Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): 30 நொடிகளில் கண்டுபிடிக்கும் கருவியை உருவாக்கிய இஸ்ரேல்

பட மூலாதாரம், Getty Images

கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதை வெறும் 30 நொடிகளில் கண்டறியும் அதி நவீன கருவியொன்றை தயாரித்துள்ளதாக இஸ்ரேலை சேர்ந்த நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. சில நாடுகளில் நோய்த்தொற்று பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் மேலோங்குகிறது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அதிக அளவில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட ஆலோசனைகளை தொடக்கம் முதலே உலக சுகாதார நிறுவனம் வழங்கி வருகிறது.

இருப்பினும், பரிசோதனை கருவிகளின் உற்பத்தி, விலை, விநியோகம் உள்ளிட்ட காரணங்களால் இன்னமும் பல்வேறு நாடுகளில் அவற்றுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

Banner image reading 'more about coronavirus'
Banner

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், இஸ்ரேலை சேர்ந்த நானோசென்ட் என்னும் தனியார் நிறுவனம் ஒருவரது மூச்சை மட்டுமே அடிப்படையாக கொண்டு கோவிட்-19 நோய்த்தொற்றை கண்டறியும் கருவியை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

இஸ்ரேலில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இந்த கருவி 85 சதவீதம் சரியான முடிவுகளை அளிப்பது தெரியவந்துள்ளதாகவும், கொரோனாவுக்கு எதிரான களப்பணியில் “முன்னணியில் செயல்படும்” என்று எதிர்பார்க்கப்படும் இந்த கருவிக்கு அடுத்த சில மாதங்களில் ஒப்புதல் கிடைக்குமென்றும் அந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்த கருவி எப்படி செயல்படுகிறது?

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களுடனான தொடர்பு, அறிகுறிகள் உள்ளிட்ட கேள்விகள் பரிசோதனை மேற்கொள்பவர் வைத்துள்ள திறன்பேசியில் கேட்கப்படும்.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

அடுத்த கட்டத்தில், பரிசோதனைக்கு உட்படுபவர் மூக்கின் வாயிலாக மூச்சை உள்ளிழுத்துக்கொண்டு, அதை நிலைநிறுத்திய பின், மூக்கின் ஒரு துளையை மூடிக்கொண்டு மற்றொரு துளை வழியாக ஒரு குழாயில் மூச்சுவிடவேண்டும். அந்தக் குழாய் வழியாக செல்லும் மூச்சுக்காற்று “ஏர் ட்ராப்” என்னும் சிறிய பையை சென்றடையும்.

அந்த குழாய் பின்னர் “சென்ட் ரீடர்” என்னும் ஒரு சிறிய செவ்வக சாதனத்தில் சொருகப்படுகிறது. இது பையில் இருந்து காற்றை உறிஞ்சும்போது மென்மையாகச் சுழல்கிறது.

அடுத்த சில நொடிகளில் நோய்த்தொற்று பரிசோதனைக்கான முடிவு திறன்பேசியில் வெளிவருவதாக இந்த சோதனையை நேரில் சென்று மேற்கொண்டு பார்த்த ஏ.எஃப்.பி. செய்தி முகமையின் செய்தியாளர் கூறுகிறார்.

விலை என்ன?

வடக்கு இஸ்ரேலில் உள்ள நானோசென்ட்டின் தலைமையகத்திலுள்ள ஆராய்ச்சியாளர்கள் இந்த கருவியை மென்மேலும் மேம்படுத்தி வருகின்றனர். இந்த பரிசோதனை முறையானது “மூச்சுக்காற்றிலுள்ள வாசம் மற்றும் வாசத்தின் வகைகளை” நம்பியுள்ளது என்று இந்த நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான ஓரன் காவ்ரிலி கூறியதாக ஏ.எஃப்.பி. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலை சேர்ந்த ஏறக்குறைய 1,000 கோவிட்-19 நோயாளிகளின் சுவாசத்தை ஆராய்ந்த பின்னர், வைரஸுடன் தொடர்புடைய கண்டறியக்கூடிய வாசனையை தங்களது நிறுவனம் அடையாளம் காண முடிந்ததாக அவர் மேலும் கூறினார்.

“கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை கண்டறியும் தற்போதைய ஆய்வக அடிப்படையிலான பரிசோதனைகளுக்கு மாற்றாக இந்த கருவி இருக்க முடியாது. ஆனால், மிகப் பெரிய அளவில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய இடங்களில் இந்த கருவியை பயன்படுத்தி அதில் நோய்த்தொற்று உள்ளதாக உறுதிசெய்யப்படுபவர்களை முறைப்படி முழுபரிசோதனைக்கு உட்படுத்தலாம்.”

விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் தற்போது நடைமுறையிலுள்ள உடல்வெப்ப பரிசோதனை முறைகளுக்கு மாற்றாக கருதப்படும் இந்த கருவியை கொண்டு ஒருவருக்கு பரிசோதனை செய்ய சராசரியாக 700 ரூபாய் செலவாகும் என்று நானோசென்ட் கூறுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »