Press "Enter" to skip to content

ஹாங்காங் போராட்டம்: சீனாவின் புதிய சட்டம் – எதிர்க்கும் மக்கள், கண்ணீர் புகை குண்டுகளை வீசும் காவல் துறை

ஹாங்காங்கில் சீனா கொண்டு வர இருக்கும் புதிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து போராடும் மக்கள் மீது போலீஸார் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் தண்ணீர் பீரங்கிகளை கொண்டு போலீஸார் தாக்கி வருகின்றனர்.

ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் நகரத்தின் மையத்தை நோக்கி ஊர்வலம் செல்கின்றனர். இதுவரை 120 பேரை கைது செய்து இருப்பதாக போலீஸார் கூறுகின்றனர்.

சீனாவின் இந்த சட்டத்தை எதிர்த்து முன்னதாக உலகெங்கிலும் இருந்து 200 மூத்த அரசியல்வாதிகள் கூட்டறிக்கை வெளியிட்டு இருந்தனர்.

சுயாட்சி, சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் இது என அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தனர்.

இந்த சட்டமானது தேசத்துரோகம், பிரிவினை ஆகியவற்றை தடுக்கும் என்கிறது சீனா.

கிழக்கு பிராந்தியத்தில் முக்கியமான தொழில் மையமாக இருக்கும் ஹாங்காங்கில் இந்த சட்டமானது முதலீட்டை பாதிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. ஆனால், அந்த அச்சத்தை புறந்தள்ளுகிறது சீனா.

சீனாவின் தீவிர ஆதரவாளராக கருதப்படும் ஹாங்காங் அரசின் நிர்வாக தலைவர் கேரி லாம் இந்த சட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறார்.

இந்த சட்டத்தால் ஹாங்காங்கின் சுதந்திரம் பாதிக்கப்படாது என்கிறார்.

போராட்டக்காரர்கள் என்ன சொல்கின்றனர்?

போராட்டக்காரர்கள் அதிகளவில் காஸ்வே பே மற்றும் வன் சாய் ஆகிய நகரங்களில் திரண்டுள்ளனர்.

அவர்கள் அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்புகின்றனர்.

ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் பேசிய வின்சென்ட், “இந்த சட்டம் அமலுக்கு வந்தால் அரசை எதிர்த்து பேசவும் எழுதவும் முடியாது. அப்படி செய்தால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அதனால்தான் நாங்கள் இந்த சட்டத்தை எதிர்க்கிறோம்,” என்கிறார்.

கொரோனா வைரஸ் காரணமாக முகக்கவசம் அணிந்து போராடும் மக்கள் மீது போலீஸார் தண்ணீரை பீய்ச்சி அடிக்கின்றனர், கண்ணீர் புகை குண்டுகளை வீசுகின்றனர்.

போராட்டக்காரர்கள் அதிகாரிகள் மீது தண்ணீர் கேன்கள், குடைகள் மற்றும் குப்பைகளை எடுத்து வீசுகின்றனர்.

கடந்த ஆண்டு நடந்த போராட்டம் போன்றே இந்த போராட்டமும் உள்ளதாக களத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்தாண்டு நடந்த ஜனநாயகத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் போராட்டத்தின் தொடர்ச்சியாக 8,400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீனாவின் சட்டத்தில் என்ன இருக்கிறது?

சீன தேசிய மக்கள் காங்கிரஸால் இசைவு அளிக்கப்பட்ட இந்த சட்டத்தின் வரைவு அறிக்கை ஹாங்காங் தனது பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறது.

தேவையான போது, சீன அரசு சில அமைப்புகளை ஏற்படுத்தி ஹாங்காங்கை பாதுகாக்கும் என அது கூறுகிறது.

அதாவது ஹாங்காங் விஷயத்தில் எப்போது வேண்டுமானாலும் சீனாவின் பாதுகாப்பு அமைப்புகள் தலையிடும், தங்கள் சட்டத்தை அமல்படுத்தும்.

இதுதான் ஹாங்காங் மக்களுக்கு அச்சமூட்டுகிறது.

வலுக்கும் எதிர்ப்பு

ஹாங்காங்கின் சுதந்திரத்திற்கான சாவுமணி இதுவென குறிப்பிடுகிறார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ.

இந்த சட்டத்தை எதிர்த்து கடிதம் எழுதி உள்ள 23 நாடுகளை சேர்ந்த 186 மூத்த அரசியல்வாதிகள் இந்த சட்டத்தை ‘வெளிப்படையான மீறல்’ என்று கூறுகின்றனர்.

ஏன் இந்த சட்டத்தை சீனா கொண்டு வருகிறது?

இதனை தெரிந்துகொள்ள ஹாங்காங்கின் வரலாற்றை நாம் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஹாங்காங் தீவானது 150 ஆண்டுகாலம் பிரிட்டனின் காலனியாக இருந்தது.

1842ஆம் அண்டு நடந்த போரில் ஹாங்காங்கின் சில பகுதிகளை பிரிட்டன் கைப்பற்றியது.

பின், மேலும் சில பகுதிகளை 99 ஆண்டுகால குத்தகைக்கு சீனா பிரிட்டனிடம் ஒப்படைத்தது.

1950களில் ஹாங்காங்கின் துறைமுகம் அந்த பகுதியின் முக்கிய வணிக தளமாக மாறியது. அந்த சமயத்தில் ஹாங்காங்கின் பொருளாதாரம் புத்தெழுச்சி பெற்றது.

அதேசமயம் ஏராளமான அகதிகள், வறுமையில் உழன்றவர்கள், சீனாவில் தண்டனைக்கு உள்ளானவர்கள் ஹாங்காங்கிற்கு பயணித்தார்கள்.

இப்படியான சூழலில், 99 ஆண்டுகால குத்தகை முடியும் தருணம் நெருங்கிக் கொண்டிருந்தது.

1980களில் ஹாங்காங்கின் எதிர்காலம் குறித்து முடிவு செய்ய பிரிட்டனும் சீனாவும் பேச்சுவார்த்தையில் இறங்கின.

முழுமையாக ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென சீனா கோரியது.

1984ம் ஆண்டு ஒரு முடிவு எட்டப்பட்டது. 1997ம் ஆண்டு ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்படும், “ஒரு தேசம், இரண்டு அமைப்பு” என்ற முறையில் ஹாங்காங் இயங்கும் என முடிவு செய்யப்பட்டது.

அதாவது, சீனாவின் ஒரு பகுதியாக ஹாங்காங் இருக்கும். அதே சமயம் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை தவிர்த்து சுயாட்சியாக ஹாங்காங் இயங்கும்.

இதன் காரணமாக சீனாவில் இல்லாத சுதந்திரத்தை, ஹாங்காங் மக்கள் அனுபவிக்கிறார்கள்.

ஆனால், அதே நேரம் ஹாங்காங் நிர்வாக தலைவரை நேரடியாக ஹாங்காங் மக்கள் தேர்ந்தெடுக்க முடியாது.

1,200 பேர் கொண்ட தேர்தல் குழுவால்தான் ஹாங்காங் நிர்வாகத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

ஹாங்காங் தலைவரை மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் 2014ம் ஆண்டு ஜனநாயகத்திற்கு ஆதரவான போராட்டம் ஹாங்காங்கில் முன்னெடுக்கப்பட்டது. 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், அரசு தலைமையகங்களின் முன்னால் இருந்த வளாகங்களை சட்டபூர்வமற்ற முறையில் ஆக்கிரமித்த ஜோசுவா வொங், அலெக்ஸ் சொவ் மற்றும் நாதன் லா உள்ளிட்ட இளைஞர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்தப் போராட்டம், குடை (அம்பிரல்லா) இயக்கம் என்று கூறப்படும் ஜனநாயக போராட்டத்திற்கு இட்டுச் சென்றது. இதில் சீனாவால் ஆளப்பட்டுவரும் தங்களது நிலப்பரப்பில் ஜனநாயக மாற்றம் நிகழ வேண்டும் என்று பல்லாயிரக்கணக்கான ஹாங்காங் மக்கள் இணைந்து கொண்டனர்.

ஆனால், இந்தப் போராட்டமும் சீனாவால் ஒடுக்கப்பட்டது.

இந்த சூழலில், ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபர்களை சீனாவிடம் ஒப்படைக்க வழிவகுக்கும் மசோதா ஒன்றை 2019 ஏப்ரல் மாதம் அந்நாடு அறிமுகப்படுத்தியது.

இதற்கு ஹாங்காங் மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள். போராட்டத்தில் இறங்கினார்கள். வன்முறை வெடித்தது.

இதுபோன்ற போராட்டங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்கவே இந்த சட்டம் என்கிறது சீனா.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »