Press "Enter" to skip to content

சீனா – அமெரிக்கா மோதல்: வரும் நாட்களில் சீன மென்பொருட்கள் மீது நடவடிக்கை – அமெரிக்கா அறிவுப்பு

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிக்கும் மென்பொருட்கள் என டிரம்ப் கருதும் சீன மென்பொருட்கள் மீது `வரும் நாட்களில்` நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பேயோ தெரிவித்துள்ளார்.

சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சிக்கு டிக் டாக் போன்ற செயலிகள் தகவல்கள் கொடுப்பதாக பாம்பேயோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் டிக் டாக்கை தடை செய்வதாக டிரம்ப் அறிவித்த பிறகு பாம்பேயோ இந்த கருத்தைத் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை டிக் டாக் நிறுவனம் மறுத்துள்ளது

மேலும் அமெரிக்காவில் வர்த்தகம் செய்யும் `எண்ணற்ற` நிறுவனங்கள் சீன அரசுக்குத் தகவல்களைக் கொடுப்பதாகவும் அவர் தெரிவித்தார். முகவரிகள், அலைப்பேசி எண்கள், முக வடிவ அடையாளங்கள் ஆகியவற்றை நிறுவனங்கள் தருவதாக பாம்பேயோ தெரிவித்தார்.

“அதிபர் டிரம்ப் போதுமான தகவல்களைத் தெரிவித்துவிட்டார். நாங்கள் இந்த பிரச்சனையை சரி செய்யப்போகிறோம்,” என ஃபாக்ஸ் நியூஸிடம் பாம்பேயோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் டிக் டாக்கிற்கு தடை விதிக்கும் ஆணையில் கையெழுத்திடப்போவதாக வெள்ளியன்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவில் டிக் டாக் நிறுவனம் மாதம் ஒன்றிற்கு 80 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது.

பொதுவாக 20 வயதுக்குட்பட்ட நபர்களால் பயன்படுத்தப்படும் இந்த செயலி பைட்டான்ஸ் என்னும் சீன நிறுவனத்திற்குச் சொந்தமானது.

இதற்கிடையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் டிக் டாக்கின் அமெரிக்க செயல்பாட்டை வாங்குவதற்கு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.

மைக்ரோசாஃப்ட்டின் தலைவர் சத்ய நாடெல்லா, டிக் டாக் நிறுவனத்தை வாங்குவது குறித்து அதிபர் டிரம்புடன் ஆலோசனை நடத்தியதாக தெரிவித்திருந்தார்.

சமீப நாட்களாக அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையேயான உறவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றை கையாண்ட விதம் குறித்து சீனா மீது டிரம்ப் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »