Press "Enter" to skip to content

ஜமால் கஷோக்ஜி கொலை: செளதியை சேர்ந்த 20 பேரிடம் விசாரணையை தொடங்கிய துருக்கி மற்றும் பிற செய்திகள்

பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டது தொடர்பாக செளதி அரேபியா நாட்டை சேர்ந்த 20 பேர் துருக்கி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

பிரபல பத்திரிகையாளரான கஷோக்ஜி சௌதி அரசு மீது விமர்சனங்களை வைத்து வந்தார். இவர் 2018-ம் அக்டோபர் 2-ம் தேதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நுழைந்த பின்னர் உயிருடன் வெளியே வரவில்லை. துணைத் தூதரகத்தின் உள்ளே வைத்து, ஜமால் கஷோக்ஜியை செளதி அரேபியாவைச் சேர்ந்த ஒரு குழு கொலை செய்தது.

தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் இரண்டு பேர், செளதி பட்டத்து இளவரசர் சல்மானின் முன்னாள் உதவியாளர்கள். தங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை இவர்கள் மறுக்கின்றனர்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களை தங்கள் நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற துருக்கியின் கோரிக்கையை முன்பு நிராகரித்த செளதி அரேபியா, கடந்த ஆண்டு இந்த கொலை தொடர்பாக எட்டு பேருக்கு தண்டனை வழங்கியது.

ஜமால் கஷோக்ஜி கொலையில் நேரடியாக ஈடுபட்டதாக 5 பேருக்கு மரண தண்டனையும், குற்றத்தை மறைத்த குற்றச்சாட்டில் மூன்று பேருக்குச் சிறை தண்டனையையும் செளதி அரேபியா விதித்தது.

யார் இந்த கஷோக்ஜி?

செளதி அரேபியாவை சேர்ந்த பிரபலமான பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி. செளதியின் விவகாரங்கள் குறித்து காத்திரமாக எழுதும் செய்தியாளராக பார்க்கப்பட்டார்.

ஒரு பத்திரிகையாளராக மட்டும் கசோக்ஜி இல்லை. பல தசாப்தங்களாக செளதி அரச குடும்பத்திற்கு நெருக்கமானவராக ஜமால் கஷோக்ஜி இருந்திருக்கிறார். அவர்களின் ஆலோசகராகவும் செயலாற்றி இருக்கிறார்.

அவர் செளதியை கடுமையாக விமர்சித்தார். அதன் முடி இளவரசரை ரஷ்ய அதிபர் புதினுடன் ஒப்பிட்டர். அதற்கு பின்பு அங்கிருந்து அமெரிக்கா சென்றார்.

இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்து வாஷிங்டன் போஸ்ட் இதழில் கஷோக்ஜி தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார்.

வாஷிங்டன் போஸ்டில் தாம் எழுதிய முதல் கட்டுரையில், செளதியில் இருந்தால் தாம் கைது செய்யப்படலாம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

சாத்தான்குளம் வழக்கில் தலைமறைவாக இருந்த காவலர் முத்துராஜ் கைது

சாத்தான்குளம் தந்தை – மகன் காவல் மரணம் தொடர்பான வழக்கில் இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று (வெள்ளிகிழமை) இரவு சாத்தான்குளம் காவலர் முத்துராஜ் கைது செய்யப்பட்டார்.

விரிவாக படிக்க:சாத்தான்குளம் வழக்கில் தலைமறைவாக இருந்த காவலர் முத்துராஜ் கைது

கோவையில் 8 வயது ஆண் யானை உயிரிழப்பு – கடந்த மூன்று மாதங்களில் 13 யானைகள் பலி

தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள கோவை வனக்கோட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் 12 யானைகள் உயிரிழந்துள்ளன. உடல்நலிவடைந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மருத்துவ சிகிச்சைப் பெற்று வந்த 8 வயது ஆண் யானையும் நேற்று உயிரிழந்துள்ளது.

விரிவாக படிக்க: கோவையில் 8 வயது ஆண் யானை உயிரிழப்பு – கடந்த மூன்று மாதங்களில் 13 யானைகள் பலி

இந்தியா – இலங்கை 2011 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் ஆட்ட நிர்ணயம்?

2011ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக உறுதிப்படுத்தப்படவில்லை என இலங்கை போலீஸார் தெரிவிக்கின்றனர்.

அதனால், இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவிக்கின்றார்.

விரிவாக படிக்க: இந்தியா – இலங்கை 2011 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் ஆட்ட நிர்ணயம்? – என்ன சொல்கிறது இலங்கை

களமிறங்கிய திருநங்கைகள்

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமுள்ள வடசென்னை பகுதியில் திருநங்கைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதோடு, தினமும் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களிடம் பேசி அவர்களின் உடல்நலன் குறித்து கேட்கும் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விரிவாக படிக்க: வடசென்னையில் கொரோனா விழிப்புணர்வு பணியில் களமிறங்கிய திருநங்கைகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »