Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): “அமெரிக்காவை விட சீனாவில்தான் நிறைய பேர் இறந்துள்ளனர்” – டொனால்டு டிரம்ப்

கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா மீது மீண்டுமொருமுறை மிகப் பெரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

அதாவது, இந்திய நேரப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிரம்ப், கொரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக்காவை விட சீனாவில்தான் நிறையப் பேர் இறந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அமெரிக்காவில் கோவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,938ஆக அதிகரித்துள்ள நிலையில், இந்த வைரஸ் முதலில் கண்டறியப்பட்ட சீனாவில் இதுவரை 4,636 பேர் இந்த பெருந்தொற்று நோயால் உயிரிழந்துள்ளனர்.

எனினும், அமெரிக்காவில் கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளவர்களின் இறப்பு விகிதம் சீனாவை விட ஒரு சதவீதம் குறைவாக, அதாவது 4.5%ஆக உள்ளது.

அதுமட்டுமின்றி, தனது அரசாங்கம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் திறம்பட செயல்பட்டு வருவதாகவும், இதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த அரசுகள் குறைவான வென்டிலேட்டர்களை பயன்பாட்டில் வைத்திருந்ததாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அமெரிக்க பொருளாதாரத்துக்கு மாகாண அரசுகள் எப்படி படிப்படியாகப் புத்துயிர் அளிக்க உள்ளன என்பது குறித்தும் அவர் விளக்கினார்.

கனடா – அமெரிக்கா எல்லை மேலும் 30 நாட்களுக்கு மூடல்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக கனடா – அமெரிக்கா எல்லை மேலும் 30 நாட்களுக்கு மூடப்படும் என்று கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, அமலில் உள்ள இருநாடுகளுக்கு இடையிலான எல்லைப்பகுதி மூடல் நடவடிக்கை வரும் செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வரும் நிலையில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இருநாடுகளுக்கு இடையிலான அத்தியாவசிய பொருட்களுக்கான போக்குவரத்து வழக்கம்போல தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இரு நாடுகளின் மக்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் இந்த முடிவு மிகவும் முக்கியமானது” என்று ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

ஸ்பெயினில் குழந்தைகள் வெளியே செல்ல அனுமதி

கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் முடக்க நிலையின் காரணமாக கடந்த மார்ச் 14ஆம் தேதி முதல் வீட்டுக்குள்ளேயே அடைபட்டிருக்கும் குழந்தைகளை வெளியே செல்ல அனுமதிக்கும் முடிவை அந்த நாட்டு பிரதமர் வெளியிட்டுள்ளார்.

கோவிட்-19 நோய்த்தொற்றால் இருபது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ள ஸ்பெயினில் கடந்த மாதம் முடக்க நிலை அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கூட 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதையடுத்து, ஒரு மாதகாலத்துக்கும் மேலாக வீடுகளுக்குள்ளேயே அடைபட்டிருக்கும் குழந்தைகளை வெளியே செல்ல அனுமதிக்க வேண்டுமென்ற கோரிக்கை அந்த நாடு முழுவதும் எழுந்தது.

இதையடுத்து, வரும் ஏப்ரல் 27ஆம் தேதி முதல் 12 வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு வெளியே செல்ல கட்டுப்பாடுகளுடன் அனுமதியளிப்பது தொடர்பாக திட்டம் தீட்டப்பட்டு வருவதாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்சேஸ் அறிவித்துள்ளார்.

மற்ற நாடுகளில் என்ன நிலை?

இத்தாலியின் லொம்பார்டி பிராந்தியத்தில் இரண்டாம் உலகப்போரின்போது மிலன் நகரத்தில் வீசப்பட்ட குண்டுகளை விட அதிகமானோர் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்துள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் நேற்று மட்டும் கோவிட்-19 நோய்த்தொற்றால் மேலும் 482 பேர் உயிரிழந்துள்ளனர், இதன் மூலம் அந்த நாட்டின் மொத்த உயிரிழப்புகள் 23,227ஆக அதிகரித்துள்ளது. இதில் பாதிக்கும் அதிகமானவர்கள் லொம்பார்டி பிராந்தியத்தை சேர்ந்தவர்கள்.

மற்ற ஐரோப்பிய நாடுகளை போன்று பிரிட்டனையும் உலுக்கி வரும் கொரோனா வைரஸின் பாதிப்புகள் “ஒரு சில வாரங்களில் தீர்த்துவிட கூடிய ஒன்றல்ல” என்று அந்த நாட்டின் தேசிய சுகாதார அமைப்பின் இயக்குநர் ஸ்டீபன் போவிஸ் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் இதுவரை 15,464 பேர் கோவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இந்த தகவல்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருபவை. ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் தற்போதைய எண்ணிக்கை மேம்படுத்தப்படாமலும் இருக்கலாம்.

மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் மொத்தம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள்
மகாராஷ்டிரம் 3323 331 201
டெல்லி 1707 72 42
மத்தியப் பிரதேசம் 1355 69 69
தமிழ்நாடு 1323 283 15
குஜராத் 1272 88 48
ராஜஸ்தான் 1229 183 11
உத்திரப் பிரதேசம் 969 86 14
தெலங்கானா 791 186 18
ஆந்திரப் பிரதேசம் 603 42 15
கேரளம் 396 255 3
கர்நாடகம் 371 92 13
ஜம்மு & காஷ்மீர் 328 42 5
மேற்கு வங்கம் 287 55 10
ஹரியாணா 225 43 3
பஞ்சாப் 202 27 13
பிகார் 85 37 2
ஒடிஷா 60 21 1
உத்திராகண்ட் 42 9 0
இமாச்சல பிரதேசம் 38 16 1
சத்தீஸ்கர் 36 24 0
அசாம் 35 9 1
ஜார்கண்ட் 33 0 2
சண்டிகர் 21 9 0
லடாக் 18 14 0
அந்தமான் & நிக்கோபார் தீவுகள் 12 11 0
கோவா 7 6 0
புதுவை 7 3 0
மணிப்பூர் 2 1 0
மிசோரம் 1 0 0

தகவல்: சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »