Press "Enter" to skip to content

ரத்தினக் கற்கள்: ஒரே இரவில் சுரங்க முதலாளி மில்லியனரானது எப்படி?

தான்சானியாவில் டான்சானைட் என்னும் ஒரு வகை ரத்தினக் கற்களை அதிகளவில் கண்டறிந்த சுரங்க முதலாளி ஒருவர், ஒரே இரவில் மில்லியனரான சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறிய அளவில் சுரங்கம் தூண்டும் பணிகளை செய்து வரும் சானினியூ லாய்ஜெர் என்ற அந்த நபர், தான் கண்டெடுத்த மொத்தம் 15 கிலோ எடை கொண்ட ரத்தினக் கற்களை அந்த நாட்டின் சுரங்க அமைச்சகத்துக்கு விற்றதில் 3.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 27 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

30க்கும் மேற்பட்ட குழந்தைகளின் தந்தையான லாய்ஜெர் இதுகுறித்து பிபிசியிடம் பேசியபோது “நாளைக்கு ஒரு பெரிய விருந்து இருக்கிறது” என்று தெரிவித்தார்.

டான்சானைட் ரக ரத்தினக் கற்கள் வடக்கு தான்சானியாவில் மட்டுமே கிடைக்கும். இவை பொதுவாக ஆபரணங்கள் செய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பூமியில் கிடைக்கக் கூடிய மிக அபூர்வமான ரத்தினக் கற்களில் ஒன்றாக இது உள்ளது. அடுத்த 20 ஆண்டுகளில் இந்த ரக கற்கள் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளதாக புவியியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

விலைமதிப்புமிக்க இந்தக் கற்களில் பச்சை, சிவப்பு, இளஞ்சிவப்பு மற்றும் நீலம் என பல வகையான நிறங்கள் இருப்பது தான் இவற்றின் சிறப்பம்சம்.

இதன் விலையும் அபூர்வத்தன்மையை பொருத்தே நிர்ணயிக்கப்படுகிறது. நிறம் எவ்வளவு தெளிவாக உள்ளதோ அதற்கேற்ப விலையும் அதிகமாகும். டான்சானைட் கற்கள் வடக்கு தான்சானியாவில் மட்டுமே கிடைக்கிறது.

கடந்த வாரம் தலா 9.2 மற்றும் 5.8 கிலோ எடையுள்ள இரண்டு டான்சானைட் கற்களை லாய்ஜெர் வெட்டி எடுத்தார். இந்த நிலையில், தான்சானியாவின் வடக்குப் பகுதியிலுள்ள மன்யாரா என்ற மாகாணத்தில் நடைபெற்ற ஏலத்தில் கடந்த புதன்கிழமை அந்த கற்களை லாய்ஜெர் விற்றுவிட்டார்.

இதற்கு முன்புவரை, தான்சான்யாவில் அதிகபட்சமாக 3.3 கிலோ எடையுள்ள டான்சானைட் கல் வெட்டி எடுக்கப்பட்டது தான் மிகப் பெரிய அளவாக இருந்து வந்தது.

இந்த தகவலை அறிந்த தன்சான்யாவின் அதிபர் ஜான் மகுஃபுலி, லாய்ஜெரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்தார்.

“இதுதான் சிறு அளவிலான சுரங்கத் தொழில் செய்வோருக்கான பயன். தான்சான்யா வளம் மிகுந்தது என்பதை இது நிரூபிக்கிறது” என்று அப்போது அதிபர் கூறினார்.

சுரங்கத் துறையில் தேசத்தின் நலன்களைப் பாதுகாப்பது மற்றும் அதில் இருந்து அரசின் வருவாயைப் பெருக்குவது உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்து கடந்த 2015 ஆம் ஆண்டு மகுஃபுலி ஆட்சிக்கு வந்தார்.

புதிய மில்லியனர் என்ன சொல்கிறார்?

52 வயதான லாய்ஜெருக்கு நான்கு மனைவிகள் உள்ளனர். தன் பசுக்களில் ஒன்றை வெட்டி, விருந்து வைத்து கொண்டாடப் போவதாக அவர் கூறுகிறார்.

“ஒரு பள்ளிக்கூடமும், அங்காடி வளாகமும் கட்ட நான் விரும்புகிறேன். என் வீட்டின் அருகே பள்ளிக்கூடம் கட்ட விரும்புகிறேன். பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப முடியாத ஏழைக் குடும்பங்கள் இங்கே நிறைய இருக்கின்றன” என்று அவர் கூறினார்.

“நான் படிக்கவில்லை. ஆனால் தொழில் நேர்த்தியுடன் விடயங்களை கையாள்வதை நான் விரும்புகிறேன். எனவே, என் பிள்ளைகள் தொழில்முறையில் வணிகத்தில் ஈடுபட வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த திடீர் பரிசு மழையால், தன்னுடைய வாழ்க்கை முறை மாறிவிடாது என்றும் தனது 2,000 பசுக்களை பராமரிக்கும் தொழிலை தொடர்ந்து செய்யப் போவதாகவும் அவர் கூறினார். புதிதாக வந்திருக்கும் பணம் காரணமாக, கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் தனக்குத் தேவையில்லை என்கிறார் அவர்.

“இங்கே போதிய பாதுகாப்பு உள்ளது. எந்தப் பிரச்சனையும் இருக்காது. எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இரவிலும் என்னால் வெளியில் செல்ல முடியும்.”

லாய்ஜெர் போன்ற சிறிய அளவிலான சுரங்க முதலாளிகள், அரசிடம் இருந்து உரிமம் பெற்று டான்சானைட் வெட்டுகிறார்கள். ஆனால் பெரிய நிறுவனங்களுக்குச் சொந்தமான சுரங்கங்களுக்கு அருகில் சட்டவிரோத சுரங்கங்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

மன்யாராவில் மேரெலானி சுரங்கப் பகுதியில் 24 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சுவர் எழுப்புமாறு 2017இல் ராணுவத்துக்கு அதிபர் முகுஃபுலி உத்தரவிட்டார். டான்சனைட் கிடைக்கும் ஒரே பகுதி அதுதான் என்று கருதப்படுகிறது.

ஓராண்டு கழித்து, சுரங்கத் துறை மூலம் அரசின் வருவாய் பெருகி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. சுவர் கட்டப்பட்டதால் தான் அரசின் வருவாய் பெருகியதாக கூறப்பட்டது என்று அங்குள்ள பிபிசி செய்தியாளர் சம்மி அவாமி கூறுகிறார். அபூர்வ ரத்தினக் கற்களால் ஒரே இரவில் மில்லியனரான சுரங்க முதலாளி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »