Press "Enter" to skip to content

‘டிக்டாக் குறித்த எங்கள் நிலையில் மாற்றமில்லை’ – அமேசான் மற்றும் பிற செய்திகள்

அமேசான் நிறுவன பணியாளர்கள் தங்களது திறன்பேசியிலிருந்து காணொளி பகிர்வு செயலியான டிக்டாக்கை அகற்றுமாறு அந்த நிறுவனத்தின் தரப்பில் நேற்று மின்னஞ்சல் ஒன்று அனுப்பப்பட்டிருந்த நிலையில், அது தவறுதலாக அனுப்பப்பட்டுவிட்டதாக அமேசான் விளக்கம் அளித்துள்ளது.

டிக்டாக் செயலியில் “பாதுகாப்பு சர்ந்த பிரச்சனைகள்” இருப்பதாக கூறி நேற்று (ஜூன் 10) தனது நிறுவன பணியாளர்களுக்கு இதுதொடர்பாக மின்னஞ்சல் ஒன்று அமேசான் நிர்வாகத்தால் அனுப்பப்பட்டிருந்தது.

குறைந்த காலத்தில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனபட்டாளர்களை பெற்ற டிக்டாக் செயலி சீனாவை சேர்ந்த நிறுவனத்துக்கு சொந்தமானது என்பதால் அது பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட விவரங்களை சீன அரசுடன் பகிர்ந்துகொள்வதற்கு வாய்ப்புள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.

குறிப்பாக, சமீபத்தில் பாதுகாப்பு சார்ந்த பிரச்சனைகளை காரணம் காட்டி, டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடைவித்திருந்தது.

இந்த நிலையில், அமேசான் இதுகுறித்த மின்னஞ்சல் அனுப்பியது தொடர்பாக தங்களுக்கு முன்கூட்டியே தெரியாது என்றும், மேலும் அந்த நிறுவனம் எழுப்பியுள்ள கவலையை தங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் டிக்டாக் கருத்துத் தெரிவித்துள்ளது.

“எங்கள் பணியாளர்களில் சிலருக்கு இன்று காலை (வெள்ளிக்கிழமை) மின்னஞ்சல் ஒன்று பிழையாக அனுப்பப்பட்டது. டிக்டாக் தொடர்பாக எங்கள் கொள்கைகளில் இப்போதைக்கு எந்த மாற்றமும் இல்லை,” என்று அமேசான் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.

முன்னதாக, இதுதொடர்பாக அமேசான் தனது பணியாளர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் டிக்டாக் செயலியை கண்டிப்பாக திறன்பேசியில் இருந்து அகற்ற வேண்டுமென்று குறிப்பிடப்பட்டிருந்ததாக பல்வேறு செய்தி நிறுவனங்கள் தெரிவித்திருந்தன.

“பாதுகாப்பு சார்ந்த பிரச்சனைகளின் காரணமாக இனி அமேசான் நிறுவனத்தின் மின்னஞ்சல் பயன்படுத்தப்படும் திறன்பேசிகளில் டிக்டாக் செயலியை பயன்படுத்துவதற்கு அனுமதி இல்லை” என்று அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

“உங்களது திறன்பேசியில் டிக்டாக் செயலி இருந்தால், அதை கண்டிப்பாக ஜூலை 10ஆம் தேதிக்குள் நீக்க வேண்டும். இல்லையெனில் அந்த திறன்பேசியில் அமேசானின் மின்னஞ்சலை பயன்படுத்த முடியாது.”

விகாஸ் துபே: யார் இவர்? இவர் சுட்டுக்கொல்லப்பட்டது ஏன்?

கான்பூரில் எட்டு காவல்துறையினர் என்கவுண்டர் ஒன்றின்போது சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் நேற்று முன்தினம் (ஜூலை 9) மத்தியப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியாக கருதப்படும் விகாஸ் துபே நேற்று (வெள்ளிக்கிழமை) காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்தியா முழுவதும் விவாதப்பொருளாகியுள்ள இந்த என்கவுண்டர் குறித்தும், விகாஸ் துபேயின் பின்னணி குறித்தும் பார்க்கலாம்.

விரிவாக படிக்க: விகாஸ் துபே: யார் இவர்? இவர் சுட்டுக்கொல்லப்பட்டது ஏன்? இதுகுறித்து தலைவர்களின் கருத்து என்ன?

“வீட்டில் இருப்பதை விட காட்டில் இருப்பதுதான் எனக்கு சந்தோஷம்”

நீலகிரி மாவட்டத்தின் குன்னூர் பகுதியில் மனித நடமாட்டமில்லாத காடுகளுக்குள் தனியாக நடந்து சென்று பழங்குடிகளிடம் தபால்களை கொண்டு சேர்த்த சிவன், கடந்த மார்ச் மாதம் பணி ஓய்வு பெற்றார். இவரது சேவையை பாராட்டி ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாஹு ட்விட்டரில் பதிவு வெளியிட, சிவனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

விரிவாக படிக்க: தபால்காரர் சிவன் – “வீட்டில் இருப்பதை விட காட்டில் இருப்பதுதான் எனக்கு சந்தோஷம்” – ஒரு மெய்சிலிர்க்கும் அனுபவம்

தமிழ்நாட்டில் மின் கட்டண கணக்கீடு சலசலப்பை ஏற்படுத்தியிருப்பது ஏன்?

தமிழ்நாட்டில் ஊரடங்கிற்குப் பிந்தைய மின் கட்டணம் பெருமளவு அதிகரித்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு ஒன்றும் தொடரப்பட்டுள்ளது. உண்மையில் மின் கட்டண கணக்கீட்டில் நடந்தது என்ன?

விரிவாக படிக்க: தமிழ்நாட்டில் மின் கட்டண கணக்கீடு சலசலப்பை ஏற்படுத்தியிருப்பது ஏன்?

கொரோனா வைரஸ்: காற்று வழியாக பரவுவது என்றால் என்ன? கட்டுப்படுத்துவது எப்படி?

அண்மை காலம் வரை கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு, அந்த வைரஸ் இருக்கும் பரப்புகளுடனான தொடர்புகளே தொற்று பரவ ஒரே அறிவியல் ரீதியிலான காரணமாக உலக சுகாதார நிறுவனம் கருதி வந்தது.

இந்நிலையில், காற்றில் உள்ள மிகச் சிறிய பொருட்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவக்கூடும் என்பது தொடர்பாக சில அறிவியல் ஆதாரங்கள் வெளிவந்துள்ளதை உலக சுகாதார நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது.

விரிவாக படிக்க: கொரோனா வைரஸ்: காற்று வழியாக பரவுவது என்றால் என்ன? கட்டுப்படுத்துவது எப்படி?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »