Press "Enter" to skip to content

ஆவணங்கள் இல்லை, அன்பு மட்டுமே உண்டு: அமெரிக்காவில் கொரோனாவுடன் போரிடும் குடியேறிகள்

ஸ்டீஃபன் ஹிகார்ட்டி
பிபிசி செய்தியாளர்

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக குடிபெயர்ந்துள்ளவர்களை விரைவில் நாடு கடத்த வேண்டும் என்பது தொடர்பான திட்டத்தை அமெரிக்காவின் உச்சநீதிமன்றம் ஆராய்ந்தும் விவாதித்தும் வருகிறது. விரைவில் இந்த திட்டம் தொடர்பான முக்கிய முடிவு அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குழந்தை பருவத்திலேயே அமெரிக்காவிற்கு வந்து படித்து, பணியில் ஈடுப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களை நாட்டை விட்டு வெளியேற்றும் சூழல் ஏற்படும்.

அமெரிக்காவில் டிரிம்மர்ஸ் ஆக்ட் (dreamers act) என்ற சட்டம் 2012ம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டத்தால் பல இளைஞர்கள் அமெரிக்காவிற்கு வந்து வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்தது.

இன்னும் பலர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி படித்து பட்டமும் பெற்றனர். ஆனால் இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்தார்.

இவ்வாறு சட்டவிரோதமாக அமெரிக்காவில் புலம்பெயர்ந்து படித்து, அங்கேயே பணியில் ஈடுப்பட்டிருக்கும் பல பணியாளர்களில் சுகாதார பணியாளர்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

தற்போது அமெரிக்காவில் பணியாற்றும் அத்தனை சுகாதார பணியாளர்களும் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஏப்ரல் மாத தொடக்கத்தில் வட கலிஃபோர்னியாவில் உள்ள வின்ஸ்டன் சலீம் மருத்துவமனையை சுற்றி நீண்ட வரிசையில் பல காவல் துறை வாகனங்கள் வட்டமிட்டன.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக வாகனங்களில் விளக்குகள் மின்ன இந்த அணிவகுப்பு மரியாதை நடத்தப்பட்டதாக காவல்துறையினர் கூறினர்.

ஆனால், இந்த காவல் துறை வாகனங்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, வெறுமையாக தான் உணர்ந்தேன் என்கிறார் செவிலியர் ஜொனாதன் வர்காஸ் ஆண்ட்ரேஸ். ஜொனாதன் வர்காஸ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

ஜொனாதன்னின் மனைவி மற்றும் சகோதரர் என அனைவரும் செவிலியராக கடந்த 4 ஆண்டுகளாக அமெரிக்காவில் பணியாற்றி வருகின்றனர்.

ஜொனாதன் ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் பணியாற்றுபவர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை காப்பற்ற தனது உயிரை பணையம் வைத்து பணியாற்றும் ஜொனாதனும் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படுவாரா இல்லையா என்பது அடுத்த சில வாரங்களில் தெரிந்துவிடும்.

”இதை குறித்து தொடர்ந்து யோசிக்க நான் விரும்பவில்லை. அமெரிக்காவில் எனக்கு இடம் இருக்கிறதா இல்லையா என யோசித்தால் மிகவும் சோர்வு அடைகிறேன். தற்போது என்னுடைய உடல்ஆரோகியத்திற்காக நான் இது குறித்து யோசிக்காமல் இருக்க வேண்டும். நான் நாடு கடத்தப்படுவேனா என யோசித்தால் அச்சம் சூழ்கிறது.” என்கிறார் ஜொனாதன்.

டிரீமர்ஸ் ஆக்ட்

2012ம் ஆண்டு ஒபாமாவின் ஆட்சி காலத்தில் சட்டவிரோதமாக குடிபெயர்ந்தோரின் குழந்தைகள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பை பெறலாம் என அடைக்கலம் கொடுக்கப்பட்டது. ஜோனாதனும் டிரிம்மர்ஸ் சட்டத்தின் கீழ் படிக்க மற்றும் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தவர்.

மெக்சிக்கோவில் இருந்து தனது 12 வயதில் ஜொனாதன் அமெரிக்கா வந்தார். 2017ம் ஆண்டு சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்களை நாடு கடத்த வேண்டும் என்ற அதிபர் டிரம்ப்பின் உத்தரவை தற்போது அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஆராய்ந்து வருகிறது.

எனவே ஜொனாதன் இனி அமெரிக்காவில் தங்க முடியுமா அல்லது முடியாதா என்ற அறிவுப்பு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வரலாம்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக 8 லட்சம் பேர் குடிப்பெயர்ந்துள்ளனர் என கூறப்படுகிறது. இதில் 29,000 பேர் மருத்துவர்கள், செவிலியர்கள் என சுகாதார பணிகளை மேற்கொள்கிறவர்கள் என அமெரிக்காவின் இடதுசாரி அமைப்பு ஒன்று தெரிவிக்கிறது.

மேலும் 12,900 பேர் மருத்துவ துறையில் வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என கூறப்படுகிறது.

ஜொனாதன் செவிலியர் பணியை துவங்கி 4 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதுவே முதல் முறையாக நெருக்கடி நிலையில் தொற்று நோயுடன் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறுகிறார்.

”எந்த ஒரு பொருளையும் தொடுவதற்கே பயமாக உள்ளது, இந்த பயத்தோடு பணியாற்றுவது மிகவும் கடினம். ஆனால் நோயாளிகளை கவனிக்க வேண்டுமென்றால், எதை பற்றியும் சிந்திக்காமல்அவர்களுக்கு உதவுவேன். ஏன்னென்றால் என் செவிலியர் பணியை நான் மிகவும் நேசிக்கிறேன்.” என்கிறார்.

மேலும்,” சொந்த உறவுகள் மற்றும் நண்பர்கள் இன்றி தனிமையில் இறப்பது மிகவும் கொடூரமானது. ஐபேட் மூலம் உறவினர்களுக்கு பிரியாவிடை கொடுப்பது எவ்வளவு துயரமானது என்பதை பார்க்கும்போது, என் அச்சங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு நோயாளிகளை கவனிக்க முடிவு செய்வேன். ஆனால் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதும் தன்னை பற்றிய கவலைஅதிகரிக்கிறது” என்கிறார் ஜொனாதன்.

இந்த தொற்று பரவும் சூழலில் பணியாற்றுவது இரண்டு வாழ்க்கை வாழ்வது போல உணர செய்கிறது. ஆனால் என்னுடைய இந்த நிலை குறித்து என்னுடன் வேலை பார்க்கும் சக பணியாளர்கள்அறிவார்களா என எனக்கு தெரியாது. எப்படியோ, இன்று நம்மை பாராட்டும் இந்த நாடு, நாளை நம்மையே நாடு கடத்தலாம் என்பது தான் உண்மை என்கிறார் ஜொனாதன்.

மெக்சிகோவில் இருந்து அமெரிக்கா வரை

ஜொனாதனின் குடும்பம் மெக்சிகோவில் வசித்தபோது எந்த வசதி வாய்ப்புகளும் இன்றி மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் வாழ்ந்து வந்துள்ளது. 2000ம் ஆண்டு முதலில் ஜொனாதனின் தந்தை அமெரிக்காவந்து பணியாற்றியுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஜொனாதன் தன் சகோதரர் மற்றும் தாயார் என அனைவரும் அமெரிக்கா சென்றுள்ளனர்.

மெக்சிகோவில் இருந்து அமெரிக்க சென்று சேர ஒரு நதி மற்றும் ஒரு பாலைவனத்தையே கடந்ததாக ஜொனாதன் நினைவுகூருகிறார்.

ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் வசிப்பவர்களின் குழந்தைகள் பள்ளிக்கு செல்லலாம், ஆனால் பல்கலைக்கழகத்திற்கோ, தனியார் கல்லூரிகளுக்கோ சென்று சேர முடியாது. எனவே பள்ளி படிப்பை முடித்து டயர் பஞ்சர் கடையில் ஜொனாதன் பணியாற்றி வந்தார்.

2012ம் ஆண்டு அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி ஏற்ற பிறகே டிரிம்மர்ஸ் ஆக்ட் மூலம் பல்கலைக்கழகம் சென்று படிக்கும் வாய்ப்பு கிடைத்ததாக ஜொனாதன் பெருமிதம் கொள்கிறார். மேலும் தன் குடும்பத்தினருக்கு இருந்த சேவை மனப்பான்மை காரணமாகவே செவிலியர் பணியை தேர்ந்தெடுத்ததாகவும் குறிப்பிடுகிறார்.

”நதியை கடந்து திரும்பி செல்”

தனக்கு பிடித்த பணியை அன்றாடம் மேற்கொண்டாலும், கடந்த நான்கு ஆண்டுகளாக மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானதாக ஜொனாதன் கூறுகிறார்.

தூக்கத்தில் தன் வாய் தண்டையைகடித்துக்கொள்ளும் பழக்கம் அதிகரித்தாக கூறுகிறார். ஒருவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தாலே இந்த பிரச்சனைகள் ஏற்படும்.

”2015ம் ஆண்டு அதிபர் டிரம்ப் பதவி ஏற்ற உடனேயே முதலில் மெக்சிகோ நாட்டவர்களை வெளியேற்ற தேவையான திட்டங்களையே வகுத்தார். அதன் பிறகே அமெரிக்காவில் வசிக்கும் பலர் தன்னை வேறொரு இனமாக பார்க்க ஆரம்பித்தனர்”. என கூறும் ஜொனாதன்

அதிபர் டிரம்ப் பதவி ஏற்ற பிறகு இனவாதம் அதிகரித்ததை நன்கு உணர முடிகிறது என்கிறார்.

மேலும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்படும் முன்பு தன் உடற்பயிற்சி கூடத்தில் வாகனத்தை சரியாக நிறுத்தாதால், ”நதியை கடந்து உன் ஊருக்கு திரும்பி செல்” என ஒருவர் தன்னை வெறுப்புடன்திட்டியதாக ஜொனாதன் குறிப்பிடுகிறார்.

ஜொனாதன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். எனவே கிரீன் கார்ட் கோரி பதிவு செய்துள்ளார். ஆனால் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடிபெயர்ந்தது தெரியவந்தால் நிச்சயம் கிரீன் கார்ட் மறுக்கப்படும்.

டிரிம்மர்ஸ் ஆக்ட்டிற்கு அமெரிக்க உச்ச நிதி மன்றம் தடை கோரினால் நிச்சயம் ஜொனாதன் தன் செவிலியர் பணியை இழக்க நேரிடும்.

எனவே அடுத்த கட்டமாக ஜொனாதனும் அவரது சகோதரரும் கனடாவிற்கு சென்று செவிலியர் பணியில் சேர திட்டமிட்டுள்ளனர். ஆனால் அவரது தாய் மற்றும் மனைவியை அமெரிக்காவிலேயே விட்டுவிட்டு செல்ல வேண்டும்.

தற்போது அமெரிக்காவிலும் நிலவும் கொரோனா வைரஸ் பாதிப்பால், உச்ச நீதிமன்றம் சட்டவிரோதமாக குடி பெயர்ந்தவர்களை வெளியேற்றுவது குறித்து இன்னும் எந்த முடிவும் மேற்கொள்ளவில்லை.

எனவே தனது செவிலியர் ஆடையை அணிந்திருக்கும்போது ஜொனாதன் பாதுக்காப்பாக உணருவதாக கூறுகிறார். ”இந்த ஆடையில் நான் செவிலியராக மட்டுமே அனைவருக்கும் தெரிகிறேன். எனவே எப்போதும் இதே ஆடையை அணிந்தவாறு உருமாற்றத்துடன் இருந்துவிடலாம் என தோன்றுகிறது” என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »