Press "Enter" to skip to content

அமெரிக்க விசா விதிகளில் மாற்றம்: “எங்கள் கனவுகள் கலைந்துவிட்டன” – மன அழுத்ததில் இந்திய மாணவர்கள்

அபர்ணா ராமமூர்த்தி
பிபிசி தமிழ்

“தற்போது எங்கள் மனதில் இருப்பது பதற்றமும் குழப்பமும்தான். என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒன்றும் புரியவில்லை. நாங்கள் அமெரிக்கா வந்து படிப்பதற்கான முக்கிய காரணமே உலகத் தரத்திலான கல்வியை பெறவும், வெளிநாட்டு கலாசாரங்களை தெரிந்து கொள்ளவும்தான். எங்கள் கனவு கலைந்துவிட்டது போல இருக்கிறது.”

கடந்த ஆண்டு டிசம்பரில் சிவில் என்ஜினியரிங் பட்ட மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றவர் சென்னையை சேர்ந்த கிருஷ்ண செரித்.

தற்போது அமெரிக்காவில் தங்கிப்படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விதிகளில் அந்நாட்டு அரசு மாற்றம் கொண்டுவந்துள்ளதை அடுத்து, இவரது எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், அவர்கள் படிக்கும் பல்கலைக்கழக பாடப்பிரிவு முழுவதும் ஆன்லைன் கல்வி முறைக்கு மாறிவிட்டால், தொடர்ந்து அமெரிக்காவில் தங்கியிருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அந்நாடு சமீபத்தில் அறிவித்தது.

நேரடியாக கல்வி கற்கும்படி மாணவர்கள் தங்கள் பாடத்திட்டத்தை மாற்றி கொண்டால் மட்டுமே, அவர்கள் தொடர்ந்து அமெரிக்காவில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவர் என்று கூறப்பட்டது.

இந்த விதிகளை மீறி அங்கு தொடர்ந்து தங்கி இருப்பவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படுவர் என்று அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க துறை (ஐசிஇ) தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் முறையில் தற்போது வகுப்புகள் நடத்தி வருகின்றன.

“நான் அமெரிக்கா வந்து ஏழு மாதங்கள் ஆகின்றன. முதல் இரண்டு மாதங்கள் மட்டும்தான் கல்லூரிக்கு சென்றேன். அதற்கு பிறகு கொரோனா தொற்று அதிகரிக்க, என் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைனுக்கு மாற்றப்பட்டது” என்கிறார் கிருஷ்ண செரித்.

லட்சக்கணக்கில் செலவு செய்து பல்வேறு நாடுகளில் இருந்தும் மாணவர்கள் அமெரிக்காவிற்கு படிக்க செல்கிறார்கள். குறிப்பாக அங்கு படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.

இந்த கொரோனா தொற்று நெருக்கடியால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று தெரியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு, விசா விதிகளில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் பெரும் இடியாக விழுந்திருக்கிறது.

நியூ ஜெர்சி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் படித்து வரும் கிருஷ்ண செரித் இது குறித்து பிபிசி தமிழிடம் கூறுகையில், “அமெரிக்காவின் புதிய விசா விதிகள் எங்களை பெரும் குழப்பத்தில் தள்ளியுள்ளது. பல கனவுகளுடன் நான் அமெரிக்கா வந்தேன். முதல் இரண்டு மாதங்கள் எல்லாம் நன்றாக இருந்தது. அப்போதுதான் இந்த ஊரைப் புரிந்து கொண்டு வந்தேன். அமெரிக்காவின் கலாசாரம் தெரிய வந்தது. பல நாடுகளில் இருந்தும் வந்த மாணவர்களை இங்கு சந்தித்தேன். என் படிப்பு குறித்தும் எதிர்காலத்தில் தொழில் குறித்தும் இதுபோன்றுதான் கற்றுக்கொள்ள முடியும். அவர்களுடன் நெருங்கி பழக ஆரம்பித்த சிறிது காலத்தில் கொரோனா தொற்று பரவ ஆரம்பிக்க, அனைத்தும் தடைபட்டது” என்கிறார்.

நடுத்தர குடும்பப் பின்னணியை கொண்ட கிருஷ்ண செரித், தனது படிப்புக்காக லட்சக்கணக்கில் பணம் செலவழித்திருக்கிறார். இதை எப்படி திரும்பி எடுக்கப்போகிறோம் என்ற கவலையில் தான் இருப்பதாக அவர் கூறுகிறார்.

“வகுப்புகளை ஆன்லைனுக்கு மாற்றுவது தவிற வேறு வழியில்லை என்று புரிந்துகொள்ள முடிகிறது. ஏனெனில் ஒருவரின் பாதுகாப்புதான் இங்கு மிகவும் முக்கியம். ஆனால், மாணவர்களை திரும்பிப் போக சொல்வது பற்றி புரியவில்லை. கொரோனா தொற்று அதிகரிப்பதால், யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்று சொல்கிறார்கள். இப்போது இவர்களே எங்களை சொந்த ஊர்களுக்கு போக சொல்கிறார்கள். சர்வதேச விமானங்கள் கூட இயங்கவில்லை.”

எனினும் கிருஷ்ண செரித் படிக்கும் நியூ ஜெர்சி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, தற்போது மாணவர்களை திருப்பி அனுப்புவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாது என்று கூறியிருக்கிறது.

‘நாங்கள் லட்சக்கணக்கில் செலவழித்தது ஆன்லைனில் படிக்கவா?’

ஆன்லைன் வகுப்புகள் எந்த அளவிற்கு உதவிகரமாக இருக்கிறது என்று கேட்டதற்கு, இந்த வகுப்புகளால் பெரிதும் பயன் இருப்பது போன்று தெரியவில்லை. எப்படியும் நேரில் கற்றுக்கொள்வது போல வராது என்கிறார்.

“ஆசிரியர்களுடன் நேரில் கலந்துரையாடி பல விஷயங்களை கற்றுக்கொள்வது இனி சாத்தியமற்றதாகிவிட்டது.”

“அமெரிக்க மாணவர்களை விட, வெளிநாடுகளில் இருந்து வரும் மாணவர்கள் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிக கட்டணம் செலுத்துகிறோம். நாங்கள் எதிர்ப்பார்த்தது ஆன்லைன் வகுப்புகளை அல்ல. எனினும், என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டேன்” என்கிறார் கிருஷ்ண செரித்.

‘கலையும் கனவுகள்’

2018 ஜனவரி மாதம் கணிணி அறிவியல் பட்ட மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற குரு நிஷோக், ஒருசில மாதங்களுக்கு முன்புதான் அங்கு பணியில் சேர்ந்துள்ளார்.

ஆப்ஷனல் பிராக்டிகல் ட்ரைனிங் என்ற பயிற்சி திட்டத்தில் இருக்கும் இவர் இன்னும் மாணவர்களுக்கு எஃப்-1 விசாவில்தான் அங்கு வசிக்கிறார்.

அமெரிக்காவுக்கு பெரும்பாலானோர் வந்து படிப்பது, இங்கேயே வேலை பார்க்கத்தான் என்று கூறும் அவர், படிப்புக்கு ஆன செலவை அப்போதுதான் விரைவில் கட்ட முடியும் என்கிறார்.

“கல்லூரிக்கான விண்ணப்பக் கட்டணம், வங்கி இருப்பு, விமான டிக்கெட் செலவு, இங்கு வந்து தங்குவதற்கான செலவு, படிப்புக்கான கட்டணம் என 34 – 35 லட்சம் வரை செலவு செய்ய வேண்டியிருக்கிறது. படிப்பு முடிந்து கடந்த ஆண்டு இறுதியில்தான் வேலைக்கு சேர்ந்தேன். தற்போது வீட்டில் இருந்து வேலை செய்கிறேன். ஆனால், எப்போது என்ன நடக்கும் என்ற பயம் இருந்து கொண்டிருக்கிறது” என்று கூறுகிறார் குரு நிஷோக்.

கொரோனா தொற்றால் அமெரிக்காவில் இதுவைரை இல்லாத அளவு வேலைவாய்ப்பின்மை உயர்ந்திருக்கிறதாக கூறும் அவர், பல இடங்களில் ஆட்குறைப்பு நடப்பதாகவும் கூறுகிறார்.

குறிப்பாக புதிதாக வேலையில் சேர்ந்தவர்கள் இதற்கு இலக்காகலாம் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

“இங்கு வந்து படிக்கும் மாணவர்களுக்கு இந்தச் சூழல் மிகுந்த மன அழுத்தத்தை கொடுக்கலாம். பல கனவுகளுடன் வந்திருப்பார்கள். தற்போது அவர்கள் நாடு திரும்பினால், மீண்டும் விசா கிடைக்குமா, எப்போது வர முடியும், அதற்கான பணம் அவர்களிடம் இருக்குமா என்பதெல்லாம் கேள்விக்குறியே.”

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »