Press "Enter" to skip to content

சீனா இயற்றிய ஹாங்காங் தொடர்பான சட்டம்: கண்டித்து தடைவிதிக்க அமெரிக்காவில் ஒப்புதல்

ஹாங்காங் தொடர்புடைய பாதுகாப்புச் சட்டம் ஒன்றை இயற்றியது சீனா. இதை உலக நாடுகள் பலவும் கண்டிக்கும் நிலையில் சீனாவின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து அதன் மீது தடைகள் விதிப்பதற்கு அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை ஒரு மனதாக ஒப்புதல் அளித்துள்ளது.

இத்தடைகளின் கீழ், சீனாவுடன் வணிகம் செய்யும் வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். ஆனால், பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியுள்ள இந்த தடைகள் செனட் ஒப்புதலைப் பெற்ற பிறகு அமெரிக்க அதிபர் டிரம்பின் கையெழுத்துக்கு அனுப்பப்படும்.

பிரிட்டன் ஆளுகையில் இருந்த ஹாங்காங் 1997ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கென பிரிட்டன், சீனா இரு நாடுகளுக்கு இடையில் கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி 1997 முதல் 50 ஆண்டுகளுக்கு ‘ஒரு நாடு, இரு அமைப்பு’ என்ற ஏற்பாடு நீடிக்கும். இந்த ஏற்பாட்டின்படி ஹாங்காங் 50 ஆண்டுகளுக்கு பல சுதந்திரங்களை அனுபவிக்கும்.

சீனா தற்போது இயற்றியுள்ள புதிய சட்டம் ஹாங்காங் 50 ஆண்டுகளுக்கு அனுபவிக்கவேண்டிய அந்த சுதந்திர உரிமைகளைப் பறிப்பதாக இருக்கும் என்கிறார்கள் விமர்சகர்கள்.

“இந்த சட்டம் கொடுமையானது. ஹாங்காங் மக்களை மொத்தமாக ஒடுக்குவது. உறுதியளிக்கப்பட்ட சுதந்திரத்தை நாசம் செய்வதை நோக்கமாக கொண்டது,” என்று அமெரிக்கப் பிரதிநிதிகள் சபைத் தலைவர் நான்சி பெலோசி கூறினார்.

சீனா இந்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளது 1985ம் ஆண்டின் சீன- பிரிட்டன் கூட்டுப் பிரகடனம் தெளிவாக, மோசமாக மீறப்படுவது ஆகும் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

இந்தக் கூட்டுப் பிரகடனத்தின்படி 1997ம் ஆண்டு ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அடுத்த 50 ஆண்டுகளுக்கு ஹாங்காங்குக்கு சில சுதந்திரங்கள் உத்தரவாதம் செய்யப்பட்டன. முப்பது லட்சம் ஹாங்காங் மக்களுக்கு வசிப்புரிமையும், பிறகு குடியுரிமையும் வழங்க முன்வந்தது பிரிட்டன்.

இந்த குடியுரிமை வழங்கும் திட்டத்தை முடக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சீனா வியாழக்கிழமை எச்சரித்தது.

பொருத்தமான நடவடிக்கைகளில் பிரிட்டன் ஒருதலைப்பட்சமாக மாற்றங்களை செய்தால் அதன் நிலையையும், வாக்குறுதிகளை மட்டுமல்ல, சர்வதேச சட்டங்கள் மற்றும், அடிப்படை விதிகளை அது மீறுவதாகப் பொருள் என்று பிரிட்டனில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

ஹாங்காங்கில் 2019ல் நடந்ததைப் போன்ற போராட்டங்கள் நடப்பதைத் தடுப்பதற்கு பாதுகாப்பு சட்டம் தேவை என்று வாதிடுகிறது சீனா.

மேற்கத்திய நாடுகள் சீனாவை கண்டித்தபோதும் கியூபா தலைமையில் 50 நாடுகள் ஐ.நா.வில் இந்த வாரம் சீனாவை ஆதரித்தன.

புதிய சட்டம் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது?

சீனாவின் புதிய சட்டம் நிறைவேறிய சில மணி நேரங்களிலேயே ஹாங்காங் போலீஸ் பலரை கைது செய்யத் தொடங்கியது.

ஹாங்காங் சுதந்திரத்துக்கு ஆதரவான கொடி வைத்திருந்த ஒருவர் உட்பட 10 பேர் இந்த சட்டத்தை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட ஒரு போராட்டத்தில் பங்கேற்ற 360 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதிய சட்டத்தின்படி சீனாவின் மத்திய அரசுக்கு எதிராகவும், ஹாங்காங் பிராந்திய அரசுக்கு எதிராகவும் வெறுப்பைத் தூண்டுவது குற்றமாகும்.

2019 போராட்டத்தில் நடந்தது போல பொதுப் போக்குவரத்து சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பது புதிய சட்டத்தின் கீழ் பயங்கரவாத நடவடிக்கையாக கருதப்படும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »