Press "Enter" to skip to content

ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்: ஊரடங்கை மீறி வலுக்கும் போராட்டங்கள், எதிர்ப்புகள்

அமெரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவர் போலீஸ் காவலில் இறந்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக போராட்டங்கள் வலுத்து வருகின்றன. கடைகள் சேதப்படுத்தப்பட்டு கார்கள் எரியூட்டப்பட்டு போராட்டங்கள் தீவிரமாகிவருகின்றன. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் விதமாக காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசுகின்றனர்.

ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்தில் சம்மந்தப்பட்ட முன்னாள் காவல் துறை அதிகாரி மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம் தொடர்பாக வெளியான காணொளியில் வெள்ளையினத்தை சேர்ந்த முன்னாள் காவலர் டெரிக் சாவின், ஃப்ளாய்டின் கழுத்தில் தன் கால்களை வைத்து பல நிமிடங்கள் நசுக்குவது தெரிகிறது. அவர் மூச்சுவிடமுடியவில்லை என்று கதறுகிறார்.

ஜார்ஜ் இறந்தபோது அங்கே இருந்த மற்ற போலீஸ் அதிகாரிகளும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

போலீஸ் காவலில் கருப்பின அமெரிக்கர்கள் கொல்லப்படுவது தொடர்பான கோபத்தை இந்த நிகழ்வு மீண்டும் கிளறியுள்ளது.

இந்த போராட்டங்கள் பல ஆண்டுகளாக நீடிக்கும் சமூக, பொருளாதார பாகுபாட்டை பிரதிபலிக்கின்றன என்று கருதுவோரும் உண்டு.

ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்காவின் 30 நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. சனிக்கிழமை அன்று பெரும்பாலும் அமைதிப் போராட்டமாக இருந்தது, பிறகு வன்முறையாக உருப்பெற்றது. போராட்டங்களால் அதிகம் பாதித்த நகரம் லாஸ் ஏஞ்சலீஸ். போராட்டக்காரர்களை தடியடி நடத்தியும், ரப்பர் தோட்டாக்களால் சுட்டும் விரட்டி அடித்தனர்.

நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். சிக்காகோவின் மேயர் லோரி லைட் ஊரடங்கு உத்தரவு அறிவித்துவிட்டு, சிக்காகோவில் நடைபெறும் வன்முறை வெறுப்பைத் தருவதாகவும் குறிப்பிட்டார். மேலும் போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது தண்ணீர் பாட்டில்களை வீசியும், சிறுநீர் பாட்டில்களை வீசியும் போராட்டம் நடத்துவதாக குறிப்பிட்டார்.

ஜார்ஜின் மரணத்தால் ”அமெரிக்கர்கள் கோபம், பயம் மற்றும் கவலை நிறைந்தவர்களாக” காணப்படுகின்றனர் என தெரிவித்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். மேலும் கோபத்தில் போராட்டக்காரர்கள் அத்துமீறுவதை தன்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.

போலீஸார் கூறுவது என்ன?

மளிகைக் கடை ஒன்றில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் 20 டாலர் கள்ள நோட்டு ஒன்று தந்ததாக வந்த தொலைபேசி தகவலின் அடிப்படையில் ஜார்ஜ்ஜை விசாரிக்க போலீஸார் அவரை தொடர்புகொண்டனர்.

போலீஸார் அவரை நெருங்கியபோது அவர் காரை விட்டு இறங்க மறுத்ததால் அவரின் கையில் விலங்கு போடப்பட்டதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

சமூக வலைத்தளங்களில் வந்த காணொளியில் அந்த மோதல் எப்படி தொடங்கியது என்ற தகவல் இல்லை.

சிஎன்என் தொலைக்காட்சியிடம் பேசிய ஜார்ஜின் சகோதரர், “எனது சகோதரர் திரும்பி வரப்போவது இல்லை. எங்களுக்கு நீதி வேண்டும்,” என்று தெரிவித்தார்.

கண்ணீர் மல்கப் பேசிய அவர், “பட்டப்பகலில் எனது சகோதரரை கொன்ற போலீஸார் கைது செய்யப்பட வேண்டும்” என்றும் “கருப்பினத்தவர்கள் தொடர்ந்து கொல்லப்படவதை பார்த்து சோர்ந்து போய்விட்டேன்,” என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் போராட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற சிஎன்என் தொலைக்காட்சி பத்திரிகையாளர் ஒமர் ஜிமென்ஸ் மற்றும் அவரின் கேமரா மேன் மின்னெசோட்டா போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »