Press "Enter" to skip to content

கல்வான் பள்ளத்தாக்கில் நடந்தது என்ன? – சீன வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

இந்தியா – சீனா இடையே எல்லை தொடர்பாக நீடித்து வரும் சர்ச்சைக்குரிய கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சமீபத்தில் நடந்த இரு நாட்டு வீரர்கள் இடையிலான மோதல் குறித்த விவரங்களை சீன வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ட்செள லிஜியானிடம் கல்வான் பள்ளத்தாக்கு மோதல் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு அவர் விரிவாக பதில் அளித்தார். அதன் விவரம்:

பல ஆண்டுகால பிரச்சனை

சீனா-இந்தியா எல்லையின் மேற்குப் பகுதியில் அசல் கட்டுப்பாட்டுக் கோட்டின் (எல்.ஏ.சி.) சீன பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக, சீன எல்லைப் படைகள் இந்த பிராந்தியத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த ஆண்டு ஏப்ரல் முதல், இந்திய படையினர் ஒருதலைபட்சமாகவும் தொடர்ச்சியாகவும் அந்த பகுதியில் சாலைகள், பாலங்கள் மற்றும் பிற வசதிகளை கல்வான் பள்ளத்தாக்கிலுள்ள எல்.ஏ.சி. பகுதியில் கட்டி வந்ததாகவும், அது தொடர்பாக பல சந்தர்ப்பங்களில் சீனா தனது ஆட்சேபங்களையும் எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளது.

ஆனால் இந்திய படையினர் எல்.ஏ.சி. பகுதியில் முன்னேறி வந்ததுடன் பல ஆத்திரமூட்டல் செயல்களில் ஈடுபட்டார்கள்.

கடந்த மே மாதம் 6-ஆம் தேதி அதிகாலையில, எல்.ஏ.சி. பகுதியை இரவிலேயே கடந்து வந்திருந்த இந்திய படையினர், சீன பிராந்தியத்துக்குள் அத்துமீறி நுழைந்ததுடன், தடுப்புகளையும் மணல் அரண்களையும் கட்டியபோது, அதை சீன ரோந்துப் படையினர் தடுத்தார்கள்.

முதலில் அடித்தது யார்?

அப்போது வேண்டுமேன்றே ஆத்திரமூட்டும் செயல்பாடுகளில் ஈடுபட்ட இந்திய படையினர், தன்னிச்சையாக அந்த பகுதியின் கட்டுப்பாட்டு நிலையை மாற்றி, அதை நிர்வகிக்க முற்பட்டார்கள். இதனால், களத்தில் உள்ள நிலைமைக்கு ஏற்ப தேவையான நடவடிக்கை எடுத்து எல்லை பகுதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் கட்டாயத்துக்கு சீன படையினர் தள்ளப்பட்டார்கள்.

இந்த நிலைமையை தணிப்பதற்காக, சீனாவும், இந்தியாவும் ராணுவ அளவிலும், ராஜீய வழிகளிலும் மிக நெருக்கமாக தொடர்பு கொண்டு பேசின.

சீன தரப்பின் வலுவான கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, எல்.ஏ.சி. பகுதியை கடந்து வந்த தமது படையினரை திரும்ப அழைத்துக் கொண்டு, அங்கு நிறுவப்பட்ட வசதிகளை அழிக்க இந்தியா ஒப்புக் கொண்டது. அதன்படியே அவர்கள் செய்தார்கள்.

கல்வான் நதியின் முகப்புப் பகுதியைக் கடந்து வந்து ரோந்துப் பணியிலோ வேறு அமைப்புகளையோ நிறுவ மாட்டோம். களத்தில் உள்ள கட்டளை அதிகாரிகள் (மேஜர் ஜெனரல்கள்) இடையே கூட்டங்கள் நடத்தி, பகுதி, பகுதியாக படையினரை அங்கிருந்து விலக்குவது பற்றி விவாதிப்போம் என இந்தியா தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

ஆனால், அதிர்ச்சி தரும் வகையில், கடந்த 15-ஆம் தேதி மாலையில், இந்தியாவின் எல்லை முன்னரங்கில் இருந்த படையினர், கட்டளை அதிகாரிகள் (எல்லை பிராந்திய கமாண்டர்கள் அல்லது மேஜர் ஜெனரல்கள்) நிலையான கூட்டத்தில் எட்டப்பட்ட உடன்பாட்டை மீறி மீண்டும் எல்ஏசி பகுதியைக் கடந்து வந்தார்கள்.

மோதலாக விரிவடைந்த கைகலப்பு

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் பதற்றம் தணிந்து வந்த சூழலில், அங்கு பேச்சுவார்த்தைக்கு வந்த சீன அதிகாரிகள் மற்றும் வீரர்களை கடுமையாக தாக்கினார்கள். அது பின்னர் கைகலப்பாக மாறி கடுமையாக காயம் ஏற்படுத்திக் கொள்ளும் அளவுக்கு தாக்கிக் கொள்ளும் மோதலாக மாறியது.

இந்திய ராணுவத்தின் சாகச செயல்பாடுகள், எல்லை பகுதிகளின் ஸ்திரத்தன்மையை மட்டுப்படுத்தியது மட்டுமின்றி, சீன படையினரின் உயிருக்கும் அச்சுறுத்தலாகியது. மேலும், இரு நாடுகள் இடையே எல்லை பிரச்சனையில் எட்டப்பட்ட உடன்பாடுகளையும் சர்வதேச உறவுகளை பேணும் அடிப்படை நியதிகளை மீறுவதாகவும் அமைந்தது.

இது தொடர்பாக தமது கடுமையான ஆட்சேபத்தையும் உரிய புகாரையும் இந்தியாவிடம் சீனா பதிவு செய்ததது.

இந்த நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தொலைபேசியில் பேசினார்.

அப்போது சீனாவின் கடுமையான நிலைப்பாட்டை மீண்டும் விவரித்து, நடந்த சம்பவம் குறித்து இந்தியா முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும், அதற்கு பொறுப்பானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்,

மேலும், எல்லை முன்னரங்கில் உள்ள இந்திய படையினர் கண்டிப்பான ஒழுக்கத்துடன் செயலாற்றி அத்தகைய சம்பவங்கள் இனி அத்தகைய சம்பவங்கள் நடக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த எல்லாவித ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இந்திய அமைச்சரிடம் சீன அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

மீண்டும் உயர்நிலை கூட்டம்

களத்தில் நிலவும் சூழ்நிலையை கையாள இயன்றவரை விரைவாக இரண்டாவது முறையாக கட்டளை அதிகாரிகளின் (மேஜர் ஜெனரல்கள்) கூட்டம் நடக்க வேண்டும் என்றும், கல்வான் பள்ளத்தாக்கு மோதல்களால் ஏற்பட்ட கடுமையான நிலையை உரிய முறையில் கையாண்டு, களத்தில் உள்ள பதற்றத்தை இயன்றவரை விரைவாக தணித்து, இதுவரை எட்டப்பட்ட இரு தரப்பு நல்லுறவு ஒப்பந்தங்களின்படி எல்லை பகுதிகளில் அமைதியையும் இணக்கத்தையும் உறுதிப்படுத்துவது என இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

இரு தலைவர்களுக்கு இடையே எட்டப்பட்ட முக்கியமான ஒருமித்த நிலையை உண்மையாக கடைப்பிடிப்பது, இரு அரசாங்கங்களுக்கு இடையே எட்டப்பட்ட ஒப்பந்தங்களுக்கு கட்டுப்படுத்துவது, தற்போதுள்ள நிலையை சரியாக நிர்வகித்து தொடர்புகளை ராஜீய மற்றும் ராணுவ அளவில் உறுதிப்படுத்துவது, எல்லை பகுதிகளில் அமைதியையும் இணக்கத்தையும் கூட்டாக உறுதிப்படுத்துவது ஆகிய நடவடிக்கையில் இந்தியா எங்களுடன் இணைந்து செயல்படும் என நம்புகிறோம் என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ட்செள வென்ஜியான் கூறினார்.

அறிக்கையை தவிர புதிய விவரம் இல்லை

கடந்த 15-ஆம் தேதி இரவு நடந்த அந்த சம்பவத்தில் அசல் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டு (எல்.ஏ.சி.) பகுதியில் இரு நாட்டு வீரர்களும் மோதினார்கள். அதில் இந்தியா சார்பில் ஒரு ராணுவ கர்னல் உட்பட மொத்தம் 20 பேர் பலியானதை இந்திய அரசு உறுதிப்படுத்தியது. அந்த சம்பவத்தில் 76 பேர் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

அந்த சம்பவம் தொடர்பான மேலதிக விவரங்களையோ, உண்மையில் களத்தில் நடந்தது என்ன என்பதையோ இதுவரை இந்திய ராணுவமோ, சீன ராணுவமோ இரு தரப்பு அரசுகளோ வெளியிடவில்லை.

கடந்த 17-ஆம் தேதி இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும், சீன அமைச்சர் வாங் யீயும் பேசியது தொடர்பான விவரத்தை நேற்றைய சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளரின் பதிலைப் போலவே, இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவாவும் விவரித்து விட்டு மேற்கொண்டு பதில் அளிப்பதை தவிர்த்தார்.

எவ்வளவு பேருக்கு காயம்?

இதற்கிடையே, இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்ட எல்லை வரம்பை மீறி சீன படையினர் முன்னேறி முகாம்களை அமைத்திருந்ததால் அதை அப்புறப்படுத்தும் முயற்சியில் இந்திய படையினர் ஈடுபட்ட நடவடிக்கை பிறகு இரு தரப்பிலும் கைகலப்பாக மாறி, கற்கள், ஆணிகள் மற்றும் கம்பிகள் இணைக்கப்பட்ட கட்டைகளால் இந்திய வீரர்கள் தாக்கப்பட்டதாகவும் அதில் இந்தியாவைச் சேர்ந்த 20 பேரும் 50-க்கும் அதிகமானோரும் காயம் அடைந்ததாகவும் பிபிசிக்கு தெரிய வந்தது.

ஏராளமான இந்திய வீரர்கள், லடாக் மற்றும் லேவில் உள்ள மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக லேவில் கள நிலவரம் தொடர்பான தகவல்களை சேகரித்து வரும் பிபிசி செய்தியாளர் ஆமீர் பீர்ஸாதா தெரிவித்தார். .

இந்தியாவை போலவே, சீனா தரப்பில் பலத்த சேதம் அடைந்ததாக இந்திய அதிகாரிகள் கூறினாலும், அதை இன்னும் சீன அரசு உறுதிப்படுத்தவோ, மறுக்கவோ இல்லை.

இந்த நிலையில், எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில் ஆயுதங்களின்றி சென்ற இந்திய படையினரை கொல்ல சீனாவுக்கு எவ்வளவு துணிச்சல் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தமது ட்விட்டர் பக்கம் வாயிலாக கேள்வி எழுப்பியிருந்தார்.

ட்விட்டரில் பதில் தரும் அமைச்சர்

அதற்கு ட்விட்டர் வாயிலாகவே பதில் அளித்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், எல்லை சாவடிகளை விட்டு செல்லும்போது இந்திய படையினர் எப்போதும் ஆயுதங்களுடனேயே செல்வார்கள் என்றும் சம்பவம் நடந்த 15-ஆம் தேதியும் அவ்வாறே இந்திய வீரர்கள் சென்றதாகவும் கூறியிருந்தார்.

மேலும், நீண்ட கால நடைமுறைப்படி, அதாவது 1996-ஆம் ஆண்டு மற்றும் 2005-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட உடன்பாடுகளின்படி, எல்லையில் இரு தரப்பினும் மோதிக்கொள்ள நேர்ந்தால் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய மாட்டோம் என குறிப்பிடப்பட்டுள்ளதையும் இந்திய அமைச்சர் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இது தொடர்பான விரிவான தகவல்களை இந்திய தரப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடாத நிலையில், சம்பவத்துக்குப் பிந்தைய ஜூன் 16,17,18,19 ஆகிய நாட்களில் தினமும் சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ட்செள லிஜியான் தமது செய்தியாளர் சந்திப்பின்போது, புதிய, புதிய தகவல்களை வெளியிட்டு வருகிறார். அதில் கடைசியாக வெள்ளிக்கிழமை, இரு தரப்பு வீரர்களின் மோதல் சம்பவங்களின் தொகுப்பை அவர் வெளியிட்டிருப்பதாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், எந்தவொரு கட்டத்திலும், சீன தரப்பு சேதத்தையோ, உயிரிழப்புகள் குறித்தோ அவர் ஒரு வார்த்தையை கூட பதிவு செய்யவில்லை.

சீன வெளியுறவு அமைச்சக செய்தியாளர் சந்திப்பின் கல்வான் பள்ளத்தாக்கு சம்பவம் தொடர்பான முழு விவரத்தை டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான சீன தூதர் சூன் வெய்டோங், தமது தூதரகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் முகப்புப் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »