோரே பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்ற இரு மருத்துவர்களாவர். இம்மூவரும் கொரோனா வைரஸ் தொற்று குறித்து கடந்த பல வாரங்களாக நம்பகமான தகவல்களை வெளியிட்டதாகவும் அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டதாகவும் சைனா குளோபல் டிவி தெரிவித்துள்ளது.

தங்கள் நாடுகளின் குடிமக்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களையும் அச்சத்தையும் இம்மருத்துவர்கள் போக்கியுள்ளனர் என்றும் இதனால் பொதுமக்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளனர் என்றும் அத்தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மருத்துவர் நூர் ஹிஷாம் அப்துல்லா மலேசிய சுகாதார அமைச்சசின் பொது இயக்குநராக கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறார். அவர் தினந்தோறும் செய்தியாளர்களைச் சந்தித்து மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் கள நிலவரத்தை விரிவாகத் தெரியப்படுத்தி வருகிறார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கும் அவர் பதிலளிக்கத் தவறுவதில்லை. மேலும் அனைத்துக் கேள்விகளையும் ஏற்றுக்கொண்டு மிகப் பொறுமையாக பதிலளிப்பதாக மலேசிய ஊடகங்கள் அவரைப் பாராட்டுகின்றன. கோவிட் 19 குறித்த ஆகக் கடைசி தகவல்களை உரிய ஆதாரங்களுடன் தெரிவிக்கும் அவர் மலேசிய மக்கள் மத்தியில் நம்பத்தகுந்த முகமாக உருவெடுத்துள்ளார்.

டாக்டர் நூர் ஹிஷாமுக்கு தற்போது 56 வயதாகிறது. இந்நிலையில் அவருக்கு மலேசிய சுகாதார அமைச்சர் அதம் பாபாவும் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

“கோவிட் 19 நோயை கையாளும் உலகின் 3 சிறந்த மருத்துவர்களில் ஒருவராக சீன தொலைக்காட்சி நிறுவனத்தால் நூர் ஹிஷாம் அப்துல்லா அங்கீகரிக்கப்பட்டிருப்பது மலேசிய மருத்துவத் துறைக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய மரியாதை,” என்று அமைச்சர் அதம் பாபா தமது சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »