Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவல்: 5 கோடி பேரை பலி கொண்ட ஸ்பானிஷ் ஃப்ளூ தொற்றுக்குப் பிறகு உலகம் எப்படி இருந்தது?

உலகையே அச்சறுத்தும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பிரச்சனையின் போது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக்காலத்தில் உலகம் முழுவதும் பெரும் திரளான மக்களைத் தாக்கிய, அனைத்து பெருந்தொற்றுகளின் தாய் என்று வருணிக்கப்படும் ஸ்பானிஷ் ஃப்ளூ குறித்து கேள்விபட்டிருப்போம்.

1918-1920 வரையிலான ஆண்டுகளில் இந்த ஸ்பானிஷ் ஃப்ளூ (இன்ஃபுளுவென்சா தொற்றுப்பரவல்) உலகம் முழுக்க 4 முதல் 5 கோடி பேர் உயிரிழக்க காரணமாக இருந்தது என உலக சுகாதார நிறுவனம் மற்றும் நோய்க்கட்டுபாட்டு மையங்கள் தெரிவித்துள்ளன. அப்போதிருந்த உலக மக்கள் தொகையில் சுமார் மூன்றில் ஒரு பங்கினருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டது.

முதலாம் உலகப்போரில் இறந்தவர்களை விட அதிக உயிரிழப்புகள் இந்த தொற்றின் காரணமாக நிகழ்ந்தது. முதலாம் உலகப்போர் இந்த தொற்று பரவியதன் காரணமாகவே முடிவுக்கு வந்தது.

கோவிட்-19 தொற்றினால் ஏற்பட்டதைப் போல கடந்த நூற்றாண்டில் உலகையே நிறுத்தி வைத்த அந்த ஸ்பானிஷ் ஃப்ளூ காலம் முடிந்தவுடன் எப்படி இருந்தது?

1921, வித்தியாசமான உலகம்.

1918ல் தற்போது இருப்பதைவிட மருத்துவமும் அறிவியலும் குறைவாகவே இருந்தன. அப்போது மருத்துவர்களுக்கு ஸ்பானிஷ் ஃப்ளூ ஒரு நுண்ணுயிரியால் ஏற்படுகிறது எனவும் அது மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது எனவும் தெரிந்ததே தவிர அதற்குப் பின்னால் இருப்பது ஒரு வைரஸ் என்றே அவர்களுக்குத் தெரியவில்லை. அது ஒரு பாக்டீரியாகவாக இருக்கும் என்றே அவர்கள் நினைத்தனர்.

அதற்கேற்ற சிகிச்சைகளும் குறைவாகவே இருந்தன. உலகில் முதல் ஆன்டிபாடி 1928ல்தான் கண்டுபிடிக்கப்பட்டது.

1940களில்தான் முதல் ஃப்ளூ தடுப்பு மருந்து பொது வெளியில் கிடைத்தது.

அப்போது பொது சுகாதாரம் என்பது வளர்ந்த நாடுகளில் கூட ஆடம்பரமாகவே கருதப்பட்டது.

தொழில் புரட்சி நடந்த நாடுகளில், பெரும்பாலும் இருந்த மருத்துவர்கள் தனியாக வேலை செய்தனர் அல்லது தொண்டு நிறுவனங்கள், மத நிறுவனங்கள் ஆகியவற்றின் கீழ் வேலை செய்தனர். பெரும்பாலான மக்களுக்கு அவர்களில் சேவை கிடைக்காது என ‘Pale Rider: The Spanish Flu of 1918 and How it Changed the World’ என்னும் நூலின் ஆசிரியரும் அறிவியல் எழுதாளருமான லாரா ஸ்பின்னி கூறினார்.

இளமையும் வறுமையும்

1888-90க்கு இடைப்பட்ட காலத்தில் 10 லட்சம் பேரைக் கொன்ற பெருந்தொற்றைக் காட்டிலும் மிக அதிகமாகவும் முன் எப்போதும் காணாததைப்போலவும் மக்களைத் தாக்கியது ஸ்பானிஷ் ஃப்ளூ. 20 வயதில் இருந்து 40 வயதுவரை இருந்த ஆண்களே அதிக அளவில் இதனால் உயிரிழந்தனர். ஏனென்றால் இந்த தொற்று முதலில் மேற்கு பகுதியில் இருந்த படைகளிலேயே பரவத் தொடங்கியது.

ஸ்பானிஷ் ஃப்ளூ தொற்று வளம் குறைந்த நாடுகளை அதிகம் தாக்கியது. 2020ல் ஹார்வார்டு பல்கலைகழக ஆராய்ச்சியாளர் ஒருவர் செய்த ஆய்வின்படி ஸ்பானிஷ் ஃப்ளூ காலத்தில் அமெரிக்க மக்கள் தொகையில் 0.5% பேர் உயிரிழந்தனர் (அதாவது கிட்டதட்ட 5,50,000 உயிரிழப்புகள்). அதே நேரத்தில் இந்திய மக்கள் தொகையில் 5.2% பேர் உயிரிழந்தனர்( கிட்டதட்ட 1 கோடியே 70 லட்சம் பேர்).

அதேபோல் பொருளாதார வளர்ச்சியும் அடிபட்டது. அனைத்து நாடுகளிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6% குறைந்தது. ஸ்பானிஷ் ஃப்ளூ ஒரு பொருளாதாரப் பேரழிவுக்கு பின்னரே சென்றது என கூறியுள்ளார் ‘Pandemic 1918’ என்ற நூலின் ஆசிரியர் கேதரின் அர்னால்ட்

உலகின் பல நாடுகளில் குடும்பத் தொழிலைப் பார்க்க, பண்ணை நடத்த, வேறு ஏதேனும் தொழில் கற்றுக்கொடுக்க இளைஞர்களே இல்லை. திருமணம் செய்து கொள்ளக்கூட ஆண்கள் இல்லை என்கிறார் அவர். ஆண்கள் இல்லாத காரணத்தால் பெண்கள் தங்களுக்கு ஏற்ற மணமகன்களை தேர்ந்தெடுக்க முடியவில்லை எனவும் கூறுகிறார் கேதரின் அர்னால்ட்.

பெண்கள் வேலை செல்லத் தொடங்கினர்

ஸ்பானிஷ் ஃப்ளூ பல நாடுகளில் எண்ணிக்கையில் இருந்த பாலின சமத்துவத்தைக் குறைத்தது. டெக்ஸாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஒருவர் கண்டறிந்ததன்படி ஃப்ளூ மற்றும் முதலாம் உலகப்போர் ஏற்படுத்திய உயிரிழப்புகள் காரணமாக அமெரிக்காவில் பெண்கள் பல வேலைகளிலும் சேரத் தொடங்கினர்.

1920ல் அந்நாட்டில் வேலை செய்த 21% பேர் பெண்கள் என ப்ளாக்பெர்ன் கூறியுள்ளார்.

அந்த நேரத்தில் பெண்களுக்கு வாக்குரிமை தருவதற்கான சட்டத் திருத்தம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.

பல நாடுகளில் 1918 ஃப்ளூ பெண்கள் உரிமையில் சில விளைவுகளை ஏற்படுத்தியது எனவும் பிளாக்பெர்ன் கூறுகிறார். வேலைக்கு ஆட்கள் இல்லையென்பதால் அனைத்து ஊழியர்களின் சம்பளமும் உயர்த்தப்பட்டது.

பிறந்த குழந்தைகள்

ஸ்பானிஷ் ஃப்ளூ சமயத்தில் பிறந்த குழந்தைகளுக்கு இதயக் கோளாறு போன்ற நோய்கள் அதிகம் இருந்தன என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

1918-1919ல் பிறந்த குழந்தைகள் பிற்காலத்தில் குறைவாகவே வேலைக்கோ கல்லூரிப் படிப்புக்கோ சென்றனர் என பிரிட்டன் மற்றும் பிரேசிலில் நடந்த ஆய்வு ஒன்று காட்டுகிறது.

அப்போது இருந்த மன அழுத்தம் காரணமாக கரு வளர்ச்சி பாதிக்கப்பட்டது என சில ஆய்வுகள் கூறுகின்றன.

இதனால் 1915ல் இருந்து 1920 வரை பிறந்தவர்கள் மற்றவர்களை விட உயரம் குறைவாகவே இருப்பர் என அமெரிக்க ராணுத்தின் ஆய்வு ஒன்று கூறுகிறது.

காலனியாதிக்க எதிர்ப்பு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு

1918ல் இந்தியாவில் பிரிட்டிஷ் காலனியாதிக்கம் நிலவியது. ஸ்பானிஷ் ஃப்ளூ பிரிட்டன் மக்களை விட இந்தியர்களை கடுமையாக தாக்கியது. புள்ளி விவரப்படி 1000 இந்திய மக்களில் 61.6 பேர் உயிரிழந்தனர் ஆனால் ஐரோப்பாவில் 1000 பேருக்கு 9 பேர் மட்டுமே உயிரிழந்தனர்.

இந்த தொற்றை சரியாகக் கையாளவில்லை என பிரிட்டிஷ் அரசு மீது இந்தியர்கள் குற்றம் சாட்டினர். 1919ல் ஓர் இதழில் பிரிட்டிஷாரை இதற்காக விமர்சித்தார் காந்தி.

மற்ற எந்த நாகரிக நாடும் இந்திய அரசைப் போன்று பெருந்தொற்று காலத்தில் எதுவும் செய்யாமல் இருந்திருக்காது என அவர் எழுதியிருந்தார்.

1923ல் ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்னோடியாக இருந்த லீக் ஆஃப் நேஷன்ஸ் என்ற பன்னாட்டு மன்றம் ஒரு சுகாதார அமைப்பை நிறுவியது. பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த பல நாடுகளை சேர்ந்த மருத்துவர்களால் நடத்தப்பட்ட அந்த நிறுவனம் சர்வதேச பொது சுகாதாரத்துக்கான அமைப்பு என அழைக்கப்பட்டது. பின்னர் 1948ல் உலக சுகாதார நிறுவனம் தொடங்கப்பட்டது.

பொது சுகாதார வளர்ச்சி

பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்பு சமூக மருத்துவத்தை வளர்த்தது. 1920ல் பொது சுகாதார வசதி ஏற்படுத்திய முதல் நாடானது ரஷ்யா. பிறகு அனைத்து நாடுகளும் அதை பின்பற்றின.

1920ல் பல நாடுகள் சுகாதரத் துறையை புதிதாக அமைத்தன என்கிறார் லாரா ஸ்பின்னி.

மற்ற துறைகளின் உதவியையும் பலரிடமிருந்து பண உதவியையும் கேட்க சுகாதாரத்துறை தலைவர்கள் அமைச்சரவையில் இருந்து நேரடியாக சென்று கோரிக்கை விடுத்தனர் என எழுதியுள்ளார் லாரா.

ராயல் ஹாலோவே பல்கலைக்கழகத்தின் மானுடவியலாளரான ஜெனிஃப்ர் கோலே இந்த தொற்று பல நாடுகளில் நன்மையை விளைவித்தது என்கிறார்.

முடக்கம் மற்றும் சமூக விலகல்

1918ல் ஃப்லடெல்ஃபியா மற்றும் செயின்ட் லூயிஸ் என்னும் இரு அமெரிக்க நகரங்கள் அமெரிக்க ராணுவத்திற்கு நிதி திரட்ட படை அணிவகுப்பு நடத்த இருந்தன.

ஸ்பானிஷ் ஃப்ளூ அப்போது தீவிரமாகப் பரவியது. ஃபிலடெல்ஃபியா நகரம் அணிவகுப்பை நடத்தியது. ஆனால் செயின்ட் லூயிஸ் அதை ரத்து செய்தது. அணிவகுப்பு நடத்திய நகரில் ஒரு மாதத்தில் 10,000 பேர் உயிரிழந்தனர். நடத்தாத நகரில் 700க்கும் குறைவானோரே உயிரிழந்தனர்.

இது தொற்றின்போது சமூக விலகல் எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டுகிறது.

பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர்கள் 1918ன் முடக்க நடவடிக்கை குறித்து ஆராய்ச்சி செய்தனர்.

கடுமையான முடக்க நடவடிக்கை எடுத்த நகரங்களில் தொற்றுக்கு பிறகு இயல்பு நிலை வெகு விரைவாகத் திரும்பியதை அந்த ஆய்வு வெளிப்படுத்தியது.

மறந்த பெருந்தொற்று

ஸ்பானிஷ் ஃப்ளூ தொற்று காரணமாக அமெரிக்க அதிபர் வுட்ரோ வில்சன், பிரிட்டன் பிரதமர் லாய்ட் ஜார்ஜ் ஆகியோர் பாதிக்கப்பட்டனர். பிரேசில் அதிபர் ராட்ரிக்ஸ் ஆல்விஸ் உயிரிழந்தார்

ஆனால் ஸ்பானிஷ் ஃப்ளூ முதலாம் உலகப்போரால் பெரிதும் மறைக்கப்பட்டது.

2018ல் ஸ்பானிஷ் ஃப்ளூ வந்து நூறு ஆண்டுகள் ஆன போதும் அதன் நினைவாக எதுவும் இருக்காது. சில மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கல்லறைகள் மட்டுமே இதன் நினைவாக இருக்கும் என்கிறார் மருத்துவ வரலாற்றாளர் மார்க் ஹானிங்ஸ்பம்.

1924ல் வெளிவந்த என்சைக்லோபீடியா பிரிட்டானிகா 20ஆம் நூற்றாண்டின் முக்கிய ஆண்டாக அந்த ஆண்டினைக் குறிப்பிடவில்லை என்கிறார் ஹானிங்ஸ்பம். இந்த தொற்று பரவலைப் பற்றிய முதல் வரலாற்று நூல் 1968ல் தான் வெளிவந்தது.

இப்போது கோவிட்-19 மக்களுக்கு இதை மீண்டும் நினைவூட்டுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »