Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) சமூக முடக்கம்: சூரிய ஒளி இல்லாமல் 100 நாள்இருப்பது எப்படி? – கேரள விஞ்ஞானியின் அனுபவம்

சுவாமிநாதன் நடராஜன்
பிபிசி உலக சேவை

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக உலகம் முழுவதும் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

சில உடல் சார்ந்த பிரச்சனைகள் உள்ளவர்கள் 12 வாரங்களுக்கு வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது என அறிவுரை கூறப்பட்டுள்ளது. அவர்களில் பலருக்கு மூன்று மாதங்களுக்குச் சூரிய ஒளியே பாராமல் இருப்பது மிகக் கடினமானது.

இந்நிலையில், சமீபத்தில் வட துருவத்தின் கடும் குளிர்காலத்தில், பல மாதம் தொடர்ந்து நீடிக்கும் துருவ இரவுக் காலத்தில் வாழ்ந்து திரும்பிய கேரள விஞ்ஞானி ஒருவர் அங்கு எப்படி வாழப் பழகினார் என்ற அனுபவத்தை பிபிசியுடன் பகிர்ந்துகொண்டார்.

ஒவ்வொரு ஆண்டும் கடுங்குளிர் காலத்தில் ஆர்க்டிக், அண்டார்க்டிக் பகுதிகளுக்குப் பலவித சோதனைகள் செய்வதற்காக நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் செல்கின்றனர். அங்கே அவர்கள் சூரிய ஒளியைப் பார்க்காமல் பல மாதங்களுக்கு வாழ்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் எப்படி சமாளிப்பது?

“முதலில் சில நாள்களுக்கு சூரிய வெளிச்சத்துக்காக ஏங்கினேன். அந்த சூழ்நிலையில் பொருத்திக்கொள்வது கடினமாக இருந்தது. ஆனால் வெகு விரைவில் தகவமைத்துக் கொண்டேன். கிட்டத்தட்ட, இருட்டு பிடித்துப்போய் கிட்டத்தட்ட இருளுக்கு அடிமையாகிப் போனேன்” என்று பிபிசியிடம் கூறினார் விஷ்ணு நந்தன்.

இவர் ஒரு கடற்பனி தொலையுணர்வு விஞ்ஞானி. கனடாவில் உள்ள மனிடோபா பல்கலைக்கழகத்தின் புவி நோக்கு அறிவியல் மையத்தில் முனைவர் பட்டத்துக்குப் பிந்திய ஆய்வாளராக பணியாற்றுகிறார்.

‘மொசைக்’ (MOSAiC) என்று அறியப்படும், இதுவரை நடத்தப்பட்டதிலேயே மிகப்பெரிய ஆர்க்டிக் பருவநிலை ஆராய்ச்சிப் பயணத்தில் பங்கேற்ற ஒரே இந்தியர் இவரே.

ஜெர்மனியின் ஐஸ் உடைப்புக் கலமான ஆர்.வி.போலார்ஸ்டெர்ன் கப்பலில் தங்கியிருந்து சுமார் 60 விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சிப் பயணத்தில் பங்கேற்றுள்ளனர்.

உயிரியல் கடிகாரம்

இந்த ஆராய்ச்சிப் பயணக் குழுவினர் ஆர்க்டிக் பகுதிக்கு வந்தவுடன் தங்கள் கடிகாரங்களில் மாஸ்கோ நேரத்தை வைத்துக்கொண்டனர்.

ஆனால், அது அவ்வளவு எளிதாக இல்லை. அவர்களுடைய உடல் இந்த நேர மாற்றத்துக்கு ஒத்துழைக்காமல் தகராறு செய்தது.

ஆர்க்டிக் பகுதியில் 127 நாள்கள் இருந்துவிட்டு திரும்பிய நந்தன் பிபிசியிடம் இது பற்றிப் பேசினார். “என் உயிரியல் கடிகாரம் உறுதியாக செயல்படவில்லை. சில நாள்கள் நான் காலை உணவுக்குக் கூட எழுந்திருக்கவில்லை. சில நாள்களில் மிக சீக்கிரமாக இரவு தூங்கப் போவேன். சில நேரம் நள்ளிரவு தாண்டி தூங்கப்போவேன்” என்றார் அவர்.

புவியின் உறைந்த பாகங்களைப் பற்றிய ‘கிரையோஸ்பியர்’ ஆராய்ச்சியில் 7 ஆண்டுகளாக அவர் ஈடுபட்டிருக்கிறார். இந்த காலகட்டத்தில் அவர் 15 முறை ஆர்க்டிக் மற்றும் அண்டார்க்டிக் பகுதிகளுக்குப் பயணம் செய்திருக்கிறார்.

“உங்களுக்கு சூரிய உதயமோ, சூரிய அஸ்தமனமோ தெரியாது. சில நாள்களில் நான் தூக்கத்தில் இருந்து எழும்போதே சோர்வாக இருப்பேன்” என்றார் அவர்.

“வெளியே பார்த்தால் எப்போதும் இருட்டாகவே இருக்கும். உங்கள் உடல் உங்களை எழவிடாது”.

இந்த தகவல்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருபவை. ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் தற்போதைய எண்ணிக்கை மேம்படுத்தப்படாமலும் இருக்கலாம்.

மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் மொத்தம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள்
மகாராஷ்டிரம் 3323 331 201
டெல்லி 1707 72 42
தமிழ்நாடு 1323 283 15
மத்தியப் பிரதேசம் 1310 69 69
ராஜஸ்தான் 1229 183 11
குஜராத் 1099 86 41
உத்திரப் பிரதேசம் 849 82 14
தெலங்கானா 766 186 18
ஆந்திரப் பிரதேசம் 572 36 14
கேரளம் 396 255 3
கர்நாடகம் 359 89 13
ஜம்மு & காஷ்மீர் 328 42 5
மேற்கு வங்கம் 287 55 10
ஹரியாணா 225 43 3
பஞ்சாப் 202 27 13
பிகார் 83 37 2
ஒடிஷா 60 19 1
உத்திராகண்ட் 40 9 0
சத்தீஸ்கர் 36 24 0
இமாச்சல பிரதேசம் 36 16 1
அசாம் 35 5 1
ஜார்கண்ட் 33 0 2
சண்டிகர் 21 9 0
லடாக் 18 14 0
அந்தமான் & நிக்கோபார் தீவுகள் 12 11 0
கோவா 7 6 0
புதுவை 7 1 0
மணிப்பூர் 2 1 0
மிசோரம் 1 0 0

தகவல்: சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

உறக்கமும் உடல் நலமும்

உடலுக்கு அத்தியாவசியமான டி விட்டமினை தருவது மட்டுமல்லாமல், மன நிலையையும் உற்சாகப்படுத்துகிறது சூரிய ஒளி. பகல் – இரவு இரண்டையும் தெளிவாகப் பிரித்துக்காட்டும் வழிமுறை இல்லாவிட்டால், உடலின் இயற்கையான ஒத்திசைவு மாறிவிடுகிறது.

தூங்கும் முறை சீர்கெடும்போது ஒருவருக்கு சோர்வும் எரிச்சலும் ஏற்படும். பல வாரங்களுக்கு, பல மாதங்களுக்கு இந்த நிலை தொடர்ந்தால் அதனால், உடல் நிலையில் மோசமான விளைவுகள் ஏற்படும்.

அக்டோபர் தொடக்கம் முதல் மார்ச் இறுதி வரையிலான குளிர் காலத்தில் வட துருவம் இருள் சூழ்ந்து காணப்படும்.

“கரப்பான் பூச்சி அதிகம் உறங்காது. அதைப் போன்றவன் நான் என்றபோதும், போதிய தூக்கமின்மை என்னை களைப்படைய வைத்தது. பிற்பகலில் நான் வேலை செய்ய வேண்டியிருந்தால், சில நேரம் என்னை நானே ஊக்குவித்துக்கொள்வது கடினமாக இருக்கும்”.

“வெளியே வெறித்தனமான காற்றும், குளிரும் நிலவும். வெப்ப நிலை மைனஸ் 55 டிகிரி அளவுக்கு செல்லும்”

துருவப் பகுதியில் அனுபவம் மிக்கவரான நந்தன், துருவப் பகுதிகளில் கோடை காலம் நிலவும்போது அடர் இருளின் எதிர் நிலையாக தொடர்ந்து வெயிலைப் பார்த்துள்ளார்.

“24 மணி நேரமும் வெயில் இருக்கும்போது, காலை வேளைகளில் மிகுந்த உற்சாகம் இருக்கும். ஆனால் மாலை வேளைகளில் சோர்வில் துவண்டுபோவீர்கள். இரவின் நடுவில் தூக்கம் கலைந்துவிட்டால் என்னால் மீண்டும் தூங்க முடியாது”.

மிகுந்த விழிப்பு

அதி நவீன கருவிகளையும், மொசைக் திட்ட விஞ்ஞானிகளையும் கொண்ட பனியை உடைத்துச் செல்லும் கப்பலான போலார்ஸ்டெர்ன் கடந்த பிப்ரவரி 23ம் தேதி ஒரு பழைய சாதனையை முறியடித்து, புதிய சாதனை படைத்தது. புவியியல் வட துருவத்தில் இருந்து 156 கி.மீ. தூரம் சென்றதே அந்த சாதனை.

“கடுமையான ஆர்க்டிக் குளிர்காலத்தில் இதற்கு முன் எந்த ஒரு கப்பலும் இவ்வளவு தூரம் சென்றதில்லை” என்கிறார் நந்தன். ரேடார் செயற்கை கோள்களையும், தரையில் இருந்து இயங்கும் ரேடார் உணர்விகளையும் கொண்டு இவர் கடலின் பனிப்பாறைகளின் தடிமனை அளக்கிறவர்.

உலகில் தரையில் வாழும் வேட்டை விலங்குகளில் மிகப்பெரியதான துருவக் கரடிகளின் ஒரே வீடு கடற் பனிப்பரப்புதான்.

“ஒரு நேரம், ஒரு பனிக்கரடி எங்களுடைய இடத்துக்கு வந்து எங்கள் கருவி ஒன்றை வைத்து விளையாடத் தொடங்கிவிட்டது” என்றார் நந்தன்.

பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, துப்பாக்கி ஏந்திய பனிக்கரடி கண்காணிப்போர் அவர்களோடு இருந்தார்கள். இந்த கடுமையான சூழல் தமது விழிப்பு நிலையை அதிகரித்தவிட்டதாக கூறுகிறார் நந்தன்.

“24 மணி நேரமும் இருள் சூழ்ந்த நிலையில், உங்களுக்கு அதிக கவனம் வந்துவிடும்” என்கிறார் இந்த விஞ்ஞானி.

ஆய்வுப் பயணத்தில் தினசரி செய்யவேண்டிய, கிட்டத்தட்ட என்றும் மாறாத செயல்திட்டத்தை வகுத்துக்கொண்டு செயல்பட இது தமக்கு உதவியதாக அவர் சொல்கிறார். காலை உணவுக்குப் பிறகு, (பல நேரங்களில், பசியின்மை காரணமாக காலை உணவை நந்தன் தவறவிடுவார்) இவரது குழு கப்பலில் இருந்து இறங்கி களத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வகத்துக்கு செல்லும். அங்குதான் கருவிகள் அமைக்கப்பட்டிருக்கும். பிறகு பகல் உணவுக்கு இந்தக் குழு கப்பலுக்குத் திரும்பும். பிறகு, மீண்டும் திரும்பிச் சென்று பல மணி நேரம் களப்பணி செய்யும்.

தளர்ச்சி

“பனிப் பரப்பில் இருக்கும்போது உங்களுக்கு ஏராளமான ஆற்றல் இழப்பு ஏற்படும். ஏனெனில் அப்போது உடல் கலோரிகளை எரிக்கும். நான்கு மாத காலத்தில் நான் 10 கிலோ எடையை இழந்தேன்”.

கப்பலில் உள்ள சமையலறையில் இருந்து அனைவருக்கும் வழக்கமான உணவு வழங்கப்படும். குழு உறுப்பினர்களுக்கும் சமைப்பதற்கு அழைப்பு விடுக்கப்படும். வெஜிடபிள் பிரியாணி, ஸ்பினாஷ் டோஃபு கறி, தந்தூரி கோழிக்கறி, மீன் ஆகியவற்றை மொத்த குழுவுக்கும் சமைத்தார் நந்தன்.

பணியில் தொடர்ந்து கவனம் வைக்க, பொழுதுபோக்கும் அவசியம். இரவு மதுக்கூட நிகழ்வு வாரத்துக்கு மூன்றுமுறை நடந்தது. மனம் சோர்வடையும்போது அவர்கள் விளையாடினார்கள்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற நிகழ்வுகளை குழுவினர் கொண்டாடினர். விஷ்ணு நந்தனின் பிறந்த நாள் கொண்டாட்டமும் நடந்தது.

ஆனாலும், தனித்து வாழ்வதால் ஏற்படும் பாதிப்புகளும் நிகழ்ந்தன.

“பிப்ரவரி இறுதி வாக்கில், கடுமையான வேலையால் பலரும் சோர்வடைந்துவிட்டனர்”.

துருவப் பகுதியில் இருந்து பொது முடக்கத்துக்கு

வட துருவத்தில் இருந்து கப்பல் புறப்பட்டு தூரமாக வந்ததும் பகலவனின் முதல் கதிர்களைப் பார்த்தார் நந்தன்.

“நான் இருளை வெறுக்கவில்லை. கப்பலில் இருந்த எங்களில் பலருக்கும் இருள் ஒரு வாழ்க்கை முறை”

கனடாவில் உள்ள கல்காரிக்கு அவர் திரும்பி வந்தபோது உலகமே கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொது முடக்கத்தில் இருந்தது. கனடாவில் நுழைகிற ஒவ்வொருவரையும் போலவே நந்தனும் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்.

தீவிரமான சூழ்நிலைகளில் அவர் வாழ்ந்த வாழ்க்கை, பொது முடக்கத்தின் கட்டுப்பாடுகளை பெரிய சிரமம் இல்லாமல் சமாளிக்க அவருக்கு உதவியாக இருந்தது.

“உடல் நலத்தோடு இருக்க நீங்கள் உடற்பயிற்சிக்கூடம் செல்லவேண்டியதில்லை. வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யலாம். பல ஸ்ட்ரீமிங் தளங்களில் நல்ல வழிகாட்டும் வீடியோக்கள் உள்ளன”.

சில நாடுகளில் பொது முடக்கத்தின்போது, உடற்பயிற்சிக்காக சிறிது நேரம் வெளியே செல்ல மக்களுக்கு அனுமதி தரப்படுகிறது. ஆனால், வெளியில் செல்ல அனுமதி இல்லாதவர்கள், எப்போதும் தங்களை ஏதேனும் ஒரு வேலையில் ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும் என்கிறார் இந்த விஞ்ஞானி.

“ஏதாவது ஒரு செயல்பாட்டில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள் என்று கூறும் இவர், வாழ்வில் முதல் முறையாக பரபரப்பு இல்லாமல் இருக்கிறோம். இந்த ஓய்வுக் காலத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என்கிறார்.

இது போன்ற கடினமான சூழ்நிலைகளில் வாழ்வதற்கு மக்கள் விரைவாக கற்றுக்கொள்ளவேண்டும் என்கிறார் நந்தன்.

கிட்டத்தட்ட இதெல்லாம் ஆட்டத்தைக் கலைத்துவிட்டு புதிதாகத் தொடங்குவதைப் போல, ஆக்கத்துக்கும் அழிவுக்கும் இடையே நடக்கும் இறுதிப் போர் போல என்கிறார் நந்தன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »