Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) ஊரடங்கு முடிந்து பணிக்குத் திரும்பும்போது அலுவலகங்கள் பாதுகாப்பாக இருக்குமா?

பல நாடுகளில் முடக்கநிலை அமலை நீக்கத் தொடங்கியுள்ள நிலையில், அலுவலர்கள் அலுவலகங்களுக்குப் பணிக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். நோய்த் தாக்குதல் முடியாத நிலையில், அலுவலகங்கள் எந்த அளவுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்று அவர்கள் அச்சப்படுவது புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.

அலுவலகங்களில் பழைய நடைமுறைகளுடன் சேர்த்து, அலுவலர்களை கண்காணிக்க தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

நீங்கள் அலுவலக வளாகத்தில் நுழையும் போது உடல் வெப்பத்தைக் கண்டறியும் தெர்மல் கேமராக்கள் பொருத்துதல் முதல், அருகில் இருக்கும் சக அலுவலரை நீங்கள் நெருங்கினால் எச்சரிக்கக் கூடிய ஒரு செயலி அல்லது உடலில் வைத்துக் கொள்ளும் சாதனம் போன்ற ஏதாவது இருக்கும். மைனாரிட்டி ரிப்போர்ட் என்ற திரைப்படத்தின் காட்சிகளைப் போல அது இருக்கலாம்.

ஆம்ஸ்டர்டாமில் உள்ள எட்ஜ் வளாகம், உலகில் அதிக ஸ்மார்ட்டான, நீண்டகால தேவைகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட பகுதியாக சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. இப்போது தொற்றும் தன்மையுள்ள, ஆளைக் கொல்லக் கூடிய வைரஸ் தாக்குதல் சூழ்நிலையில் உணர்பொறிகள் (சென்சார்கள்) பொருத்திய அலுவலக ஏற்பாடுகளுக்கு அது மாறிக் கொண்டிருக்கிறது.

அதை உருவாக்கிய ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளரான கோயன் வான் ஊஸ்ட்ரோம், உடனடியாக நிகழ வேண்டிய ”புத்திசாலித்தனமான” சில மாற்றங்கள் உள்ளதாக பிபிசியிடம் கூறினார்.

காற்றின் தரம்

நோய்த் தொற்று காலத்தில் அலுவலகத்தில் கதவுகளைத் திறப்பது போன்ற விஷயங்களும் கூட ஆபத்தானவையாக இருக்கலாம்.

”இப்போது கையால் தள்ளி கதவைத் திறக்கிறார்கள். ஆனால் குரல் வழிக் கட்டுப்பாடு அல்லது ஒரு செயலி மூலமாக திறக்கும் வகையில் அதை மாற்ற வேண்டும். அப்படி செய்வதன் மூலம் வைரஸ் பரவாது என்பதை நாம் உறுதி செய்தால் போதும்.”

”ஒரு தளத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதை அறிய கேமராக்கள் உள்ளன. மென்பொருளில் மாற்றம் செய்தால், ஒவ்வொருவரும் எவ்வளவு இடைவெளியில் இருக்கிறார்கள் என்பதை அறிந்திட முடியும். அவர்கள் யாராவது இன்னொருவருக்கு மிக அருகில் இருந்தால் அவருடைய செல்போனுக்கு எச்சரிக்கை ஒலியை அனுப்ப முடியும்.”

”எல்லோரும் இதை விரும்ப மாட்டார்கள். அவர்களுடைய அந்தரங்கத்தில் தலையிடும் செயல்பாடுகளாக இதை பார்ப்பார்கள். எனவே, எல்லோரும் அலுவலகப் பணிக்குத் திரும்பியதும் இதைப் பயன்படுத்த வேண்டுமா என்பதைப் பற்றி நாங்கள் முடிவு செய்யவில்லை.”

எட்ஜ் வளாகத்தில் இருக்கும் அலுவலர்களுக்கு ஏற்கெனவே ஒரு செல்போன் செயலிஉள்ளது. அலுவலக வெப்பநிலை எவ்வளவு உள்ளது, காற்றின் தரம் எப்படி உள்ளது என்ற தகவல்களை அதன் மூலம் அறிந்திட முடியும். கேண்டீனில் இருந்து மதிய உணவுக்கும் அந்த செயலி மூலமாகவே ஆர்டர் செய்திட முடியும்.

கடந்த காலத்தில் காற்றின் தரத்தைப் பற்றி யாரும் அவ்வளவாக கவலைப்படவில்லை. இப்போது புதிய காற்றின் சுழற்சி இல்லாமல் போனால் வைரஸ் தொற்றிக் கொள்ளும் ஆபத்து அதிகமாக இருக்கும் என்பதால், காற்றின் தரத்தைப் பற்றி மக்கள் கவலைப்படத் தொடங்கியுள்ளனர் என்று வான் ஊஸ்ட்ரோம் கருதுகிறார்.

சமூக இடைவெளி விதிகளைப் பின்பற்றுவதற்கு, இருக்கை இடங்களை மாற்றி அமைத்தாக வேண்டும். ஆனால் பணியாற்றும் நடைமுறைகளில் அதிக மாற்றங்கள் செய்வதை முதலாளிகள் ஏற்றுக் கொள்வது சந்தேகமே என்று வெர்டான்ட்டிக்ஸ் என்ற ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றும் ஸ்மார்ட் கட்டட நிபுணர் சூசன் கிளார்க் கூறுகிறார்.

“கூடுதல் இட வசதியை ஏற்படுத்திக் கொள்வதற்கு பெரும்பாலான நிறுவனங்கள் தயாராக இல்லாமல் இருக்கலாம். ஆனால், ஒருவர் பணி முடித்து புறப்பட்டால், அந்த இடத்தை சுத்தம் செய்து கிருமிநீக்கம் செய்யும் வேலையை மேற்கொள்ள வேண்டியிருக்கும்” என்று அவர் கூறுகிறார்.

பாதுகாப்பான கிருமிநீக்க மின்விளக்கு வசதிகளை வைட்டல் வியோ போன்ற மின்விளக்கு சாதன நிறுவனங்கள் அளிக்கின்றன. மேற்பரப்புகளில் உள்ள சில வகை பாக்டீரியாக்களை கொல்லக் கூடிய வெண்மை கலந்த வயலெட் ஒளி இந்த மின் விளக்கில் இருந்து வெளியாகும். உணவகங்கள் அல்லது அதிகம் பேர் இருக்கும் அலுவலகங்களில் இது பயனுள்ளதாக இருக்கும் என்றாலும், பல இடங்களில் இதைப் பொருத்துவதற்கான செலவு கட்டுபடியானதாக இருக்காது என்று கிளார்க் தெரிவிக்கிறார்.

வெப்பநிலை பரிசோதனை

விமான நிலையங்கள் மற்றும் காவல் துறை ஹெலிகாப்டர்களில் பயன்படுத்துவதற்கு தெர்மல் கேமராக்களை பிளிர் டெக்னாலஜிஸ் என்ற தொழில்நுட்ப நிறுவனம் தயாரித்து வருகிறது. கடந்த சில மாதங்களில் அந்த நிறுவனத்தின் விற்பனை மிக வேகமாக அதிகரித்துள்ளது.

தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்களிடம் இருந்து இந்த நிறுவனத்துக்கு ஆர்டர்கள் வரத் தொடங்கியுள்ளன.

“அடிப்படையில் எல்லா தொழிற்சாலைகளும் தங்களுடைய தொழிலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது” என்று பிளிர் நிறுவனத்தின் விற்பனை பிரிவு துணைத் தலைவர் எஜ்ரா மெர்ரில் கூறியுள்ளார்.

கண்ணீர் வெளியாகும் இடத்தில் ஐந்து சதுர மில்லி மீட்டர் பகுதிதான் தோலின் வெப்பத்தை அறிவதற்கு மிகச் சிறந்த இடமாக அறியப் பட்டுள்ளது. அந்த இடத்தின் வெப்பத்தை இந்தக் கேமரா கண்டறிகிறது. கண்ணாடி அணிந்திருப்பவர்கள், அதைக் கழற்றியாக வேண்டும்.

வெப்பநிலை மதிப்பீடு செய்யும் நேரம், அது மழை நாளா அல்லது வெப்பமான நாளா என்பது போன்ற தகவல்களையும் கருத்தில் கொண்டு இந்தக் கேமராக்கள் செயல்படும். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மாதிரியான உடல் வெப்பம் இருக்கும் என்பதும் கணக்கில் கொள்ளப்படும்.

இது ஒரு பகுதி பரிசோதனைதான். இதற்கடுத்த நிலையில் மருத்துவ ரீதியில் பயன்படுத்தும் தெர்மா மீட்டர் மூலம் ஒருவரின் உடல் வெப்பம் பரிசோதிக்கப்படும் என்று திரு மெர்ரில் கூறுகிறார்.

இந்தத் தொழில்நுட்பம் சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு தொழிற்சாலையில் பரிசோதிக்கப்பட்டது. அலுவலர்களின் கருத்துகள், வெவ்வேறு மாதிரியானவையாக இருந்தன.

“பலரும் இதைப் புதிய அனுபவமாகக் கருதினர். தங்களுக்கு விழிப்படலம் ஸ்கேன் செய்யப்படுகிறது என்று சிலர் நினைத்தனர்” என்று அவர் குறிப்பிட்டார்.

உண்மையில், யாரையும் இந்தக் கேமரா படம் பிடிக்காது. அப்படி படம் எடுத்தால் அதை வைத்து, யாரையும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. அது தொழிலாளியின் அந்தரங்க விஷயத்தில் தலையிடுவதாக இருக்கும் என்ற மெர்ரில் ஒப்புக்கொள்கிறார். சில இடங்களில் அது சட்டவிரோதமான செயலாகவும் உள்ளது.

“சில நாடுகளில், தொழிலாளியின் ஆரோக்கியத்தை கண்காணிப்பது தடை செய்யப் பட்டுள்ளது. உதாரணத்துக்கு இத்தாலியில், உடல் வெப்பம் போன்ற அம்சங்களைக் கண்டறிவது உள்ளிட்ட, ஆரோக்கியத்தை கண்காணிக்கும் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கும் சட்டங்கள் உள்ளன” என்கிறார் கிளார்க்.

நல்ல காபி

கூட்ட அறைகள் ஏற்பாடு செய்தல், மின்விளக்கு வெளிச்சம் மற்றும் வெப்பத்தை சீராக்குதலுக்கு சீமென்ஸ் போன்ற நிறுவனங்கள் ஏற்கெனவே செயலிகளை உருவாக்கியுள்ளன.

தொழில்களை கவனமாக நடத்த வேண்டும் என்று வழக்கறிஞர் ரவி நாயக் கூறுகிறார். “பெயரளவில் தொழில்நுட்பங்களை” பயன்படுத்துவதாக இருக்கக் கூடாது என்கிறார் அவர்.

“யார் வேலை பார்க்க முடியும், யாரால் முடியாது என்பதைப் புரிந்து கொள்வதற்கானதாக இது இருக்குமா, அப்படி இல்லை என்றால் இதன் முக்கியத்துவம் என்ன? இது அடிப்படை மனித உரிமைகளில் தலையிடும் விஷயமாக உள்ளதால், இந்தத் தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதற்கு ஆதாரப்பூர்வமான காரணம் இருக்க வேண்டும். இப்போது அதற்கான வாய்ப்பு உள்ளதாக நான் கருதவில்லை” என்று அவர் தெரிவிக்கிறார்.

கட்டட வளாகத்துக்கே செல்லாமல் இருப்பது நீண்டகால தீர்வாக இருக்கலாம்.

நகரில் அதிக செலவு பிடிக்கும் பகுதியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வைத்து வேலை வாங்குவது “கடந்த கால விஷயமாகிவிடும்” என்றும், வீட்டில் இருந்தே வேலை செய்யும் நடைமுறை நல்ல பலன் தருவதாக இருக்கிறது என்றும் பர்க்ளே வங்கியின் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஜேஸ் ஸ்டேலே கூறுகிறார்.

ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் என்ற முறையில் வேன் ஊஸ்ட்ரோம் இதை மறுக்கிறார்.

“சமூக கூடல்” வாய்ப்பாக அலுவலகங்கள் உள்ளன. அங்கே அவர்கள் கூடிப் பழகுகிறார்கள் – ஆனால் அவர்களுக்கு தேவையானது ஒரு நல்ல காபி என்கிறார் திரு வேன் ஊஸ்ட்ரோம்.

நிறைய பேர் வீடுகளில் இருந்தே பணியாற்ற விரும்பும் சூழ்நிலையும், “பலரையும் அலுவலகத்துக்கு வரவழைப்பதற்கு முதலாளிகள் ஈர்ப்பான திட்டங்களை கடைபிடிக்க வேண்டி இருக்கும்” என்றும் அவர் கருதுகிறார்.

“அலுவலகங்கள் கேளிக்கை இடங்களைப் போன்றதாக இருக்கும்படி செய்ய வேண்டியது எதிர்காலத்தில் முக்கியமானதாக இருக்கும்” என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »