Press "Enter" to skip to content

காசெம் சுலேமானீ கொலை: டொனால்ட் டிரம்ப்பை கைது செய்ய உத்தரவிட்ட இரான்

இரான் ராணுவ தளபதி காசெம் சுலேமானீ கொல்லப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை கைது செய்ய ஆணை பிறப்பித்துள்ளது இரான்.

இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரும், அந்த நாட்டிலேயே அதிக அதிகாரம் பெற்ற ராணுவத் தளபதியாக விளங்கியவருமான ஜெனரல் காசெம் சுலேமானீ அமெரிக்கப் படையினரால் ஜனவரி மாதம் இராக்கில் ஜனவரி 3ஆம் தேதி கொல்லப்பட்டார்.

சுலேமானீ கொல்லப்பட்ட விவகாரத்தில் டிரம்ப் மற்றும் 35 பேர் மீது கொலை மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக இரான் விசாரணை அதிகாரி அலி அல்காசிமெஹர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இண்டெர்போலின் உதவி நாடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், இரானின் கோரிக்கையைக் கருத்தில் கொள்ளப் போவதில்லை என இண்டெர்போல் கூறியுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த இரானுக்கான அமெரிக்க சிறப்புப் பிரதிநிதி, “இதுவொரு பிரசார யுக்தி; இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை,” என தெரிவித்துள்ளார்.

காசெம் சுலேமானீ கொல்லப்பட்டது எப்படி?

இராக்கில் உள்ள அமெரிக்க படைகள், அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில் சுலேமானீயை பாக்தாத் சர்வதேச விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல் மூலம் கொன்றது.

அமெரிக்க ஹெலிகாப்டர்கள் தாக்குதல் நடத்தியதில், ஜெனரல் சுலேமானீ கொல்லப்பட்டதாக இரானின் புரட்சிகர காவல் படை கூறுகிறது.

சுலேமானீ மற்றும் இரான் ஆதரவு பெற்ற போராளிகள் இரண்டு கார்களில் பாக்தாத் விமான நிலையத்தில் இருந்து செல்லும்போது, அமெரிக்க ட்ரோனால் அவர்கள் தாக்கப்பட்டனர்.

இது தொடர்பாக பென்டகன் வெளியிட்ட அறிக்கையில், “அதிபரின் உத்தரவின் பேரில், வெளிநாட்டில் இருக்கும் அமெரிக்க பணியாளர்களை பாதுகாக்கும் நோக்கத்தில் ஜெனரல் காசெம் சுலேமானீயை கொல்லும் முடிவை அமெரிக்க ராணுவம் எடுத்தது,” என்று கூறப்பட்டது.

“இரான் எதிர்காலத்தில் தாக்குதல் நடத்துவதை தடுக்கும் நோக்கத்தோடு இது நடத்தப்பட்டது. அமெரிக்கர்கள் உலகில் எங்கிருந்தாலும், அவர்களை பாதுகாக்க அமெரிக்கா அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பின், இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது பதில் தாக்குதல் தொடுத்தது இரான்.

இரானின் அதி உயர் தலைவர் அயத்துல்லா காமேனி, “இந்த தாக்குதலை நடத்திய குற்றவாளிகளுக்குக் கடுமையான பழிவாங்கல் நடவடிக்கை காத்திருக்கிறது,” அந்த சமயத்தில் தெரிவித்திருந்தார்.

யார் இந்த காசெம் சுலேமானீ?

இரானும் அமெரிக்காவும் சித்தாந்த ரீதியாக எதிரிகளாக இருந்தாலும், இராக்கில் ஐ.எஸ் அமைப்பு நடத்திய தாக்குதல், இரு நாடுகளுக்கு இடையே மறைமுக தொடர்பை ஏற்படுத்தியது.

2001ஆம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் தாலிபன் அமைப்பை அகற்ற அமெரிக்காவுக்கு ராணுவப் புலனாய்வு உதவிகளை வழங்கியது இரான்.

மேலும், 2007ஆம் ஆண்டு, இராக்கின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த பேச்சுவார்த்தைக்காக, அமெரிக்கா மற்றும் இரான் நாடுகள் தங்கள் அதிகாரிகளை பாக்தாத்துக்கு அனுப்பின.

அப்போது இராக்கில் வகுப்புவாத வன்முறையை கட்டுப்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தார் அந்நாட்டின் பிரதமர் நூரி மலிகி.

இந்த விவகாரத்தில் முக்கியப் பங்காற்றியவர் காசெம் சுலேமானீ.

இரான் சொல்வது என்ன?

சுலேமானீ கொல்லப்பட்டது தொடர்பாக 36 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்கிறார் இரான் விசாரணை அதிகாரி அலி.

“இதில் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளும் அடங்குவர். இதில் முதன்மையானவர் அமெரிக்க அதிபர் டிரம்ப்,” என்று தெரிவிக்கிறார்.

டிரம்பின் அதிபர் பதவிக் காலம் முடிந்ததும் அவரை கைது செய்யக் கோருவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“இரான் நீதித்துறை இது தொடர்பாக குற்றச்சாட்டு அறிக்கையை தாக்கல் செய்யும். ட்ரோனை இயக்கியவர்களும் அடையாளம் காணப்படுவார்கள்,” என இரான் வெளியுறவு துறை துணை அமைச்சர் மோசென் பஹர்வெண்ட் கூறினார் என்கிறது இஸ்னா செய்தி முகமை.

தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை பெற்று தரும் வரை இரான் ஓயாது என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா கூறுவது என்ன?

அமெரிக்க சிறப்பு பிரதிநிதி ப்ரைன் ஹூக், “ அரசியல்தன்மை வாய்ந்த இந்த விவகாரத்தில் இண்டெர்போல் தலையிடாது என்றே கருதுகிறோம்,” என்று கூறி உள்ளார்.

அரசியல் தன்மை வாய்ந்தது இது. தேச பாதுகாப்புக்கோ அல்லது சர்வதேச அமைதி மற்றும் ஸ்திரதன்மைக்கோ எந்தவித தொடர்பும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இன்டெர்போல் கூறுவது என்ன?

பிரான்ஸ் லயான் நகரத்தில் இயங்குகிறது இன்டெர்போல். பிபிசியிடம் பேசிய அவர்கள், “இரானின் கோரிக்கையை கருத்தில் கொள்ளப் போவதில்லை,” என்று கூறினர்.

அரசியல், ராணுவம், மதம் மற்றும் இனம் சார்ந்த பிரச்சனைகளில் நாங்கள் தலையிடமாட்டோம். அது எங்கள் சட்டவிதிகளில் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »