Press "Enter" to skip to content

ஐக்கிய அரபு அமீரகம்: ஜூலை 1 முதல் நாடு திரும்ப அனுமதி; வழிமுறைகள் வெளியீடு

கொரோனா காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள ஐக்கிய அரபு அமீர நாட்டினர் ஜூலை 1-ம் தேதி முதல் நாடு திரும்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணம் செய்பவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய அவரச நிலை மற்றும் பேரழிவு மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது.

விமானம் கிளம்புவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பு பயணிகள் கொரோனா பரிசோதனை எடுக்க வேண்டும் என்றும், அதில் அவர்களுக்கு கொரோனா இல்லை என்ற முடிவு வந்தால் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன வழிமுறைகள்?

ஐக்கிய அரபு அமீரகத்தால் பரிந்துரைக்கப்பட்ட 17 நாடுகளில் 106 நகரங்களில் உள்ள பரிசோதனை மையங்களில் மட்டுமே பயணிகள் பரிசோதனை செய்ய வேண்டும்.

பரிந்துரைக்கப்பட்ட பரிசோதனை மையங்கள் இல்லாத நாடுகளில் இருந்து வருபவர்கள், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்த உடன் பரிசோதனை செய்யப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் செலவுகளை சம்பந்தபட்ட நபர்களே முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அதே சமயம், வெளி நாடுகளில் உள்ள தங்களது பணியாளர்களை திரும்ப அழைத்துக்கொள்ளும் நிறுவனங்கள் இந்த செலவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தனிமைப்படுத்தப்படும் பயணிகளை அரசு ஊழியர்கள் கண்காணிக்க, ஐக்கிய அரபு அமீரக அரசு குறிப்பிடும் ஒரு செல்போன் செயலியையும் பயணிகள் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

இது குறித்த மேலதிக தகவல்களை smartservices.ica.gov.ae என்ற இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம் போன்ற வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது

பாகிஸ்தானில் இருந்து விமானங்கள் வர தடை

பாகிஸ்தானில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தானில் இருந்து வரும் விமானங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீர அரசால் பரிந்துரைக்கப்படும் கொரோனா தொற்று பரிசோதனை மையம் பாகிஸ்தானில் கண்டறியப்படும் வரை இந்த தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »