Press "Enter" to skip to content

“சிங்கப்பூர் துவண்டுவிடாது; மேம்பட்ட நாடாக மீண்டெழும்”: பிரதமர் லீ சியன் லூங் நம்பிக்கை

சிங்கப்பூரில் புதிதாக 386 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இந்நிலையில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் இன்று தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது கொரோனா வைரஸ் கடுமையான சவால்களைத் தந்தாலும் அவற்றில் இருந்து மீண்டு வலுவான, மேம்பட்ட நாடாக சிங்கப்பூர் மீண்டும் எழும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அடுத்த சில ஆண்டுகள் சிங்கப்பூரர்களுக்கு இடையூறுகளும் சிரமங்களும் இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், பல தொழில்துறைகள் மீள முடியாமல் போகலாம் என்றும், வேலைகள் பறிபோகக் கூடும் என்றும் கூறினார்.

தடுப்பூசிகள் பரவலாகக் கிடைப்பதற்குக் குறைந்தது ஓராண்டு ஆகக்கூடும் என்று குறிப்பிட்ட பிரதமர், சிங்கப்பூரில் உள்ள எவரும் அஞ்சவோ மனம்தளரவோ வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

“1965இல் கிடைத்த சுதந்திரத்திற்குப் பிறகு இந்த துவண்டுவிடும் என்று பலரும் பலமுறை நினைத்ததைப் பொய்யாக்கியது சிங்கப்பூர்,” என்று பிரதமர் லீ கூறியதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

மலேசியாவில் அன்றாடம் பதிவாகும் புது நோயாளிகளின் எண்ணிக்கை ஒற்றை இலக்கமானது

மலேசியாவில் வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், இன்று புதிதாக ஏழு பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 20 பேர் குணமடைந்துள்ளனர். மலேசியாவில் அன்றாடம் பதிவாகும் புது நோயாளிகளின் எண்ணிக்கை முதன்முறையாக ஒற்றை இலக்கத்துக்கு வந்துள்ளது.

கடந்த மார்ச் 18ஆம் தேதி நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது முதல் அன்றாடம் பதிவாகி வந்த நோயாளிகளின் எண்ணிக்கையில் இதுவே ஆகக் குறைந்ததாகும்.

மலேசியாவில் இன்றும் உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8,329ஆக உள்ளது.

நாட்டின் எல்லைகள் மூடப்பட்டுள்ள நிலையில் அனைத்துலக விமானச் சேவை குறித்து பல்வேறு விஷயங்களை ஆலோசிக்க வேண்டியுள்ளதாக சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

“எந்தெந்த நாடுகளுக்கு விமானச் சேவை மீண்டும் துவங்கப்படுகிறதோ, அவையெல்லாம் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து எந்தளவு மீண்டுள்ளன என்பதைக் கவனிக்க வேண்டியுள்ளது. பாதிப்பு வெகுவாகக் குறைந்திருந்தால் பரிசீலிக்கலாம்,” என்றார் நூர் ஹிஷாம்.

ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் நாட்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கக் கூடும் என்றும், கடந்த ஐந்தாண்டுகளாக இவ்வாறு நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். எனவே மக்கள் கொரோனா வைரஸுக்காக மட்டுமல்லாமல் டெங்கு காய்ச்சலைத் தவிர்க்கவும் நல்ல சுகாதாரப் பழக்கங்களை கொண்டிருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

“இலங்கையில் பொது போக்குவரத்துக்கள் அச்சறுத்தலை ஏற்படுத்துகின்றன” – அனில் ஜாசிங்க

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1845ஆக அதிகரித்துள்ளது.

844 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை, 990 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.

வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படும் இலங்கையர்களே தற்போது அதிகளவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இலங்கையில் சமூகத்திற்குள் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவது முற்றாக இல்லாது செய்யப்பட்டுள்ளதென சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார்.

இலங்கையின் பொது போக்குவரத்துக்கள் இன்று முதல் வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பொது போக்குவரத்துக்கள் வழமை போன்று இயங்க ஆரம்பித்துள்ள நிலையில், பொது போக்குவரத்துக்களின் ஊடாகவே மீண்டுமொரு முறை கொரோனா தொற்று ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் அதிக அச்சுறுத்தல் உள்ள மாவட்டங்களாக அடையாளப்படுத்தப்பட்ட கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்துக்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கோவிட்-19 வைரஸ் தொற்று மீண்டும் ஏற்படுமாயின், அதற்கு பொது போக்குவரத்து சேவைகளே மிகவும் ஆபத்தான இடமாக காணப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கையில் கொரோனா பரவல் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினால், பாரிய விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »