Press "Enter" to skip to content

ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்: ”டிரம்ப் அரசியலமைப்பு சட்டத்திலிருந்து திசைமாறிச் செல்கிறார்”- காலின் பாவெல் மற்றும் பிற செய்திகள்

அமெரிக்காவில் நடந்துவரும் இனவெறிக்கு எதிரான போராட்டத்தை அதிபர் டிரம்ப் கையாளும் விதத்தை கடுமையான விமர்சித்துள்ள முன்னாள் உள்துறை செயலாளர் காலின் பாவெல் அரசியலமைப்பு சட்டத்திலிருந்து திசைமாறி டிரம்ப் செல்வதாகவும் கூறியுள்ளார்.

அமெரிக்க ராணுவத்தில் முன்னணி பொறுப்பிலிருந்து பின்னர் குடியரசு கட்சியில் இணைந்து அரசியல்வாதியாக மாறிய காலின் பாவெல், போராட்டத்தை ஒடுக்க ராணுவத்தை அழைப்பேன் என டிரம்ப் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

”நம்மிடம் அரசியலமைப்பு சட்டம் உள்ளது. அதை நாம் பின்பற்ற வேண்டும். ஆனால்,அதிபர் டிரம்ப் அதில் இருந்து திசை மாறிச்செல்கிறார்” என பாவெல் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்பும், காலின் பாவெலும் குடியரசு கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும், நவம்பர் மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பிடனுக்கு தான் வாக்களிக்கப்போவதாகக் காலின் பாவெல் தெரிவித்துள்ளார்.

காலின் பாவெல் ஒரு மிகைப்படுத்தப்பட்ட நபர் என அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார்.

ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கறுப்பினத்தவர் அமெரிக்காவில் போலீஸ் காவலில் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு அமெரிக்கா முழுக்க போராட்டங்கள் வெடித்தது. இந்தநிலையில் போராட்டத்தை ஒடுக்க ராணுவத்தை அழைப்பேன் என அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.

உத்தரப்பிரதேசத்தில் ஆசிரியர் மீது குற்றச்சாட்டு: 25 பள்ளிகளில் வேலை செய்து 1 கோடி வரை சம்பளம் பெற்றதாக புகார் – நடந்தது என்ன?

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொடக்கப்பள்ளி கல்வித்துறையில் மோசடி செய்து ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணியாற்றியதாக குற்றஞ்சாட்டப்பட்டு ஆசிரியை அனாமிகா ஷுக்லா சனிக்கிழமையன்று காஸ்கஞ்சில் கைது செய்யப்பட்டார்.

இந்த மோசடி குறித்து விசாரிக்க, தொடக்கப்பள்ளி கல்வித்துறை, அனாமிகா ஷுக்லாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸுக்கு பதிலளிக்காமல் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்ய முயன்ற போது அவர் கைது செய்யப்பட்டார்.

காஸ்கஞ் காவல் நிலையத்தில் தொடக்கப்பள்ளி கல்வி அலுவலர் அனாமிகா ஷுக்லாவின் மீது புகார் அளித்தார். அதனை அடிப்படையாகக் கொண்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

விரிவாக படிக்க: 25 பள்ளிகளில் வேலை செய்து 1 கோடி வரை சம்பளம் பெற்றதாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டு – நடந்தது என்ன?

கொரோனா வைரஸ் உயிரிழப்பு விகிதம் உலகிலேயே தமிழகத்தில்தான் குறைவு: பழனிசாமி

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து, இல்லம் திரும்புவோரின் சதவிகிதம் இன்று இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகம் என்றும் உயிரழப்போரின் சதவிகிதமும் இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே தமிழ்நாட்டில்தான் மிகக் குறைவு எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் வாயிலாக தமிழக மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதனை அவர் தொலைக்காட்சி வழியாகவும் மக்களுக்கு உரையாற்றினார்.

விரிவாக படிக்க: கொரோனாவில் இருந்து தமிழகம் மீண்டு விரைவில் வெற்றி பெறும்: முதல்வர் பழனிசாமி உறுதி

கொரோனா ஊரடங்கு: தம்பதிகளுக்குள் அதிகரிக்கும் விவாகரத்து வழக்குகள்

என்னுடைய மோசமான திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வர இந்த ஊரடங்கு உத்தரவு எனக்கு உதவி இருக்கிறது. வீட்டில் முடங்கி இருந்த இந்த நாட்களுக்கு உண்மையில் நான் நன்றி சொல்ல வேண்டும் என்கிறார் குடும்ப வன்முறையை எதிர்கொண்ட நவ்யா. (பாதுகாப்பு காரணமாக பெயர் மாற்றப்பட்டுள்ளது)

கோவாவை சேர்ந்த 42 வயதான நவ்யாவின் கணவர் வணிகம் செய்துவந்தார். 2006ம் ஆண்டு அரசியலில் கால்பதித்து தற்போது முழு நேரமும் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

ஆண்டுகள் சில கடந்த பிறகு திருமணத்தில் உள்ள நம்பிக்கை குறைந்து மன ரீதியாக பல துன்பங்களை சந்தித்ததாக நவ்யா கூறுகிறார். உள்ளாடை வாங்க செல்லும்போதுகூட தனது கணவரின் உதவியாளர் வந்து பில் செலுத்தியதாக வேதனையுடன் நவ்யா தெரிவிக்கிறார்.

விரிவாக படிக்க: கொரோனா ஊரடங்கு: தம்பதிகளுக்குள் அதிகரிக்கும் விவாகரத்து வழக்குகள்

சேலம்-சென்னை எட்டுவழிச்சாலை வழக்கு: மீண்டும் வெடிக்கும் எதிர்ப்பு

சேலம்-சென்னை இடையிலான எட்டு வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கை ஆன்லைன் விசாரணையில் நடத்தக்கூடாது எனத் தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஜூன் 4-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் சேலம் சென்னை எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுக்கக்கோரி தமிழக அரசு மனுத்தாக்கல் செய்திருந்தது.

தமிழக அரசின் நகர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு விவசாயச் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடிகளை ஏற்றி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

விரிவாக படிக்க: சேலம்-சென்னை எட்டுவழிச்சாலை வழக்கு: மீண்டும் வெடிக்கும் எதிர்ப்பு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »