Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): “அமெரிக்காவில் இரண்டு கோடி பேர் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கலாம்” மற்றும் பிற செய்திகள்

அமெரிக்காவில் குறைந்தது இரண்டு கோடி மக்களுக்கு ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என்று அந்த நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள புதிய மதிப்பீட்டின் மூலம் தெரியவந்துள்ளது.

அதாவது, அமெரிக்காவில் தற்போது கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள 24 லட்சத்தை விட உண்மையான பாதிப்பு பத்து மடங்கு அதிகமாக இருக்கும் என்று அந்த நாட்டின் நோய்க்கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக உயர்ந்து வருவதால் அங்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த முடக்க நிலை தளர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தகவல் வெளிவந்துள்ளது.

சமீபத்திய நிலவரத்தின்படி, அமெரிக்காவில் இதுவரை 24 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மேற்குப்பகுதிகளிலுள்ள மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்து வருவது அங்கு கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவில் வரும் அக்டோபர் மாதத்திற்குள் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,80,000ஆக அதிகரிக்க கூடும் என்று வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒருவேளை 95 சதவீத அமெரிக்கர்கள் முகக்கவசங்களை அணியும் பட்சத்தில் இந்த உயிரிழப்பு எண்ணிக்கையை 1,46,000ஆக கட்டுப்படுத்த முடியுமென்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசிலில் ஒரே வாரத்தில் முடக்கப்பட்ட ‘வாட்சாப் பே’ – இந்தியாவில் கால்பதிப்பது சாத்தியமா?

இந்தியாவில் அலைபேசி வழி பணப்பரிமாற்ற சந்தையில் கோலோச்சி வரும் பே டிஎம், கூகுள் பே உள்ளிட்டவற்றிற்கு போட்டியாக வர இரண்டு ஆண்டுகளாக முயற்சி செய்தும் பலனளிக்காத நிலையில், வாட்சாப் பே முதல் முறையாக கடந்த வாரம் பிரேசிலில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், ஒரே வாரத்தில் ‘வாட்சாப் பே’ சேவையை உடனடியாக நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட வணிக வங்கிகளுக்கு அந்த நாட்டின் மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது.

இணையத்தில் புதிய தேடுபொருளாக உருவாகியுள்ள இந்த விவகாரத்தின் பின்னணி, இந்தியாவில் வாட்சாப் பே அறிமுகமாவதில் உள்ள முட்டுக்கட்டை மற்றும் ஃபேஸ்புக் – ரிலையன்ஸ் இடையிலான வர்த்தக உறவு இதில் செலுத்தவுள்ள தாக்கம் குறித்தும் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

விரிவாக படிக்க: பிரேசிலில் ஒரே வாரத்தில் முடக்கப்பட்ட ‘வாட்சாப் பே’ – இந்தியாவில் கால்பதிப்பது சாத்தியமா?

ஊரடங்கு காலத்தில் காவல்துறையின் அத்துமீறல்கள் அதிகரிக்கிறதா?

சாத்தான் குளத்தில் கடையை கூடுதல் நேரம் திறந்திருந்ததற்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட தந்தை – மகன் கொல்லப்பட்ட சம்பவம், கொரோனாவுக்கான ஊரடங்கு காலத்தில் காவல்துறை தனது அதிகாரத்தைக் கூடுதலாகப் பயன்படுத்துகிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விரிவாக படிக்க: சாத்தான்குளம்: ஊரடங்கு காலத்தில் காவல்துறையின் அத்துமீறல்கள் அதிகரிக்கிறதா?

விளாடிமிர் புதின் ரஷ்ய அதிபராக வாழ்நாள் முழுக்க நீடிப்பாரா?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மேலும் இரண்டு பதவிக் காலங்கள் அதிபர் பதவியில் நீடிப்பதற்கு வழிவகை செய்யும் அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மீதான வாக்கெடுப்பில் ரஷ்ய மக்கள் நேற்று வாக்களிக்க தொடங்கியுள்ளனர்.

சுமார் 11 கோடி மக்கள் இதில் வாக்களிப்பார்கள்.

ஒருவேளை இந்த வாக்கெடுப்பு வெற்றி பெற்றால் 2024 ஆண்டில் பதவிக்காலம் முடியும் அதிபர் புதின், ஆறு ஆண்டுகள் கொண்ட மேலும் இரண்டு பதவிக் காலங்களில், அதாவது 2036ஆம் ஆண்டு வரை அதிபர் பதவியில் நீடிக்க முடியும்.

விரிவாக படிக்க: விளாடிமிர் புதின் ரஷ்ய அதிபராக வாழ்நாள் முழுக்க நீடிப்பாரா?

இந்தியாவில் புதிய மருந்துக்கான ஒப்புதல் பெறும் வழிமுறைகள் என்னென்ன?

யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் ‘கொரோனில்’ மற்றும் ‘சுவாசரி’ என்னும் இரு மருந்துகளை வெளியிட்டு, இவை கோவிட்-19 நோய்த் தொற்றுக்கான ஆயுர்வேத மருந்து என செவ்வாயன்று அறிவித்தது.

கோவிட் -19க்கு சிகிச்சையளிக்க இந்த மருந்துகள் உகந்தவை என்று பதஞ்சலி உறுதிகூறியது. இந்த மருந்துகளை மருத்துவ ரீதியில் பரிசோதனை செய்துள்ளதாகவும், இது கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு நூறு சதவீதம் சாதகமான விளைவைக் கொடுக்கும் என்றும் பதஞ்சலி நம்பிக்கையளித்தது.

விரிவாக படிக்க: இந்தியாவில் புதிய மருந்துக்கான ஒப்புதல் பெறும் வழிமுறைகள் என்னென்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »