Press "Enter" to skip to content

செளதி உளவுத் துறையின் முன்னாள் சூத்திரதாரி குடும்பத்துக்கு என்ன ஆனது?

பிரிட்டன் உளவு பிரிவு மற்றும் மற்ற ஐரோப்பிய உளவு அமைப்புகளுடன் பல ஆண்டுகளாகத் தொடர்பிலிருந்த ஒரு மூத்த செளதி பாதுகாப்பு அதிகாரியின் குடும்பத்தினர் தற்போது சிறைவைக்கப்பட்டுள்ளதாக ஓர் ஐரோப்பிய உளவு அமைப்பின் முன்னாள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான அல் கொய்தாவின் வெடிகுண்டு திட்டத்தை முறியடிக்க உதவிய சாட் அல் ஜப்ரி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு செளதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆதரவாளர்கள் குறிவைப்பதற்கு முன்னர் நாட்டை விட்டு தப்பித்துச் சென்றார். தற்போது அவரது குழந்தைகள் சிறை வைக்கப்பட்டுள்ளதாக அவரது மூத்த மகன் காலித் கூறியுள்ளார்.

‘’மார்ச் 16-ம் தேதி மாலை 20 காரில் வந்த 50 செளதி பாதுகாப்பு அதிகாரிகள், ஒமர் மற்றும் சாராவை அழைத்துச் சென்றனர்’’ என்கிறார் காலித்.

பின்னர் ரியாத்தில் உள்ள அவர்களது வீடு சோதனை செய்யப்பட்டது. சிசிடிவி பதிவுகள் அதிகாரிகளால் எடுத்து செல்லப்பட்டன 21 மற்றும் 20 வயதான ஒமரும் சாராவும் தொடர்பு கொள்ள முடியாத தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.

தனது தந்தையுடன் கனடாவில் வாழ்ந்து வரும் காலித், தனது குடும்பத்தினர் கைதுக்கான எந்த காரணமும் அதிகாரிகளால் சொல்லப்படவில்லை என கூறியுள்ளார். மேலும்,’’ அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பது கூட எங்களுக்குத் தெரியாது’’ என கூறுகிறார்.

தனது தந்தையை திரும்ப செளதிக்கு வர வைக்க இந்த கைது நடவடிக்கையை அவர்கள் செய்திருக்கலாம் என காலித் தெரிவிக்கிறார். ஆனால் செளதி திரும்பினால் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவோம் என சாட் அல் ஜப்ரி அச்சப்படுகிறார்.

‘’எனது தந்தையை பற்றி எந்த பொய்களையும் அவர்கள் உருவாக்கலாம். ஆனால் எனது தந்தை ஒரு அப்பாவி’’ என்கிறார் காலித்.

சாட் அல் ஜப்ரியின் குடும்பத்தினர் மற்றும் அவருடன் பணியற்றியர்கள் வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக செளதி அரசின் பதில்களைப் பெற பிபிசி முயன்றது. ஆனால், அதிகாரிகள் பதில் அளிக்கவில்லை.

சாட் அல் ஜப்ரி யார்?

பதவியில் இருந்து கவிழ்க்கப்பட்ட பட்டத்து இளவரசர் முஹம்மது பின் நயீப்பிற்கு பல ஆண்டுகளாக வலது கரமாக இருந்தவர் சாட் அல் ஜப்ரி. 2000-ம் ஆண்டில் அல் கொய்தாவை வீழ்த்தியதற்காகப் பெயர் பெற்றவர்.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா,நியூசிலாந்து ஆகிய நாடுகளின் உளவு அமைப்புகளுக்கும் செளதிக்கும் இடையிலான தொடர்பு புள்ளியாக இவர் இருந்தார்.

2010-ம் ஆண்டு அவர் மூலம் கிடைத்த முக்கிய தகவலால் நுற்றுக்கணகான உயிர்கள் காப்பாற்றப்பட்டன என்றார் அவருடன் பணியாற்றிய ஐரேப்பிய உளவு அமைப்பின் முன்னாள் அதிகாரி.

2010-ம் ஆண்டு அல் கொய்தா அமைப்பு பிரிண்டரின் டோனர் கேட்ரிஜ்க்கு உள்ளே வெடிகுண்டை மறைத்து வைத்து, யேமனில் இருந்து சிகாகோ சென்ற சரக்கு விமானத்தில் அனுப்பி வைத்தது.

அல் கொய்தா அமைப்பில் இருக்கும் ஒரு செளதி உளவாளி, இந்த தகவலை உரிய நேரத்தில் தெரிவித்தார். செளதி உளவு அமைப்பு, பிரிட்டன் உளவு அமைப்புக்கு அளித்த தகவலின் அடிப்படையில், பிரிட்டிஷ் பயங்கரவாத தடுப்பு போலீஸார் இங்கிலாந்தில் உள்ள கிழக்கு மிட்லேண்ட் விமான நிலையத்தில் விமானத்திலிருந்த வெடிகுண்டைக் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்தனர்.

திட்டமிட்டபடி அந்த குண்டு வெடித்திருந்தால் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருப்பார்கள் என கூறுகிறார் மற்றொரு முன்னாள் உளவு அதிகாரி.

சாட் அல் ஜப்ரி செளதியின் தீவிரவாத தடுப்பு நடவடிக்கையை நவீனப்படுத்தினார் என்கிறார்கள் அவர்கள்.

செளதி உள்துறை அமைச்சகத்தில் மேஜர் ஜெனரல் தரத்துக்கு ஈடான பதவியில் இருந்தார் சாட் அல் ஜப்ரி. அமைச்சருக்கு இணையான பதவி இது.

ஆனால், 2015-ல் அனைத்து காட்சிகளும் மாறின. மன்னர் அப்துல்லா இறந்த பிறகு, அவரது சகோதரர் சல்மான் அரியணை ஏறினார். தனது இணைய மகன் முகமது பின் சல்மானை பாதுகாப்பு அமைச்சராக்கினார்.

யேமன் உள்நாட்டு போரில் தலையிடத் தனது நாட்டு படைகளுக்கு முகமது பின் சல்மான் உத்தரவிட்டார். அதற்கு ஜப்ரி எதிர்ப்பு தெரிவித்தார். அந்தப் போரில் தலையிட்டால், அதில் இருந்து வெளியேற வழியில்லை என்றார். ஐந்தாண்டு காலத்துக்குப் பிறகு சௌதிக்கு இப்போது அந்தப் போரில் இருந்து வெளியேறும் வழி தெரியவில்லை.

2017-ம் ஆண்டு தனது தந்தையின் ஆசிர்வாதத்துடன், அரண்மனையில் களையெடுப்பு பணிகளைத் தொடங்கினார். அரியணைக்கு அடுத்த இடத்தில் இருந்த முகமது பின் நயீப்பை அரண்மனை கிளர்ச்சி ஒன்றின் மூலம் கவிழ்த்துவிட்டு தானே பட்டத்து இளவளசர் பதவியை ஏற்றார்.

பின்னர், முகமது பின் நயீப் கைது செய்யப்பட்டார். அவரது சொத்துக்கள் கைப்பற்றப்பட்டன. அவருடன் பணியாற்றியவர்கள், அந்தந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.

சாட் அல் ஜப்ரி கனடா தப்பித்துச் சென்றார். ஆனால், முகமது பின் சல்மான் இன்னும் ஜப்ரியை தனக்கான அச்சுறுத்தலாகவே பார்ப்பதாக ஐரோப்பிய உளவு அமைப்பின் முன்னாள் அதிகாரிகள் கருதுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »