Press "Enter" to skip to content

ஃபேஸ்புக் நிறுவனம்: ’16 நாடுகள், 37 ஆயிரம் கிலோமீட்டர்’ – மலைக்க வைக்கும் ஒரு முயற்சி மற்றும் பிற செய்திகள்

இணையவேகத்தை அதிகரிக்க ஃபேஸ்புக்கின் மலைக்க வைக்கும் முயற்சி

ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள 16 நாடுகளில் இணைய வேகத்தை அதிகரிக்க மலைக்க வைக்கும் ஒரு முயற்சியில் ஃபேஸ்புக் நிறுவனம் இறங்கி உள்ளது. அதாவது அங்குள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து கடலுக்கு அடியில் 37,000 கி.மீ நீளத்துக்கு வடங்களைப் பதிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. ஆப்ரிக்காவில் உள்ள இளைய தலைமுறையினரிடம் ஃபேஸ்புக்கை எடுத்து செல்லும் முயற்சியாக இதை செய்கிறது அந்நிறுவனம். 2024ஆம் ஆண்டு இது பயன்பாட்டுக்கு வரும். சர்வதேச அளவில் சராசரியாக பத்தில் ஆறு பேருக்கு இணைய சேவை கிடைக்கும் போது, ஆப்ரிக்காவில் சராசரி பத்துக்கு நான்காக உள்ளது.

130 கோடி மக்கள் தொகை கொண்ட அந்த கண்டத்தில் தொழில்நுட்பம் சார்ந்த வணிகத்திற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆப்ரிக்காவையும், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை இணைக்கும் இந்த 2அ ஆப்ரிக்கா எனும் இந்த திட்டத்தின் மதிப்பு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்கிறது ஃபேஸ்புக் நிறுவனம்.

கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியின்கீழ் இலங்கை ராணுவ மயமாகிறதா?

ராஜபக்ஷ சகோதரர்களில் ஒருவர் பிரதமராகவும், ஒருவர் ஜனாதிபதியாகவும் உள்ள இலங்கையின் மிக முக்கிய பதவிகள் தற்போது ராணுவத்தினர் வசமாகியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இது நாட்டை ராணுவமயமாக்கும் முயற்சி என்று அரசியல் கட்சிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்தாலும், பொதுமக்களின் நலனை அடிப்படையாக வைத்தே முடிவுகள் எட்டப்பட்டு வருவதாக இந்த நியமனங்கள் குறித்து அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ராணுவ அதிகாரியாக இருந்தவர். அவர் பதவிக்கு வந்தபின் அவருக்கு கீழுள்ள பல பதவிகளுக்கு ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இலங்கையின் பல பதவிகளில் ராணுவத்தினர் பதவி வகிக்கின்ற நிலையில், சுகாதார அமைச்சின் முக்கிய பதவியான செயலாளர் பதவிக்கு ராணுவ அதிகாரியொருவரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

சுகாதார மற்றும் சுதேச அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முணசிங்க தனது கடமைகளை பொறுப்பேற்றிருக்கிறார் .

விரிவாகப் படிக்க:அதிகாரத்தில் ராணுவத்தினர்: கோட்டாபய ஆட்சியின்கீழ் ராணுவ மயமாகிறதா இலங்கை?

தமிழகத்துக்கு பிழைக்க வந்தவர்களை சொந்த ஊருக்கு துரத்தும் கொரோனா வைரஸ் ஊரடங்கு

எந்த கிருஷ்ணன் வந்து காப்பாற்றுவான் என தெரியாது. 40 வயதான திரௌபதி எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் அவரது உயிர்மூச்சைக் கொடுத்து எடுத்துவைக்கும் அடியாகும். கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து, தமிழகத்தில் இருந்து தங்களது சொந்த மாநிலத்திற்கு நடைபயணமாக செல்லும் பல்லாயிரக்கணக்கான வடமாநிலத்தவர்களில் திரௌபதியும் ஒருவர்.

உத்தரபிரதேசத்தில் உள்ள சோன்பத்ரா நகரத்தில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகம் வந்தவர். இரண்டு மகன்கள் மற்றும் கணவருடன் தமிழகத்தில் பல ஊர்களில் சாலை சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு, கிடைக்கும் வருமானத்தில், தனது மகளின் எதிர்காலத்திற்காக ஒவ்வொரு ரூபாயையும் சேர்த்த தாய் திரௌபதி.

விரிவாகப் படிக்க:தேய்ந்த செருப்புகள்; ஓய்ந்த கால்கள் – ஊரடங்கின் நடுவே ஒரு நடைபயணம்

தமிழ்நாட்டில் நாளை முதல் மீண்டும் மதுக் கடைகள் திறப்பு

தமிழ்நாட்டில் மதுக் கடைகளைத் திறக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மாநிலத்தில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என மதுக்கடைகளை நடத்திவரும் அரசு நிறுவனமான தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக மதுக்கடைகள் திறக்கப்பட்டபோது உயர் நீதிமன்றம் சில நிபந்தனைகளை விதித்தது. அந்த நிபந்தனைகள் மீறப்பட்டதாகக் கூறி, மதுக்கடைகளை நடத்த தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம் அந்தத் தடையை நீக்கியது.

விரிவாகப் படிக்க:தமிழ்நாட்டில் நாளை முதல் மீண்டும் மதுக் கடைகள் திறப்பு

நிர்மலா சீதாராமன்: விவசாயம், மீன்வளம் சார்ந்த புதிய திட்டங்கள் அறிவிப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அறிவித்த பொருளாதார உதவி தொகுப்பு குறித்த விவரங்களை தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் (வெள்ளிக்கிழமை) வெளியிட்டார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, கடந்த செவ்வாய் இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது அறிவித்த ‘ஆத்ம நிர்பார் பாரத் அபியான்’ (தற்சார்பு இந்தியா திட்டம்) என்ற பொருளாதார உதவி தொகுப்பு குறித்த விவரங்களை கடந்த இரண்டு நாட்களாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வந்தார்.

விரிவாகப் படிக்க:நிர்மலா சீதாராமன்: விவசாயம், மீன்வளம் சார்ந்த புதிய திட்டங்கள் அறிவிப்பு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »