Press "Enter" to skip to content

இந்தியா – சீனா எல்லை பிரச்சனையின் மையமாக கல்வான் பள்ளத்தாக்கு இருப்பது ஏன்?

இந்தியாவின் லடாக் பிராந்தியத்தில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன படைகளுக்கு இடையிலான கைகலப்பில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் கொல்லப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீன தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெளிவாகத் தெரியவில்லை. சீன ராணுவத்தினர் 43 பேருக்கு காயம் அல்லது உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என இந்திய ராணுவம் தெரிவிப்பதாக இந்தியாவில் இருக்கும் ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

கல்வானில் இருநாட்டு படைகளுக்கிடையே இப்படி கைக்கலப்பு நடப்பது இது முதல்முறையல்ல. ஆனால் அது உயிர்பலி வரை சென்றிருப்பதுதான், பதற்றத்தை உச்சகட்டமடையச் செய்திருக்கிறது.

கல்வான் பள்ளத்தாக்கு ஏன் அவ்வளவு முக்கியம்?

இருநாடுகளுமே கல்வான் பள்ளத்தாக்கில் ஆதிக்கம் செலுத்துவதை மிகவும் முக்கியமாகக் கருதுவதால், அந்தப் பகுதியில் பல ஆண்டு காலமாக பிரச்சனை இருந்து வருகிறது. கடந்த 40 ஆண்டுகளாக ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம்கூட நடைபெறாத கல்வான் பகுதியில் தற்போது மூவர் கொல்லப்படும் அளவுக்கு நிலைமை மோசமானது ஏன்? இரு நாடுகளுக்கும் ஏன் அந்த பகுதி அவ்வளவு முக்கியம்?

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் சீன ராணுவத்தினர் தற்காலிக முகாம்களை அமைத்திருப்பதாக இந்தியா கூறியது. இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் இந்தியாவும் தனது படைகளை அதிகரித்தது.

அதே நேரத்தில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய ராணுவம் சட்டவிரோத கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதாக சீனா குற்றம் சாட்டியது.

கடந்த மே மாதம் 9-ஆம் தேதி, சிக்கிமின் வடக்கு பகுதியில் உள்ள நாதுலா செக்டார் பகுதியில் இருநாட்டுப் படைகளைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அதே நேரம், லடாக்கில் உள்ள கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு அருகே சீன ஹெலிகாப்டர்கள் பறந்ததாக இந்தியா புகார் தெரிவித்தது. அதற்கு பதிலடி அளிக்கும் விதமாக போர் விமானங்கள் மூலம் எல்லைக் கண்காணிப்பு பணிகளில் இந்திய ராணுவம் ஈடுபட்டது.

இந்நிலையில் “எல்லையில் வழக்கத்துக்கு மாறான சில நடவடிக்கைகள் தென்படுகின்றன. நிலைமையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தேவைப்படும் பட்சத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து அதிகம் கவலைப்பட வேண்டாம்,” என கடந்த திங்களன்று இந்திய விமானப்படை தளபதி ராகேஷ் குமார் சிங் பதோரியா தெரிவித்திருந்தார்.

சீன எல்லையில் இந்தியப் படைகள் தங்கள் நிலைகளில் தொடர்ந்து இருந்து வருவதாகவும், எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இரு நாட்டு படையினரிடையே லேசான கைகலப்பு நடைபெற்றதாகவும், இதில் சில வீர்ர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறினார்.

இதனிடையே எல்லைப் பதற்றத்திற்கு இந்தியாதான் காரணம் என சீனா குற்றம் சாட்டியது. “பாதுகாப்பு பகுதியில் சட்டவிரோத கட்டுமானப் பணிகளை இந்தியா மேற்கொள்வதால்தான், சீனா தனது படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் 2017-ஆம் ஆண்டு டோக்லாமில் ஏற்பட்டதைப் போன்ற சூழல் இங்கு ஏற்படாது. கோவிட்-19 குறித்து மக்களின் கவனத்தை திசை திருப்ப எல்லைப் பிரச்சனையை இந்தியா தீவிரமாக்குகிறது,” என சீன ஊடகமாக குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

மேலும் கல்வான் பள்ளத்தாக்கு சீனாவின் ஒரு பகுதி எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்படியாக மெதுவாக உருவெடுத்த பதற்றம், தற்போது உயிர் பலியில் வந்து முடிந்திருக்கிறது.

கல்வான் பள்ளத்தாக்கு எங்கு அமைந்துள்ளது?

இந்தியாவின் லடாக் பிராந்தியத்திற்கும் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள அக்சாய் சீனா பகுதிக்கும் இடையே கல்வான் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. இந்த பள்ளத்தாக்கு, இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளதால் இந்த பகுதியை இந்தியாவும் சீனாவும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகக் கருதி வருகின்றன.

இந்தப் பள்ளத்தாக்கு வழியாக செல்லும் கட்டுப்பாட்டு எல்லைக் கோடுதான் இந்தியா மற்றும் சீனாவை பிரிக்கிறது. இந்த பள்ளத்தாக்கு அமைந்துள்ள அக்சாய் சீனா பகுதி தற்போது சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அந்த பகுதி தங்களுக்கு சொந்தமானது என இந்தியா உரிமை கோரி வருகிறது.

1962-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தீய – சீனப் போரின்போது, கல்வான் நதி போரின் மையப்பகுதியாக இருந்ததை வைத்தே அதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கிறார் சர்வதேச விவகார நிபுணரான எஸ்.டி முனி.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு இடையில் எல்லையில் பதற்றம்

“1958-ஆம் ஆண்டு அக்சாய் சீனா பகுதியில் சீனா ஒரு சாலையை அமைத்தது. இந்த சாலை கரகோரம் பகுதியையும், அக்சாய் சீனா பகுதியையும் இணைக்கிறது. மேலும் பாகிஸ்தான் எல்லையை நோக்கி செல்லும் வகையில் இந்த சாலை அமைக்கப்பட்டது. அப்போதைய காலகட்டத்தில் சீனா இந்த சாலையை அமைக்கத் தொடங்கியபோது, அதனை இந்தியா பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் சாலைப் பணிகள் முழுமையடைந்த பின்னர், அப்போதைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அன்றிலிருந்து அக்சாய் சீனா, தங்களுடைய பகுதி என்று இந்தியா கோரி வருகிறது,” என எஸ்.டி.முனி தெரிவிக்கிறார்.

ஆனால் அந்த சாலை விவகாரம் தொடர்பாக ராணுவ ரீதியிலான எந்த நடவடிக்கையும் அப்போது இந்தியா எடுக்கவில்லை. ஆனால் தற்போது இந்தியா அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஏற்கனவே பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் மற்றும் கில்ஜிட் – பால்டிஸ்தான் ஆகிய பகுதிகளுக்கான உரிமை கோரலை வலுப்படுத்த தொடங்கியிருப்பதால், அக்சாய் சீனா தொடர்பான உரிமை கோரலையும் வலுப்படுத்த வேண்டிய நிலையில் இந்தியா இருக்கிறது.

இதன் ஒரு பகுதியாக இந்திய ராணுவத்தின் செயல்பாடுகள் அக்சாய் சீனா பகுதியில் அதிகரித்தன. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா, தன் பங்குக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய அரசு உருவாக்கும் கட்டுமானங்கள் சட்டவிரோதமானவை என சீனா கூறி வருகிறது. ஏற்கனவே இருநாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தப்படி, எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே புதிய கட்டுமானங்கள் கட்டக்கூடாது என்ற விதிமுறை இடம்பெற்றுள்ளதாக சீனா சுட்டிக்காட்டுகிறது.

ஏற்கனவே அந்த பகுதிகளில் கட்டுமானங்களை உருவாக்கிவிட்ட சீனா, தற்போது இந்தியா அங்கு எந்த கட்டுமான நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது எனக் கூறுகிறது. ஆனால் தன்னுடைய நிலையை வலுப்படுத்த அந்த இடத்தில் மூலோபாயச் செயல்பாடுகளாக கட்டடம் ஒன்றை கட்ட இந்தியா விரும்புகிறது.

எல்லை பிரச்சனைகளில் இந்தியாவின் உத்திகள்

எல்லை பிரச்சனைகளில் இந்தியா தீவிரமாக இருப்பதாகக் கூற முடியாது. ஆனால் அது தொடர்பான தன்னுடைய குரலை வலுவாக உயர்த்தியுள்ளது எனக் கூறலாம் என எஸ்.டி முனி கூறுகிறார். இதுவரை எந்தெந்த பகுதிகள் சொந்தம் என இந்தியா கோரி வந்ததோ, அங்கெல்லாம் தற்போது தனது அதிகாரத்தை இந்தியா வலுப்படுத்த தொடங்கியுள்ளது.

1962-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் ராணுவ பலம், பொருளாதாரம் ஆகியவற்றில் இந்தியா தற்போது வலுவாக உள்ளது. இதுதவிர, தற்போதைய சீனா எப்படி வலுவான நாடாக உருவானது என்பதை நினைத்துப் பார்த்தால், எல்லைப் பிரச்சனையில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பது புரியும்.

அதே போல இந்தியாவுக்கு பாகிஸ்தானுடனான உறவும் மோசமடைந்து வருவதால், இந்த ஆபத்து மேலும் அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில்தான், தன்னுடைய எல்லைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் இந்தியாவிடம் வலுப்பட்டுள்ளது.

அக்சாய் சீனா பகுதியில் இந்தியா கட்டடம் ஒன்றை உருவாக்குமானால், அதன் மூலம் அந்த பகுதியில் சீனப்படையினரின் நடமாட்டத்தை கண்காணிக்க முடியும்.

ஆனால் கல்வான் பள்ளத்தாக்கில் டோக்லாம் போன்ற சூழல் இல்லை எனவும் அக்சாய் சீனா பகுதியில் சீன ராணுவம் வலிமையாக இருப்பதால், பதற்றத்தை அதிகரிக்கும் பட்சத்தில் இந்தியா அதற்கான விலையை கொடுக்க வேண்டி இருக்கும் என சர்வதேச விவகாரங்களுக்கான வல்லுநர் ஒருவர் தெரிவித்ததாக சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவுக்கு ஆபத்து ஏற்படுத்தும் அளவுக்கு அக்சாய் சீனா பகுதியில் சீன ராணுவம் வலுவாக இருப்பதாக நிபுணர்களும் ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக, ராஜீய முறையில் சீன வலுவிழந்து காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா வைரஸை பரப்பியதாக ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா ஆகியவை வெளிப்படையாகவே சீனாவை குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் சீனாவை குற்றம்சாட்டி இந்தியா எந்த கருத்தையும் இதுவரை வெளியிடவில்லை. இந்த மாதிரியான சூழலில், இந்தியாவிடமிருந்து சீரான ஒரு அணுகுமுறையைத்தான் சீனா எதிர்பார்க்கும்.

இந்தியா – சீனா எல்லை பதற்றம் மேலும் அதிகரிக்குமா?

கொரோனா வைரஸ் பரவும் இந்தக் காலத்தில் எல்லைப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது இருநாடுகளுக்கும் அழுத்தத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. கொரோனா தொடர்பான விஷயங்களிலிருந்து மக்களை திசை திருப்ப எல்லைப் பிரச்சனையை இந்தியா கையில் எடுத்திருப்பதாக சீனா குற்றம்சாட்டுகிறது.

“கொரோனாவை எதிர்கொள்வது வேறு. நாட்டின் பாதுகாப்பு என்பது வேறு. ஏற்கனவெ தென் சீனக்கடலில் சீனா தனது ராணுவக் கட்டமைப்புகளை விரிவுபடுத்தி வருகிறது. உலகமே கொரோனாவுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்தாலும், ராணுவம் கொரோனாவுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கவில்லை.”

“கொரோனாவுக்கு முன்பும் எல்லைப் பகுதிகள் தொடர்பான பிரச்சனைகள் இருக்கத்தான் செய்தன. தற்போது இருக்கின்றன. எதிர்காலத்திலும் இருக்கும். எனவே மக்களை திசை திருப்ப இந்தியா இவ்வாறு செய்வதாக சீனா கூறுவது முற்றிலும் முரணானது,” என எஸ்.டி முனி தெரிவிக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »