Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): தாயகம் அழைத்து வரப்பட்ட மலேசியர்கள்; சிங்கப்பூரில் என்ன நிலை?

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக உலகம் முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 68 நாடுகளில் சிக்கித் தவித்த 11,363 மலேசியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

இன்னும் 22 நாடுகளில் 511 மலேசிய மக்கள் சிக்கி இருப்பதாக அவர் குறிப்பிட்டார். அவர்களை அழைத்து வர வெளியுறவு அமைச்சு அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

“தாயகம் திரும்பியுள்ள மலேசியர்களில் பெரும்பாலானோர் சொந்தச் செலவிலோ அல்லது தனியார் ஏற்பாட்டிலோ வந்து சேர்ந்துள்ளனர்.

“இத்தாலி, இரானில் இருந்து மலேசியர்களை அழைத்து வருவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஏனெனில் அவ்விரு நாடுகளும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அந்நாடுகளில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் மலேசியர்கள் அழைத்து வரப்பட்டனர்” என்று அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

62.4% விழுக்காடு கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் குணமடைந்துள்ளனர்

இதற்கிடையே மலேசியாவில் இன்று ஒரே நாளில் புதிதாக 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதே வேளையில் இன்று 103 நோயாளிகள் முழுமையாக குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறி உள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 5,532 என்றும், இவர்களில் 3,452 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

மலேசியாவில் இதுவரை 62.4% விழுக்காடு கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் குணமடைந்துள்ளனர். 93 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1,987 நோயாளிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டு 35 நாட்கள் ஆகியுள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மலேசியா சிறப்பாகச் செயல்பட்டு வந்துள்ளதாக டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர்நிலவரம்

சிங்கப்பூரில் புதிதாக 1,016 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அங்கு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

புதிதாக நோய்த் தொற்றியோரில் 15 பேர் மட்டுமே சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தர வசிப்பிட உரிமை பெற்றவர்கள் என அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மற்ற அனைவரும் அந்நியத் தொழிலாளர்களுக்கான தங்குவிடுதிகளில் வசிப்பவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூகப் பரவலைப் பொறுத்தவரை புதிய நோய்த் தொற்றுச் சம்பவங்களின் சராசரி கடந்த வாரம் 39ஆக இருந்தது என்றும், தற்போது அது 28ஆக குறைந்துள்ளது என்றும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டி உள்ளது.

ஊழியர் தங்கும் விடுதிகளில் பரிசோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. விடுதிகளில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மாணவர்களின் பள்ளி விடுமுறை வழக்கமான ஜூன் மாதத்துக்குப் பதிலாக இவ்வாண்டு முன்னதாகவே, அதாவது, மே மாதம் 5ஆம் தேதி முதல் தொடங்கும் என்று சிங்கப்பூர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளதாக சிங்கப்பூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் சிங்கப்பூர் மக்கள் நன்கு ஒத்துழைத்து வருவதாக பிரதமர் லீ தெரிவித்துள்ளார்.

“தங்குவிடுதிகளில் தங்கி இருப்போர் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படுவது கடுமையான பிரச்சினை. வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் மருத்துவப் பராமரிப்பு வசதிகளை அதிகரித்து வருகிறோம்.

“நமது மருத்துவர்கள், தாதியர், சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் அனைவரும் கடுமையாகப் பணியாற்றி பாதிப்பை முன்கூட்டியே கண்டறிந்து ஊழியர்களை நல்ல முறையில் கவனித்துக் கொள்கிறார்கள்,” என்று பிரதமர் லீ மேலும் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »