Press "Enter" to skip to content

அமெரிக்காவில் குழந்தை பெற்றுக்கொள்ள அடிமைப்படுத்தப்பட்ட கருப்பின பெண்கள்

பட மூலாதாரம், Reuters

அமெரிக்க நாடுகளுக்கு 16 முதல் 19-ம் நூற்றாண்டு வரை அடிமைகளாக அழைத்துவரப்பட்ட ஆப்பிரிக்க மக்கள் பற்றிய பல புதிய தகவல்களை மரபணு ஆய்வு ஒன்று வெளிக்கொண்டு வந்துள்ளது.

50,000 க்கும் மேற்பட்ட மக்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். அடிமை வணிகம், அமெரிக்கக் கண்டத்தில் உள்ள நாடுகளில் எத்தகைய ’’மரபணு தாக்கத்தை’’ ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்த கூடுதல் தகவல்களை அறிய இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

பாலியல் வல்லுறவு,துன்புறுத்தல், நோய் மற்றும் இனவெறி ஆகியவற்றின் விளைவுகளை இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

1515 முதல் 19-ம் நூற்றாண்டின் மத்தியில் வரை 1.25 கோடி ஆப்பிரிக்கர்கள் அமெரிக்க நாடுகளுக்கு அடிமைகளாக அழைத்து வரப்பட்டனர்.

அமெரிக்கக் கண்டத்திற்கு அழைத்து வரப்பட்டபோது, கிட்டதட்ட 10 லட்சம் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் வழியிலே இறந்துள்ளனர்.

இந்த மரபணு ஆய்வை நுகர்வோர் மரபியல் நிறுவனமான ’23அண்டுமீ’ நடத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் வசிக்கும் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த 30,000 பேர் இந்த ஆய்வில் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆய்வு முடிவுகள் ’அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் ஹ்யூமன் ஜெனெடிக்ஸ்’ பத்திரிகையில் வெளியிடப்பட்டது.

’’மரபணு முடிவுகளை, அடிமைக் கப்பல்களில் வந்தவர்களின் பட்டியலுடன் ஒப்பிடுவதே எங்கள் நோக்கம். இந்த மரபணுக்கள், அடிமை கப்பலில் வந்தவர்களுடன் ஒத்துப்போகிறதா அல்லது வித்தியாசமாக உள்ளதாக என்பதைப் பார்த்தோம்’’ என 23அண்டுமீ நிறுவனத்தின் மக்கள்தொகை மரபியலாளர் ஸ்டீவன் மைக்கேலேட்டி ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

ஆப்பிரிக்கக் கண்டத்தில் எங்கிருந்து இந்த மக்கள் அழைத்துவரப்பட்டனர், அமெரிக்கக் கண்டத்தில் எங்கு அடிமைகளாக நடத்தப்பட்டனர் என்பதற்கான வரலாற்று ஆவணங்களுடன், இவர்களது ஆய்வு முடிவுகள் ஒத்துப்போகின்றன.

ஆனால், ’’சில சந்தர்ப்பங்களில், எங்களது ஆய்வு முடிவுகள் உடன்படவில்லை’’ என்கிறார் ஸ்டீவன் மைக்கேலேட்டி.

தற்போது அமெரிக்க நாடுகளில் உள்ள பெரும்பாலான ஆப்பிரிக்க வம்சாவளிகளின் வேர், அங்கோலா மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசு நாடுகளில் அமைந்துள்ள பிரதேசங்களில் உள்ளன என்கிறது இந்த ஆய்வு.

ஆனால் ஆச்சரியமாக, அமெரிக்காவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் நைஜீரிய வம்சாவளிகள் அதிக அளவில் இருக்கின்றனர். இந்த பகுதியில் அடிமைப்படுத்தப்பட்டவர்கள் குறித்துப் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையையும், ஆய்வுத் தரவை ஒப்பிட்டபோது இது தெரியவந்தது. 1619 முதல் 1807 வரை காலனித்துவ நாடுகளுக்கு இடையே நடந்த அடிமை வர்த்தகம் இதற்குக் காரணமாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்கக் கண்டத்திற்கு அழைத்து வரப்பட்டபோது, கிட்டதட்ட 10 லட்சம் பேர் வழியிலே இறந்துள்ளன

பட மூலாதாரம், Getty Images

அட்லாண்டிக் கடல் பிரதேச நாடுகளில் அடிமை வணிகத்திற்கு பல தடைகள் அப்போது வந்துக்கொண்டிருந்தது. இந்த நிலையில், அடிமை வர்த்தகத்தைத் தொடர்ந்து நடத்த, பிரிட்டிஷ் கரீபியன் தீவுகளிலிருந்து நைஜீரிய மக்கள் மற்ற பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

அதேபோல், முதல் அடிமைகள் கப்பல் கிளம்பிய செனகல் மற்றும் காம்பியாவைச் சேர்ந்த வம்வாளிகள் தற்போது அமெரிக்காவில் குறைவாகவே இருப்பதைக் கண்டு ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியப்பட்டனர்.

இதற்கு இரண்டு காரணங்களை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் நெல் வயல்களில் பணியமர்த்தப்பட்டனர். அங்கு மலேரியா போன்ற பல ஆபத்தான நோய்கள் பரவலாக இருந்தன. இதனால் அவர்கள் இறந்திருக்கலாம். இரண்டாவது காரணம், கப்பல் பயணத்தின்போது பலர் உயிரிழந்திருக்கலாம்.

அமெரிக்க நாடுகளில் அடிமைப்படுத்தப்பட்டிருந்த கருப்பின பெண்கள் நடத்தப்பட்ட விதம், அங்கு மரபணு கலப்பினம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது என்கிறது இந்த ஆராய்ச்சி.

அடிமைப்படுத்தப்பட்டவர்களில் பெரும்பாலோனோர் ஆண்களாக இருந்தனர். குறைந்த எண்ணிக்கையிலிருந்த பெண்களை, அவர்களின் உரிமையாளர்கள் பாலியல் வன்கொடுமை செய்தனர் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

லத்தீன் அமெரிக்க நாடுகளில், மரபணு கலப்பு உருவாக்கத்தில் ஒரு ஆப்பிரிக்க ஆண் பங்காற்றியிருந்தால் அதற்கு இணையாக 17 ஆப்பிரிக்கப் பெண்கள் பங்காற்றியிருந்தனர். இதனால், அங்கு ஆப்பிரிக்க இன மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

ஆனால், கருப்பின மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை விரும்பாத பல லத்தீன் அமெரிக்க நாடுகள், ’’பிரன்க்யுகமெண்டோ’’ எனப்படும் வெள்ளையர்களாக ஆக்குதல் கொள்கையைக் கொண்டுவந்தன.

அதன்படி, இனப்பெருக்கம் மூலம் ஆப்பிரிக்கப் பூர்வீகத்தை நீர்த்துப்போகச் செய்யும் நோக்கத்துடன் ஐரோப்பிய வெள்ளை இன ஆண்களின் குடியேற்றத்திற்கு லத்தீன் அமெரிக்க நாடுகள் ஊக்குவித்தன.

அடிமை வணிகத்திற்கு தடை விதிக்கப்பட்ட பிறகு, அடிமையாக பணியாற்றும் மக்களின் எண்ணிக்கை குறையாமல் இருப்பதற்காக, அவர்கள் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளக் கட்டாயப்படுத்தப்பட்டனர் என இந்த ஆய்வு கூறுகிறது.

அமெரிக்காவில் அடிமையாக இருந்த பெண்கள், குழந்தைகளைப் பெற்றுக்கொண்டால் விடுவிக்கப்படுவர் என்ற வாக்குறுதிகள் தரப்பட்டதாகவும், இனங்கள் கலப்பதற்கு எதிராகக் கொள்கைகள் இருந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவில் சமீபத்தில் துவங்கிய ’கறுப்பினத்தவர்களின் உயிர்களும் முக்கியம்’ என்ற போராட்டம், காலனித்துவத்தின் மோசமான செயல்களையும், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் அடிமைப்படுத்தப்பட்டுக் கொடுமைப்படுத்தப்பட்டதையும் மீண்டும் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டி வருகிறது. காலனித்துவ கால அடிமை வர்த்தகர்களின் சிலைகளை உடைத்த போராட்டக்காரர்கள், அடிமைத்தனத்தின் அடையாளங்களை மகிமைப்படுத்தக்கூடாது எனக் கோரியுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »