Press "Enter" to skip to content

கல்வானில் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் – ஆணிகள் நிறைந்த இரும்புக் கம்பியால் இந்திய ராணுவத்தினர் தாக்கப்பட்டார்களா? சீனா சொல்வது என்ன?

இந்திய வீரர்கள் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை மீறி நுழைந்து சீன ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சாவ் லிஜின் தெரிவித்துள்ளார்.

சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சாவ் லிஜின் வியாழன் அன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம், இந்திய ராணுவ வீரர்கள் இரும்புக் கம்பிகளால் தாக்கப்பட்டார்களா? இதுகுறித்து நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை செய்தியாளர் கேள்வி எழுப்பினார். மேலும், இந்திய ராணுவ வீரர்கள் எல்லை கட்டுப்பாடு கோட்டை தாண்டி சென்றதால், தாக்குதல் தீவிரமடைந்ததா? என்ற கேள்வியையும் எழுப்பினார்.

இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதத்தில் பேசிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ,”இந்த விவகாரத்தில் எது சரி எது தவறு என்பதில் குழப்பமில்லை. ஆனால், இதற்கு சீனா பொறுப்பேற்க முடியாது. இந்த மோதல் எங்கு துவங்கியது என்பதை நாங்கள் தெளிவாக விளக்கியுள்ளோம். தலைமை ராணுவ அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு ஒப்பந்தத்தை மீறி இந்தியா – சீனா எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். இந்திய வீரர்கள் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை மீறி நுழைந்து சீன ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். தாக்குதலை தூண்டும் விதத்தில் இந்திய வீரர்கள் தாக்குதல் நடத்தினர்.

அதன் பிறகு, நேருக்கு நேர் மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்த விவகாரம் குறித்து இந்தியா முழு வீச்சில் விசாரணை நடத்தி, மோதலுக்கு காரணமானவர்கள் கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த தண்டனை அளிக்க வேண்டும் என சீனா கேட்டுக்கொள்கிறது. இவ்வாறான தாக்குதல் சம்பவம் மீண்டும் நடைபெறாது என்பதை இந்தியா உறுதி செய்ய வேண்டும்” என சாவ் லிஜியன் கூறினார்.

ஏற்கனவே, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் ஷங்கர் இருவரும் பேச்சு வார்த்தை மூலம் கல்வான் பள்ளத்தாக்கில் நடக்கும் மோதலுக்கு அமைதியான தீர்வு காண வேண்டும் என ஒப்புதல் அளித்திருந்தனர்.

இந்தியா சீனா எல்லையில் மீண்டும் ராணுவத்தினர் அதிக அளவில் பணியில் அமர்த்தப்பட்டு வருகின்றனர். அதேபோல சீனா ராணுவ வீரர்களும் எல்லையில் அதிகம் குவிக்கப்படுவார்களா? சீனா தரப்பிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படுமா? என கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, இருதரப்பிலும் இந்த விவகாரத்திற்கு தீர்வு காணதான் முயற்சித்து வருகிறோம். இதற்கு மேல் என்னால் விளக்கம் கொடுக்கமுடியாது என்றும் சாவ் லிஜியன் கூறினார்.

மேலும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம், சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி நடத்திய பேச்சு வார்த்தையில், இரு நாடுகளுக்கும் பலம் உள்ளது. இரு நாடுகளும் 1 பில்லியன் மக்கள் தொகையைவிட அதிக மக்கள் தொகையை கொண்டவர்கள். எனவே, நம்பிக்கையும் வேறுபாடுகளும் அதிகரித்தால், இரு நாட்டு குடிமக்களும் பாதிக்கப்படுவார்கள். கடுமையான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, அந்த ஒப்பந்தத்தை இரு நாடுகளும் பின்பற்ற வேண்டும் என வாங் யி கூறியுள்ளார்.

கல்வான் பள்ளத்தாக்கில் என்ன நடந்தது?

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் திங்கள் இரவு இருநாட்டு ராணுவங்களுக்கும் இடையே நடந்த மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் இறந்ததாக இந்திய அரசு தெரிவித்தது.

இரு நாட்டு ராணுவ வீரர்களும் ஆணிகள் அடங்கிய கட்டை, மூங்கில் குச்சி, மட்டை போன்றவற்றால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.

அப்போது ஆயுதப் பயன்பாடு எதுவும் நிகழவில்லை என்று இருதரப்பும் தெரிவித்தன.

சீன தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெளிவாகத் தெரியவில்லை. சீன ராணுவத்தினர் 43 பேருக்கு காயம் அல்லது உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என இந்திய ராணுவம் தெரிவிக்கிறது

ஆனால், இது குறித்த விவரங்கள் எதையும் சீனா வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

இந்திய மற்றும் சீன ராணுவ அதிகாரிகள் இடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் தொடர்ந்து இரண்டு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. எனினும், படைகளை விலக்கிக்கொள்வது குறித்து இன்னும் முடிவு எட்டப்படவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »